Description
இந்தியாவில் தோன்றிய தனித்துவம் கொண்ட மார்க்சிய அறிஞர்களுள் ஒருவர். பண்டைக்கால இந்தியா குறித்து அறிவியல் பூர்வமான புரிதல் வருவதற்கு மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்து விளக்கிய ஆளுமைகளான டிடி. கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரோமிலா தாப்பர் ஆகியோரோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியவர். ‘இந்திய தத்துவம்‘ என்பது தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் சிறப்புப் புலம்.
கல்கத்தா பல்கலைக் கழகத்தில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், எஸ்.என்.தாஸ் குப்தா ஆகிய இரு பேரறிஞர்களிடம் பயின்றவர் டிபி.சட்டோபாத்யாயா. தனது இளங்கலை, முதுகலைப் படிப்பில் பல்கலைக் கழகத்தின் முதல் மாணவராகத் தேறிப் பின் தன் ஆய்வுகளைத் தொடர்ந்த அவர், தனது ஆசிரியர்களின் கருத்துகளிலிருந்து விலகி தனித்துவமும், துணிச்சலும், சமரசமற்ற அறிவியல் பூர்வமானதுமான கருத்துகளுக்கு வந்து சேர்ந்தார். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் 20 ஆண்டுகாலம் பணிபுரிந்த அவர், பின்னர் பல்கலைக் கழக மானியக் குழுவின் வருகைப் பேராசிரியராக கல்கத்தா, ஆந்திரா, புனே பல்கலைக் கழகங்களில் பணியாற்றினார்; இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், இந்திய தத்துவ ஆய்வுக் கழகம், தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு கல்விக் கழகம் ஆகியவற்றிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
தனது ஆய்வுகளின் மூலம் மார்க்சியத்தை வந்தடைந்த டி.பி.சட்டோபாத்யாயா, தான் ஏற்றுக் கொண்ட சித்தாந்தத்திலும், கருத்துகளிலும் இறுதி வரை உறுதியாக இருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1944 ஆம் ஆண்டு உறுப்பினரான அவர் தனது மரணம் வரை கட்சியில் உறுப்பினராக தொடர்ந்தார். எந்தவிதமான குறுகிய வறட்டுவாதமோ, குறுங்குழு வாதமோ, அண்டாதவராக இருந்த டி.பி. சட்டோபாத்யாயா கட்சி எல்லை களைக் கடந்து சகல இடதுசாரிகளாலும் பெரிதும் மதிக்கப் படுபவராகவும் நேசிக்கப்படுபவராகவும் இருந்தார். அவரும் அதே உணர்வுகளுடன் அவர்களிடம் பழகுபவராக இருந்தார்.
அவரும் அவரது மனைவி அலக்க மஜும்தார் சட்டோபாத்யாயா (Alaka Majumder Chattopadhyaya (1926–1998) (சிறந்த ‘திபெத்’ ஆய்வாளர்) அவர்களும், எங்கிருந்தாலும் அவரை நாடி வரும் தோழர்களுக்கு அவர்களது இல்லத்தின் கதவுகளை அகலத் திறந்தே வைத்து இருந்தனர்.
பல்வேறுபட்ட வாழ்நிலைகளில் இருந்த அனைவருடனும் அன்புடன் பழகும் தன்மையராகத் தனது இறுதி நாள் வரை இருந்துள்ளார்.
ஆனால் அவரது ஆய்வுகள், எந்தவித சமரசமும் இல்லாத அறிவியலின் காத்திரமும், கறார் தன்மையும் கொண்டவையாக இருக்கின்றன. தத்துவ அறிஞர்தான் என்றாலும் நடைமுறை உலகு குறித்த சிந்தனையற்று ‘இல்லாத கருப்புப் பூனையை இருட்டறையில்’ தேடுபவராக அவர் என்றும் இருந்ததில்லை. அவரின் புகழ் பெற்ற நூல்களில்’ இந்திய நாத்திகமும் (Indian Atheism) ஒன்று. இந்நூலை வாசகர்களுக்கு வழங்குவதில் சிபி பதிப்பகம் பெருமிதம் அடைகிறது.





Reviews
There are no reviews yet.