Description
தோழர் ஷப்பூர்ஜி சக்லத்வாலா 1927-ம் ஆண்டில் தம் தாய் நாடாகிய இந்திய நாட்டுக்கு வந்து போனார். அப்போது அவர் பிரிட்டிஷ் பார்லிமெண்டு சபையில் அங்கத்தினராக இருந்தார், அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்ற ஒரே பார்லிமெண்டு உறுப்பினர் அவர். இந்தியாவில் முக்கியமான பல நகரங்களுக்கு விஜயம் செய்தார். பம்பாய், கல்கத்தா, கராச்சி, சென்னை முதலிய நகரங்களில் அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்புகளில் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, காங்கிரஸ்காரர்கள் பலரும் கலந்துகொண்டனர். கராச்சி, கல்கத்தா, சென்னை நகர சபைகள் அவருக்கு வரவேற்பு பத்திரம் வாசித்தளித்து மரியாதை செலுத்தின. முக்கியமான தேசிய பத்திரிகைகள் அவரது சுற்றுப் பயணத்தைப் பற்றி தலையங்கப் பகுதிகளில் பாராட்டுரை எழுதின.
சென்னையில் அவர் நான்கு நாட்கள் இருந்து பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். அவர் அந் நிகழ்ச்சிகளில் ஆற்றிய சொற்பொழிவுகள் தொழிலாளர்கள் இடையிலும் தேசிய விடுதலை ஆர்வம் கொண்டவர்களிடையிலும் பெரியதொரு உற்சாகத்தை ஏற்படுத்தி ஊக்கமளித்தன. அவை சென்னைப் பத்திரிகைகளில் வெளியாயின. நமக்குக் கிடைத்தவை ‘ஹிந்து’ பத்திரிகையில் வெளியானவை. அவற்றைத் தமிழாக்கம் செய்து நூலின் பிற்பகுதியில் தந்துள்ளோம்,
நாடு வெள்ளையனாட்சியின் கீழிருந்த காலம் அது. நாட்டுத் தொழிலாளர்கள் பல பகுதிகளில் பொங்கி எழுந்து போராடிய காலம் அது. நாட்டிலே பல ஆலைகளில் சம்பள வெட்டும் ஆட்குறைப்பும் ஏற்பட்டு வந்து கொண்டிருந்த நிலைமை. இந்தப் போராட்டங்களில் தொழிலாளர்கள் வெள்ளையன் ஆட்சியின் அடக்குமுறையை எதிர்த்து நின்று போராடும் நிலைமை ஏற்பட்டது. எனவே வெள்ளையனாட்சிக் கெதிராகவே திரண்டு எழும் ஒரு சக்தியாக உருவெடுக்க துவங்கியது தொழிலாளிகளின் போராட்டம். இந்த சக்தியின் முன்னணி வீரர்களான கம்யூனிஸ்டுகளைத் தாக்கி கம்யூனிஸ்டுத் தலைவர்களைக் கைது செய்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். இந்தத் தாக்குதலில் 1928-ல் நடந்த தென் இந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தில் தோழர் சிங்காரவேலு, தோழர் முகுந்தலால் சர்க்கார் ஆகியோர் மற்ற தொழிலாளர்களுடன் கைது செய்யப்பட்டு கொடுந் தண்டனைக்கு ஆளாயினர். 1929 மார்ச்சு மாதத்தில் அகில இந்திய அளவில் முக்கியமான கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது மீரத் சதி வழக்கு என்று வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இவை சக்லத்வாலா சுற்றுப் பயணத்துக்குப் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள். எனினும் சக்லத்வாலா நடத்திய சுற்றுப்பயணம் இந்தப் போராட்ட உணர்ச்சிக்கும், எழுச்சிக்கும் ஊக்க மூட்டிய ஒரு பயணமாகும்.
அவரது இந்தியப் பயணத்தைப் பற்றிக் கூறி, சென்னையிலாற்றிய சொற்பொழிவுகளைக் கொண்ட ஒரு பிரசுரத்தை வெளியிடலாமெனத் தொடங்கியபோது, அவரது வாழ்வைப் பற்றியும் ஒரு சில விஷயங்களைச் சேகரித்து ஒரு சிறு நூலாகக் கொண்டு வரலாம் எனத் தோன்றியது. தோழர்களுடன் கலந்து பேசியபோது சிறியக் கம்யூனிஸ்டு கட்சியின் பொன் விழாக் காலத்தில் கொண்டு வரலாம் என்றும் ஒரு யோசனை பிறந்தது. அதற்கேற்ப இந்த நூல் தயாரிக்கப்பட்டது.
இந்த நூலை எழுதுவதற்குத் தூண்டியது தோழர் கே. முருகேசன் அவர்கள்; சக்லத்வாலாமீது 1936 மே மாதத்தில் நடந்த வழக்கு பற்றி அவர் தேடி வைத்திருந்த குறிப்பு. அந்த வழக்கு 1926-ல் நடந்த பொது வேலை நிறுத்தத் தகவல்களில் ஒன்று. அதைத் தவிர தோழர் சிங்காரவேலு பற்றிய தகவல்களை நாங்கள் இருவரும் தேடிச் சேகரிக்கும் போது சக்லத்வாலா 1927-ல் சென்னைக்கு வந்த சமயம் அவருக்கு மாநகராட்சி வரவேற்பளித்ததில் சிங்காரவேலு எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பற்றி சில தகவல்கள் கிடைத்தன. சக்லத்வாலா சென்னை வந்து நான்கு நாட்களில் பங்கு கொண்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய பத்திரிகைச் செய்திகள் சில தகவல்களைத் தந்தன. தொடர்ந்து அந்த ஓரிரு மாதப் பத்திரிகைகளைத் தேடிப் புரட்டிப் பார்த்ததில் மேலும் சில செய்திகள் கிடைத்தன. அவற்றைப் பற்றி எல்லாம் எழுதி வைத்திருந்த குறிப்புகளின் உதவியுடன் இந்தச் சிறு நூலை எழுதியுள்ளேன்.
ஸி.எஸ்.சுப்பிரமணியம்





Reviews
There are no reviews yet.