Description
மறுதலிப்புகளும்… முயற்சிகளும்.!
காலப் போக்கில்
புளிய மரங்களில்
புடலங்காய்கள் தொங்கக்கூடும்.
வேறோர் அச்சில்
பூமியை நகர்த்தி
பிரபஞ்சத்தின் புதுவிதி எழுதப்படும்.
1989ல் நான் வெளியிட்ட கவிதை நூலில் இடம் பெற்ற வரிகள்.
விஞ்ஞானம்… மெய்ஞானம்!
அறிவியல் …. அறவியல்!
இரண்டுமே ஆழமானவை. இவற்றில் மூழ்கிவிட்டால் கிடைக்கிற அனுபவங்கள் சுகமானவை.
அடிப்படையில் நான் அறிவியல் மாணவனில்லை. 45 மதிப்பெண்கள் எடுத்ததால் அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டவன்.
ஒன்று, மறுக்கப்படும்போது அதன்மீது பற்று அதிகரிக்கும்.
எதுவுமே நம்மால் பெற முடியாதது அல்ல என்கிற நம்பிக்கைவர மறுதலிப்புகள் தான் காரணமாகின்றன.
மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள ஒவ்வொருவரும் ஏதேதோ முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
நான் எழுத விரும்பினேன். தோன்றியதை எழுதினேன், படித்தேன், கிடைத்ததையெல்லாம் படித்தேன்.
தேயத்தேய சந்தனம் மணக்கும். எழுத எழுத எழுத்து சிறக்கும்.
அடிப்படையில் கவிஞனாக கவிதை நூல் வெளியிட்டு, பின்னர் பத்திரிகையாளனாக மாற வேண்டிய கட்டாயம் உருவானது.
தினமலர், முரசொலி, தினபூமி, மாலைமுரசு என நான் பணிபுரிந்த பத்திரிகைகள் ஒவ்வொன்றிலும் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டேன்.
பத்திரிகைகள் என்னை செழுமைப்படுத்தின.
மற்ற பத்திரிகைகளைக் காட்டிலும் தீக்கதிர் எனது எழுத்து வேட்கைக்கு அதிக ஊக்கம் அளித்தது.
எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுத சுதந்திரம் கிடைத்தது.
எனக்குப் பிடித்த அறிவியல் அறிவை இங்குதான் விரிவாக பெற முடிந்தது. அறிவியலுக்கென தனிப்பகுதி ஒன்றை ஒதுக்கி எழுத வாய்ப்பளித்தது.
தீக்கதிர் அதன் இணைப்பான வண்ணக்கதிர், செம்மலர் மாதஇதழ் ஆகியவற்றில் அறிவியல் மற்றும் அறிவியல் சார்ந்த மனவள கட்டுரைகளை எழுதினேன்.
இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கும் அறிவியல் விஷயங்களை படித்து அவற்றை தமிழில் எளிமையாக தர முயற்சி செய்தேன்.
தமிழில் அறிவியல் நூல்கள் அபூர்வமாகவே வெளியாகின்றன.
எனவே நான் எழுதிய அறிவியல் கட்டுரைகளை நூலாக வெளியிட விரும்பினேன்.
என்னுடைய இந்த விருப்பத்தை பால்ய நண்பன் ஜீவானந்தத்திடம் கூறினேன். அவன் அளித்த ஊக்கம் என்னை உற்சாகப்படுத்தியது.
எல்.ஐ.சி.யில் அதிகாரியாக பணிபுரியும் அவன் தன்னுடைய நண்பரான பேரின்பக்குமாரை அறிமுகப்படுத்தி, எனக்கு உதவும்படி கேட்டுக் கொண்டான்.
அவர் சற்றும் யோசிக்காமல் புத்தகம் வெளிவர முழுமையாக உதவ ஒப்புக் கொண்டார். அவர் இல்லையேல் இந்த நூல் இல்லை.
இப்படியொரு புத்தகம் வெளியிடும் முயற்சியை தெரிவித்த போது, தீக்கதிர் ஆசிரியர் வி.பரமேசுவரன், பொறுப்பாசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் உற்சாகப்படுத்தினர்.
நூலுக்கு அணிந்துரை வேண்டும் என கேட்டபோது, சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், புகழ்பெற்ற கதாசிரியருமான அவரது அணிந்துரையை இந்த நூலுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்.
இதுதான் எனது முதல் நூல். நானே வெளியிட்ட நூல். இந்த நூலை வெளியிடுவதற்கு முன்பே எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு அனுப்பினேன். வெளியீட்டு விழா முடிந்த அன்று ஆனந்தவிகடன் இதழில் இந்த நூலைப் பற்றி கற்றதும் பெற்றதும் பகுதியில் ஒரு பத்தி பாராட்டி எழுதி இருந்ததை என்னால் மறக்கவே முடியாது.
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.