Description
இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரண்டு பழம்பெரும் தமிழ் இலக்கிய நூல்களுக்கு ஏற்கெனவே பல உரைநூல்கள் இருந்தாலும், இந்த உரைநூல் தனிச்சிறப்பு வாய்ந்தது.
சுமாராக கி.பி.நான்காம் நூற்றாண்டில் கபிலர் என்பவரால் எழுதப்பட்டது இன்னா நாற்பது. அதன்பிறகு, கி.பி.ஏழாம் நூற்றாண்டில் மதுரை பூதஞ்சேந்தனார் என்பவரால் எழுதப் பட்டது இனியவை நாற்பது.
இந்த இரண்டு தனித்தனி காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல்களுக்கும் இதுவரை எத்தனையோ உரைகள் எழுதப் பட்டுள்ளன. இந்நிலையில்தான், தென்கொரியாவில் பணிபுரியும் நண்பர் சகாய டர்சியூஸ் பீ இன்னா நாற்பது பாடல் ஒன்றுக்கு புதிய பாணியில் உரை எழுதியிருந்தார்.
நக்கீரனில் பணிபுரியும் சமயத்திலேயே அவருடன் எனக்குத் தொடர்பு உண்டு. முகநூலில் அவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடலாமே என்று யோசனை கூறினேன். அதையடுத்து, எனது சிபி பதிப்பகத்தின் சார்பில் சிதறல்கள் என்று கவிதை நூலை வெளியிட்டோம்.
அந்த நூலைத் தொடர்ந்து திராவிடம் ஓர் சொல் ஆய்வு என்ற ஆய்வுக் கட்டுரையை தக்க ஆதாரங்களுடன் எழுதி வெளியிட்டார்.
பின்னர், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் வழியாக திருக்குறள், மணிமேகலை ஆகிய தமிழ் இலக்கியங்களை கொரியா மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.
2008 ஆம் ஆண்டு தென்கொரியாவில் மென்பொருள் ஆராய்ச்சியாளராக சேர்ந்த இவர், கொரியா மொழியில் அந்த அளவுக்கு கற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் கற்ற இவர், ஆங்கிலம் மற்றும் கொரியா மொழிகளிலும் புலமை பெற்றிருக்கிறார்.
அந்த வகையில்தான் தாய்மொழி தமிழுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க ஆர்வம் கொண்டிருக்கிறார். தன்னால் இயன்ற அளவுக்கு தமிழ் – கொரியா கலாச்சாரம் தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் மொழிக்கான பங்களிப்புகளில் ஒன்றாகத்தான் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது என்ற இரண்டு தமிழ் இலக்கியங்களுக்கும் உரை எழுதியுள்ளார். தற்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் இவற்றின் கருத்துகளை இன்றைய தலைமுறைக்கு விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.
இரண்டும் தனித்தனி நூல்களாக இருந்தாலும், அவற்றை ஒரே நூலாக வெளியிட சிபி பதிப்பகம் விரும்பியது. இதன்மூலம் ஒரே சமயத்தில் துன்பம் தரக்கூடிய 164 செய்யக்கூடாத செயல்களையும், 124 இன்பம் தரக்கூடிய செயல்களையும் ஒரே சமயத்தில் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும் என்று நினைத்தோம்.
இன்னா நாற்பது நூலில் பாடலுக்கு நான்கு துன்பம் தரும் செயல்கள் இடம்பெற்றன. இனியவை நாற்பது நூலில், நான்கு பாடல்களைத் தவிர மற்றவற்றில் மூன்று இனிய செயல்கள் மட்டுமே இடம்பெற்றன.
இன்னா நாற்பதில் உள்ள 164 கூடா செயல்களை செய்யாமல் தவிர்த்து வாழ்ந்தாலும், இனியவை நாற்பதில் உள்ள 124 இனிய செயல்களை கடைப்பிடித்து வாழ்ந்தாலும் மனிதகுலம் செழித்து வாழும் என்பதே இந்த நூல்களின் மையக்கருத்து.
தென்கொரியாவில் வசித்தாலும் நூலாசிரியர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ அவர்களின் இந்த தமிழ் பங்களிப்பு போற்றத்தக்கது. அவருடைய இந்தப் பணி தொடரட்டும் என்று வாழ்த்துகிறோம்.
-ஆதனூர் சோழன்
பதிப்பாளர்





Reviews
There are no reviews yet.