Description
தன்னம்பிக்கை…
விடா முயற்சி…
வாய்ப்பை பற்றிக் கொள்ளும் புத்திகூர்மை…
இவை மூன்றும் இருந்தால் எவ்வளவு உயரத்திற்கும் செல்ல முடியும் என்பதற்கு மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம்.
அவனுடைய தாய்மண் பிரான்ஸிடம் அடிமையான மூன்று மாதங்கள் கழித்து அவன் பிறந்தான்.
அடிமைப் படுத்திய தேசத்தின் நிதியுதவியிலேயே படித்தான். அந்த நாட்டு ராணுவத்திலேயே வேலைக்கும் சேர்ந்தான்.
எப்போதும் தனது தாய்மண்ணின் விடுதலை குறித்தே சிந்தித்தான். உலக சரித்திரத்தின் அத்தனை பக்கங்கங்களையும் சின்ன வயதிலிருந்தே படித்தான். சரித்திர நாயகர்கள், சாதனையாளர்களின் கதைகளை கரைத்துக் குடித்தான்.
கணிதம், அறிவியல், கலை, கலாச்சாரம் என அத்தனை துறைகளிலும் 18 வயதுக்குள் தெளிவு பெற்றான்.
அந்த நாளில் வாழ்ந்த மிகப்பெரிய கணித மேதைகளையே வியக்கவைக்கும் அளவுக்கு கணிதத்தில் ஆற்றல் பெற்றிருந்தான்.
யுத்த தந்திரங்களில் அவனுக்கிருந்த அறிவு பிரான்ஸ் ராணுவ அதிகாரிகளைக் கவர்ந்து இழுத்தது.
மிகச் சிறிய வயதிலேயே, ராணுவத்தின் முக்கிய பொறுப்புக்கு உயர்த்தப்பட்டான். இருந்தாலும், அப்போது பிரான்ஸில் ஏற்பட்ட புரட்சியைப் பயன்படுத்தி, தனது தாய்மண்ணை விடுவிக்கவே விரும்பினான்.
20 வயதில், தனது தாய்மண் கோர்ஸிகா தீவின் மக்கள் அவன் பின்னே அணிவகுத்தனர்.
மாபெரும் தேசத்தின் புரட்சிக்கு நடுவே சத்தமில்லாமல் தனது தீவுக்கு விடுதலை பெற்றுத் தந்தான்.
ஆம். அவனுடைய தன்னம்பிக்கையும், வாய்ப்பை உரிய சமயத்தில் பற்றிக் கொள்ளும் புத்திகூர்மையுமே அவனுக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது.
ஆனால், நாட்டை விட்டு வெளியேறிய தலைவர்கள் வந்து விடுதலையின் பலனை அனுபவித்தபோது அவர்களை எதிர்த்து அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
சொந்த நாட்டிலிருந்து குடும்பத்தோடு விரட்டப்பட்டாலும், அவன் சோர்ந்துவிடவில்லை.
எந்த நாட்டை எதிரியாக கருதினானோ, அந்த நாட்டையே தனது சொந்த நாடாக ஏற்றுக் கொண்டு அங்கு தனது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினான்.
அவனுடைய அறிவையும் வீரத்தையும் பிரான்ஸின் புரட்சியாளர்கள் ரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
இத்தாலியை பூர்வீகமாகக் கொண்டு, கோர்ஸிகாவில் குடியேறிய கூட்டத்தைச் சேர்ந்தவன் நெப்போலியன். இத்தாலி மொழிபேசிய அவன் இத்தாலியையே தனது வீரத்தால் ஜெயித்து பிரான்ஸுக்கு கீழ் கொண்டுவந்தான்.
அவனுடைய யுத்தம் அதுவரை வரலாறு கண்டிருந்த யுத்தங்களுக்கு மாறாக இருந்தது. அவன் முடியரசுகளின் கீழ் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த மக்களை விடுவிக்கவே அவனுடயை யுத்தம் பயன்பட்டது.
ஐரோப்பாவின் பெரும்பாலான பிரதேசங்களை வென்று குடியரசாக மாற்றியவன் அவன். பிரெஞ்சுப் புரட்சியின் பலன்களை ஐரோப்பா முழுவதும் பெறவேண்டும் என்று விரும்பினான்.
அதுவரை நாடுகளை வென்று தங்கள் குடையின் கீழ் கொண்டுவருவதே மன்னர்களின் வழக்கம். கைப்பற்றிய நாடுகளின் மக்களை அடிமைகளாக நடத்திய அவர்கள், அந்த நாடுகளின் வளங்களையும் கொள்ளையடிப்பார்கள்.
ஆனால், நெப்போலியன் ராணுவத்துடன் மட்டுமே சண்டையிட்டான். முடிந்த அளவுக்கு சண்டையிடுவதைத் தவிர்த்து யுத்த தந்திரங்களைப் பயன்படுத்தி சமரச உடன்படிக்கை ஏற்படுத்தினான்.
ஐரோப்பாவின் அனைத்துப் பேரரசுகளையும் அவன் வெற்றிகொண்டான். பிரான்ஸில் அமைதியை நிலைநாட்டினான். புரட்சியால் விளைந்த பலன்கள் திருப்தி அளிக்காததாலும், புரட்சியைக் காப்பாற்றும் ஆற்றல் அன்றைய தலைவர்களுக்கு இல்லாததாலும் பிரான்ஸின் சக்கரவர்த்தியாக தன்னை பிரகடனம் செய்துகொண்டான்.
அவனை பிரான்ஸ் வீரர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர். பிரான்ஸின் வல்லமையை பாதுகாக்க அவன்தான் சரியான நபர் என்று மக்கள் கொண்டாடினர்.
மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் நெப்போலியன் மிகவும் ரசிக்கத்தக்கவன். தொடக்கத்தில் காதல் பைத்தியமாக இருந்த நெப்போலியன் பிறகு எப்படி தெளிவாகிறான் என்பதே சுவாரசியமான கதை.
அது, நம்மை அவன்மீது இரக்கப்பட வைக்கும். பிறகு அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொஞ்சவைக்கும்.
அவனுடைய காதல் கடிதங்கள் இலக்கியத் தன்மை வாய்ந்தவை. போர்க்களத்தில் உயிரைத் துச்சமெனக் கருதி போராடும் இளைஞனுக்குள் இருந்து வெளிப்படும் இதமான காதல் உணர்வுகளும் அது புறக்கணிக்கப்பட்ட விதமும் நம்மை பதறவைக்கும்.
ஆனால், தனது வெற்றியையும் இலக்கையும் இழந்துவிடாமல் தொடர்ந்து போராடினான் நெப்போலியன்.
அந்த விடாமுயற்சிதான் அவனை மாவீரனாக்கியது.
பிரான்சுக்கு எதிராக அத்தனை பேரரசுகளும் ஒன்று சேர்ந்து அவனை தோற்கடித்தன. தோல்விக்குப் பிறகு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டான்.
பிரான்ஸ் சீரழிவதைக் கேள்விப்பட்டு பலத்த பாதுகாப்பையும் மீறி கடல்தாண்டி நாட்டுக்குத் திரும்பினான். அதன்பிறகும்கூட மக்கள் அவன் பின்னால் அணிவகுத்தனர்.
பிரிட்டன், பிரஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நான்கு பேரரசுகளின் ராணுவத்தை வாட்டர்லூ என்ற இடத்தில் ஒருசேர சந்தித்தான்.
அப்போதும் கூட அவன் கவுரமாகவே தோற்றான்.
தான் நேசித்த மக்களுக்காக தோற்பது தலைவனுக்கு கவுரவமானதுதானே!
அப்படிப்பட்ட ஒரு மாவீரனின் வரலாற்றை படிக்கும்படியான தமிழில் நூலாக தருவதில் பெருமை அடைகிறேன்.
சின்ன வயதிலேயே அவரையும் அறியாமல், எனக்குள் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்திய, திராவிட இயக்கத்தின் மூத்த பிரமுகர்களில் ஒருவரான, எனது சித்தப்பா எஸ். அழகுமலை அவர்களுக்கு நன்றி
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.