(சென்னையைச் சேர்ந்த கே.சரத் ஹக்ஸார் என்ற தந்தை நேஹா போராவுக்கு ஆங்கிலத்தில் சொன்ன செய்தி…)
எனது திருமணத்தின்போது, ஒரே ஒரு குழந்தைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதிலும் அந்தக் குழந்தை பெண் குழந்தையாக இருக்க முன்னுரிமை கொடுத்திருந்தேன்.
நான் விரும்பியதே எனக்குக் கிடைத்தது. ஆம் ஒரு பெண் குழந்தையே பிறந்தது.
முதன்முதலில் அவளைக் கைகளில் ஏந்தியபோது, மனதுக்குள் ஒரு மௌனமான வாக்குறுதியை அவளுக்குக் கொடுத்தேன்…
“என் நேரம் முழுமையும் உனக்காகவே இருக்கும். யாருக்கும் அதில் இடமில்லை. நான் உன்னை கவனிக்க வேண்டும் என்று நீ காத்திருக்க வேண்டியது இருக்காது. ஆம் நான் உனக்காகவே வாழ்வேன். எனது எல்லாமும் உனக்கே உனக்குத்தான்.”
நான்கைந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களை நான் பார்த்திருக்கிறேன். பெற்றோர்கள் நாள் முழுக்க ஓடிக்கொண்டே இருப்பார்கள். அந்தக் குழந்தைகளுக்காக அவர்கள் ஓடினாலும், ஏதேனும் ஒரு குழந்தையை சரியாக கவனிக்க முடியாத நிலை இருக்கும்.
அதுமட்டும் இல்லை. நமது நாட்டின் மக்கள் தொகை மிக அதிகமாக இருப்பதையும், மக்கள் தொகை நெருக்கத்தால் இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது என்பதையும் உணர்ந்தேன். எனவேதான், ஒரு குழந்தை என்பது சரியான முடிவாகவும், பொறுப்பான செயலாகவும் எனக்குத் தோன்றியது. எனவே எனது முடிவில் எனக்கு எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை.
ஆனால் இந்த ஆண்டு, நான் நேஹா போராவைச் சந்தித்தேன்.
அவளுக்கு வயது 29. அவள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) முனைவர் பட்ட ஆய்வு (PhD) மாணவியாக இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல், உத்தரகாண்ட் மலைப்பகுதியில் உள்ள கதிமா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞராகவும் செயல்படுகிறார்.
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் எழுந்தபோது, தமக்கு அறிமுகம் கூட இல்லாத மாணவர்களுக்காக அவர் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டார். பல ஆண்டுகளாகப் படித்த மாணவர்களுக்காகவும், தங்கள் சேமிப்பு முழுவதையும் தங்கள் குழந்தைகளின் பயிற்சி வகுப்புகளுக்காகச் (கோச்சிங் கிளாஸ்களுக்கு) செலவிட்டு தோல்வி அடைந்த பெற்றோர்களுக்காக அவள் போராடினாள்.
அவள் 23 நாட்கள் சாப்பிடவில்லை. போராட்டத்தைத் தொடங்கியபோது அவளுடைய எடை 66 கிலோவாக இருந்தது; உண்ணாவிரத போராட்டத்தில் அவள் 7 கிலோவுக்கு மேல் எடை குறைந்தாள். உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியது. அவளுடைய ரத்த மாதிரிகளை ஒரு நாளைக்கு மூன்று முறை எடுத்து சோதிக்க வேண்டியிருந்தது.
இந்தச் செய்தியைப் படித்த அன்று இரவில் என்னால் தூங்க முடியவில்லை. அவளுடைய இடத்தில் எனது சொந்த மகளின் நிலையை கற்பனை செய்து பார்த்தேன்.
டெல்லியின் சுட்டெரிக்கும் சாலையில், மெலிந்த உடலோடு, சோர்வாக அமர்ந்திருப்பதையும்…. மருத்துவர் அவள் மணிக்கட்டைப் பிடித்துப் பரிசோதிப்பதையும்… அதை நேரில் பார்த்திருந்தால் நான் சும்மா இருந்திருக்க மாட்டேன். அவளிடம் அந்தப் போராட்டத்தை நிறுத்துமாறு கெஞ்சியிருப்பேன்.
ஆனால், நேஹாவோ, அவள் எடுத்துக்கொண்ட காரியம் முடியும் வரை உறுதியாக இருந்தாள். அந்தப் போராட்டம் முடிந்தபோது, தனது உடல் உணவை எப்படி உட்கொள்வது என்பதையே மறந்துவிட்டதாக அவள் கூறினாள். ஒரு குழந்தையைப் போல மீண்டும் அவள் சாப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்தது.
தனது உடல் பலவீனமாக இருந்த நிலையிலும், பீகாரில் கைது செய்யப்பட்ட 600-க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சந்திக்கச் சென்றாள். ஓய்வெடுக்க அவளுடைய வீட்டுக்குச் செல்லவில்லை. தனக்குத் துணையாக நின்றவர்களைச் சந்திக்கவே சென்றாள்.
நான் நிலத்தடி நீர் கண்டறியும் (dowser) பணியைச் செய்பவன். ஒவ்வொரு நாளும் நான் ஆற்றல் சார்ந்த பணிகளில் ஈடுபடுகிறேன். கோபம் என்பது ஒரு கனமான விஷயம் என்பதும், அது உள்ளுக்குள் எரித்துவிடும் என்பதும் எனக்குத் தெரியும்.
உணவின்றி, வெறும் கோபத்தை மட்டுமே வைத்துக்கொண்டு 23 நாட்கள் யாராலும் உயிர்வாழ முடியாது. மனம் முழுவதும் பிறர் மீது அன்பு நிறைந்திருந்தால் மட்டுமே அத்தனை நாட்கள் போராட முடியும்.
பிறகு, நேஹாவின் தந்தை ராணுவத்தில் இருந்ததாகவும், அதனால் அந்தக் குடும்பம் ஒரு பணி இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறிக்கொண்டே இருந்ததாகவும் நான் படித்தேன்.
என் மனைவியின் தந்தையும் ராணுவத்தில் பணியாற்றியவர். அவரை நான் ஒருபோதும் 'மாமனார்' என்று அழைப்பதில்லை; எனக்கு அவர் வெறும் 'பாப்பா' (அப்பா) தான்.
என் மனைவி 13 பள்ளிகளில் படித்தவர். நினைத்துப் பாருங்கள் பதின்மூன்று முறை புதிய பள்ளியில் முதல் நாளைச் சந்தித்து இருக்க வேண்டும். பதின்மூன்று முறை யாருக்கும் தன் பெயர் தெரியாத பிள்ளைகள் நிறைந்த வகுப்பறைக்குள் நுழைந்து படிப்பைத் தொடர்ந்திருக்க வேண்டும். 13 முறை திரும்பவும் பார்க்க முடியாத நண்பர்களிடம் விடைபெற்று விலகியிருக்க வேண்டும்.
ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் புன்னகைக்கவும், தங்கள் உடைமைகளை மூட்டை கட்டிக்கொண்டு புதியதொரு பயணத்தைத் தொடங்கவும் பழகிக்கொள்கிறார்கள். அது எவ்வளவு வலி தரும் என்பதை யாரும் அவர்களிடம் கேட்பதில்லை. அந்த மனவலிமையை என் மனைவியிடம் நான் தினமும் காண்கிறேன்.
நேஹாவிடமும் அதைக் கண்டேன்.
ராஞ்சியில், ஒரு நபர் அவள் முகத்தில் மையை வீசி அவளை 'தேசவிரோதி' என்று அழைத்தார். டெல்லியில் ஏற்கனவே பெல்லட் குண்டுகளையும் (pellets) தடியடிகளையும் எதிர்கொண்டவள் தான் என்றும், மை வீசுவதால் பயந்துவிட மாட்டேன் என்றும் அவள் கூறினாள்.
மை வீசப்பட்டால் கழுவிவிடலாம். ஆற்றல் சார்ந்த விஷயங்களில் (energy work), மற்றவர்கள் உங்கள் மீது வீசுவதை நீங்கள் உள்ளே வாங்கிக்கொண்டால் மட்டுமே அது உங்களோடு தங்கும் என்று சொல்வார்கள். 'பெண்டுலம்' (pendulum) போன்ற கருவிகளைப் பயன்படுத்தாமலே அவளுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கிறது.
அவளுடைய குடும்பத்தினர் அவளது இந்த நிலைப்பாட்டை ஏற்கவில்லை. வீட்டில் சண்டைகள் நடந்தன. ஆனால், அவள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, அவளது தாயார் ஜந்தர் மந்தருக்கு வந்தார்.
அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன பேசிக்கொண்டார்கள் என்று எனக்குத் தெரியாது. அது எனக்குத் தேவையும் இல்லை. நானும் ஒரு குழந்தையை பெற்றவன்தான். சாலையில் தன் குழந்தை பலவீனமாகவும் மெலிந்தும் காணப்பட்டாலும், உறுதியுடன் நின்றுகொண்டிருப்பதைப் பார்க்கும் ஒரு தாயின் உணர்வு எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தருணத்தில் எல்லா வாதங்களும் மறந்துபோகின்றன. 'இது என் குழந்தை' என்ற உணர்வு மட்டுமே எஞ்சியிருக்கிறது.
நேஹா இன்னும் தன் தந்தையிடம் பேசவில்லை என்று கூறினாள்.
எனக்கு அவரைத் தெரியாது. ஆனால் நானும் ஒரு தந்தைதான்; எங்களைப் போன்ற ஆண்களுக்குச் சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். அதனால், அவரால் அதை இன்னும் சொல்ல முடியவில்லை என்றால், அவருக்காக நான் சென்னையில் இருந்து அதைச் சொல்கிறேன்.
“மகளே, உன்னைப் பற்றி நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்போது போய் நன்றாகச் சாப்பிடு.”
இவை எல்லாவற்றுக்கும் இடையில், நான் சற்றும் எதிர்பாராத ஒரு எண்ணம் எனக்குள் தோன்றியது. எனக்கு இன்னொரு மகள் இருந்திருக்கக்கூடாதா என்று தோன்றியது - நேஹாவைப் போன்ற ஒரு மகள். இந்த எண்ணம் என் சொந்த மகளின் மதிப்பை எந்த வகையிலும் குறைத்துவிடாது. அவள்தான் என் உலகம், எப்போதும் அவள்தான் என் உலகம்.
ஆனால், நேஹா என்னை ஒரு கடினமான கேள்வியைக் கேட்டுக்கொள்ளத் தூண்டினாள். நம் வாழ்நாள் முழுவதையும் நம் குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், அவர்கள் வாழ்வில் முன்னேற உதவுவதிலும் மட்டுமே நாம் கழிக்கிறோம்.
யார் பின் தங்கிவிடுகிறார்கள் என்பதைத் திரும்பிப் பார்க்க நாம் அவர்களுக்கு எப்போதாவது கற்றுக்கொடுக்கிறோமா? ஒருவேளை அவர்கள் இன்னொருவருக்காகக் குரல் கொடுக்க முன்வந்தால், நேஹாவின் தாயார் செய்தது போல நாமும் அவர்களுக்குத் துணையாக நிற்போமா?
அல்லது அவர்களை வீட்டிற்குத் திரும்பி வந்து அமைதியாக இருக்கும்படி சொல்வோமா? அந்த ஒளி நம்மை அச்சுறுத்தும் தருணத்திலும் அதைப் பாதுகாப்பதே நமது கடமை.


