கடலிலிருந்து வீசிய ஈரித்த குளிர் காற்று கரையில் மோதிய அலைகளது ஓசையின் சிந்தனை நிறைந்த இசையையும் கரையோரப் புதர்களின் சலசலப்பையும் ஸ்தெப்பி வெளியில் பரப்பியது. சில வேளைகளில் காற்றின் வீச்சுக்கள் சுருக்கம் விழுந்த மஞ்சள் இலைகளை வாரி வந்து நெருப்பில் போட்டுத் தழலை மூண்டெரியச் செய்தன. அப்போது எங்களைச் சூழ்ந்திருந்த இலையுதிர் கால இரவின் இருட்டு திடுக்கிட்டு, மிரட்சியுடன் நகர்ந்தது. இடப்புறம் எல்லையற்ற ஸ்தெப்பி வெளியும் வலப்புறம் எல்லையற்ற கடலும் எனக்கு நேர் எதிரே ஜிப்ஸிக் கிழவன் மகார் சுத்ராவின் உருவமும் கணப்போது தோற்றம் அளித்தன. எங்களுக்கு ஒரு ஐம்பது அடி தூரத்தில் இருந்த தன் ஜிப்ஸி முகாமின் குதிரைகளை அவன் காவல் காத்துக் கொண்டிருந்தான்.
சில்லிடும் காற்று அலைகள் சட்டையை விரித்து அவனுடைய மயிரடர்ந்த மார்பை வெளிக்காட்டி இரக்கமின்றி அடித்தன. அவனோ. அதைப் பொருட்படுத்தாமல் என் பக்கம் முகத்தைத் திருப்பியவாறு அழகும் வலிமையும் மிளிரும் பாங்கில் பாதி படுத்து, தன் பிரமாண்டமான சுங்கானிலிருந்து புகையை ஒரு சீராக இழுத்து அடர்ந்த புகைப் படலங்களை வாயாலும் மூக்காலும் விட்டுக் கொண்டிருந்தான். அவனது விழிகள் என் தலைக்கு மேலாக ஸ்தெப்பியின் உயிரற்ற மௌன இருட்டில் எங்கோ அசைவின்றி நிலைத்திருந்தன. காற்றின் கடும் தாக்குதல்களிலிருந்து தப்பும் பொருட்டு ஓர் அங்க அசைவுகூடச் செய்யாமல் அவன் வாய் ஓயாமல் என்னோடு பேசிக் கொண்டு போனான்.
“அப்படியானால், நீ சுற்றுப் பயணம் செய்கிறாயா? இது நல்லது! நீ தெரிந்தெடுத்தது அருமையான வேலை, தம்பீ. அப்படித்தான் செய்ய வேண்டும்: எங்கும் சுற்றிப் பார். திருப்தி ஆகிவிட்டதும் படுத்து உயிரை விடு. அவ்வளவு தான்!’’
“அப்படித்தான் செய்ய வேண்டும்‘’ என்று அவன் சொன்னதை நான் மறுத்தேன். என் சொற்களை இகழ்ச்சியுடன் முடிவு வரை கேட்டு விட்டு அவன் தொடர்ந்தான் “வாழ்க்கையா? வேறு மக்களா? கெக்கே! உனக்கு எதற்கு இதெல்லாம்? நீ யார், வாழ்க்கை இல்லையோ? மற்றவர்கள் நீ இல்லாமலே வாழ்கிறார்கள், மேற்கொண்டும் நீ இல்லாமலே வாழ்வார்கள். நீ யாருக்கேனும் வேண்டும் என்று எண்ணுகிறாயோ? நீ உணவு அல்ல, ஊன்றுகோல் அல்ல. உன்னுடைய தேவை ஒருவருக்கும் கிடையாது.
“கற்கவும் கற்பிக்கவும் வேண்டும் என்கிறாயா? மக்கள் இன்பம் பெறச் செய்யும் வித்தையைக் கற்க உன்னால் முடியுமா? ஊகும். முடியாது உன்னால். கொஞ்சம் தலை நரைக்கும் வரை பொறுத்திரு முதலில், அப்புறம் சொல்லு, என்ன கற்பிக்க வேண்டும் என்று. எதற்குக் கற்பிக்க வேண்டும்? தனக்கு வேண்டியது என்ன என்பது ஒவ்வொருவனுக்கும் தெரியும். புத்திசாலிகள் இருப்பதை எடுத்துக் கொள்கிறார்கள். அசடர்களுக்கோ, ஒன்றுமே கிடைப்பதில்லை. தவிர, அவனவன் தானே கற்றுக் கொள்கிறான்…
“வேடிக்கையானவர்கள், உன்னுடைய இந்த மனிதர்கள். ஒரே கும்பலாகக் குமைந்து ஒருவரை ஒருவர் நசுக்குகிறார்கள். உலகத்திலேயோ, பார், இடங்கள் எவ்வளவு நிறைய” என்று ஸ்தெப்பியின் பக்கம் கையை அகல வீசினான். “அப்புறம், ஓயாமல் வேலை செய்கிறார்கள். எதற்காக? யாருக்காக? ஒருவனுக்கும் தெரியாது. மனிதன் உழுவதைப் பார்க்கும்போது அவன் வியர்வைத் துளியோடு தன் சக்தியையும் நிலத்தில் பெருக்குகிறான் என்று எண்ணத் தோன்றுகிறது. பின்னால் அதிலேயே கிடந்து அதிலேயே மக்கிப் போகிறான். அவனைச் சேர்ந்தது எதுவும் மிஞ்சுவதில்லை. தனது வயலிலிருந்து எதையும் அவன் பெறுவதில்லை. எப்படிப் பிறந்தானோ அப்படியே – முட்டாளாக – இறந்து போகிறான்.
“அவன் என்ன, தரையை நோண்டவும் தனக்குச் சவக்குழி கூடத் தோண்டிக் கொள்ள நேரம் இல்லாமல் மடியவுமா பிறந்தான்? அவனுக்குத் தெரியுமா விடுதலை என்ன என்பது? ஸ்தெப்பி வெளியின் பரப்பு புரியுமா? கடல் அலையின் பேச்சு அவன் நெஞ்சுக்குக் களிப்பூட்டுமா? அவன் அடிமை. பிறந்ததுமே அடிமை ஆகி விட்டான், வாழ்நாள் முழுவதற்கும். அதுதான் விஷயம்! அவனால் என்ன செய்ய முடியும்? கொஞ்சம் புத்தி வந்தால் சுருக்குப் போட்டுக்கொள்ள முடியும், அவ்வளவுதான்.
“நானோ, இந்த ஐம்பத்தெட்டு வயதுக்குள்ளே எவ்வளவோ பார்த்து விட்டேன். நான் கண்டதை எல்லாம் காகிதத்தில் எழுதினால் உன்னிடம் இருக்கிறதே, பை, இது மாதிரி ஆயிரம் பைகளில் கூடக் கொள்ளாது, தெரியுமா? எங்கே, சொல்லு பார்க்கலாம், எந்த இடங்களுக்கு நான் போகவில்லை என்று! உன்னால் சொல்ல முடியாது. நான் போயிருக்கிற இடங்கள் உனக்குத் தெரியக் கூடச் செய்யாது. எப்படி வாழ வேண்டும் என்றால் போய்க்கொண்டே இருக்க வேண்டும், அவ்வளவுதான். ஒரே இடத்தில் நிரம்ப நேரம் நிற்கக் கூடாது – அதிலே என்ன இருக்கிறது? பகலும் இரவும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு பூமியைச் சுற்றி ஓடுகின்றனவே, அதே மாதிரி வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையிலிருந்து ஓட வேண்டும் -அதன்மேல் கசப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஆழ்ந்து யோசனை செய்தோமோ, வாழ்க்கை கசந்து விடும். எப்போதும் இப்படி நடக்கும். எனக்கும் இப்படி நேர்ந்தது. கெக்கே! நேர்ந்தது, தம்பீ.
“நான் சிறையில் இருந்தேன். கலிச்சீனாவில், ‘நான் உலகத்தில் எதற்காக வாழ்கிறேன்?’ என்று சலிப்போடு எண்ணமிட்டேன். சிறையில் சலிப்பாய் இருந்தது, தம்பீ. அட, எவ்வளவு சலிப்பாய் இருந்தது, தெரியுமா? பலகணி வழியாகத் திடல் மேல் கண்ணோட்டிய போது ஏக்கம் என் நெஞ்சைக் கவ்விக்கொண்டது. கவ்விக் கொண்டு கிட்டி போட்டு நெருக்கிற்று. எதற்காக வாழ்கிறான் என்று எவன் சொல்லுவான்? ஒருவனும் சொல்ல மாட்டான், தம்பீ. நம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவும் தேவையில்லை. வாழ்ந்து கொண்டிரு, அவ்வளவுதான். அதோடு நடந்து கொண்டே இரு, சுற்றிலும் பார்வை செலுத்து, ஒருபோதும் ஏக்கமே உண்டாகாது. சிறைச்சாலையில் நான் இடுப்புக் கயிற்றால் தூக்குப் போட்டுக் கொள்ளத் தெரிந்தேன், அவ்வளவு ஏக்கம்!
“ஏதோ! ஒரு ஆளிடம் பேசினேன். கண்டிப்பான மனிதன், உங்களவன், ருஷ்யன். நாம் விரும்புகிற மாதிரி வாழக் கூடாது, வேதாகமத்தில் சொல்லி இருக்கிறபடி வாழ வேண்டும் என்றான். கடவுளைப் பணி, நீ கேட்பதை எல்லாம் அவர் தருவார் என்று சொன்னான். அவன் போட்டிருந்ததோ, ஒரே கந்தல், கிழிசல். கடவுளிடம் புத்தாடை கேட்டு வாங்கிக் கொள்ளேன் என்று சொன்னேன். அவனுக்குக் கோபம் வந்து விட்டது. என்னைத் திட்டி விரட்டி விட்டான். அது வரையிலோ, மனிதர்களை மன்னிக்க வேண்டும், நேசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். என் பேச்சு துரைமகனாருக்கு உறைத்தது என்றால் என்னையும் மன்னித் திருக்கலாமே அவன். உபதேசம் பண்ண வந்து விட்டான், பெரிதாக! உண்டியைச் சுருக்கு என்று உபதேசிப்பார்கள், தாங்களோ, நாளுக்குப் பத்து வேளை தின்பார்கள்.”
மகார் நெருப்பில் துப்பி விட்டு, சுங்கானில் புகையிலையை மறுபடி திணித்தவாறு பேசாதிருந்தான். காற்று முறையிடுவது போன்று மெல்லெனச் சீழ்க்கை அடித்தது. இருட்டில் குதிரைகள் கனைத்தன. ஆர்வம் பொங்கும், கனிவுள்ள பாட்டு ஜிப்ஸி முகாமிலிருந்து காற்றில் மிதந்து வந்தது. பாடியவள் அழகி நோன்கா, மகாரின் பெண். உள்ளத்திலிருந்து ஆழ்ந்து ஒலித்த அவளுடைய குரல் எனக்குப் பழக்கமானது. அவள் பாட்டுப் பாடினாலும் சரி, “வணக்கம்“ என்று சொன்னாலும் சரி, அவளுடைய குரல் அதிருப்தியுடனும் பிடிவாதத்துடனும் எப்போதும் விந்தையாக ஒலித்தது. அவளுடைய பழுப்பேறிய மங்கலான முகத்தில் அரசிக்குரிய இறுமாப்பு குடிகொண்டிருந்தது. தனது அழகின் எதிர்க்க முடியாத கவர்ச்சி பற்றிய உணர்வும் தன்னைத் தவிர மற்ற எல்லோர் மேலும் இகழ்ச்சியும் ஒருவகை நிழல் படிந்து சுரித்த அவளுடைய கரும் பழுப்புக் கண்களில் சுடர்ந்தன.
மகார் சுங்கானை என்னிடம் கொடுத்தான்.
“புகை! குட்டி நன்றாகப் பாடுகிறாள், இல்லையா? அப்படிச் சொல்லு! இந்த மாதிரிப் பெண் உன்னைக் காதலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா? இல்லையா? நல்லது! அதுதான் சரி. பெண்களை நம்பாதே, அவர்களிடமிருந்து ஒதுங்கிப் பிழை. பெண்ணுக்கு முத்தம் கொஞ்சுவது எனக்குச் சுங்கான் புகைப்பதை விட இன்பமானது. ஆனால் பெண்ணை முத்தம் இட்டதுமே உன்னுடைய நெஞ்சில் விடுதலை மடிந்து விடும். கண்ணுக்குத் தெரியாத ஒன்றால் அவள் உன்னைத் தன்னோடு கட்டிப் போட்டு விடுவாள். அதை அறுக்க முடியாது. உன் உள்ளம் முழுவதையும் நீ அவளுக்கு வழங்கி விடுவாய். மெய்யாக! பெண்களைக் கண்டால் தூர விலகு! எப்போதும் பொய் பேசுவார்கள்! உலகத்தில் எல்லாவற்றையும் விட அதிகமாக உன்னைக் காதலிக்கிறேன் என்பாள் ஒருத்தி. எங்கே, அவளைக் குண்டூசியால் கொஞ்சம் குத்திப்பார், அவள் உன் நெஞ்சை வகிர்ந்து விடுவாள். எனக்குத் தெரியும்! ஏகே, எனக்கு எவ்வளவோ தெரியும்! இந்தா, தம்பி, நடந்த கதை ஒன்றைச் சொல்லுகிறேன், கேட்கிறாயா? இதை நினைவில் வைத்துக்கொள். வைத்துக் கொண்டாயானால் வாழ்நாள் பூராவும் கட்டில்லாத பறவையாக இருப்பாய்.
“ஜொபார் என்று இருந்தான் ஒரு ஜிப்ஸி இளைஞன், லோய்க்கோ ஜொபார் என்று. ஹங்கேரி பூராவும், சேக்கியாவும் ஸ்லோவானியாவும் கடலைச் சுற்றி உள்ள எல்லாத் தேசங்களும் அவனை அறிந்திருந்தன. துணிச்சல்காரப் பையன்! ஜொபாரைக் கொல்லுவதாக ஐந்து, பத்துப் பெயர் சபதம் செய்யாத கிராமம் ஒன்று கூட அந்த வட்டாரங்களில் இருக்கவில்லை. ஆனாலும் அவன் தன் போக்கில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு குதிரை பிடித்து விட்டது என்றால் அந்தக் குதிரைக்குக் காவலாக ஒரு முழுப் பட்டாளத்தை நிறுத்தினாலும் சரி, அவன் அதன் மேல் சவாரி செய்தே தீருவான்! ஏகே! அவன் யாருக்காவது பயந்தான் என்று நினைக்கிறாயா? கிடையாது. சாத்தான் தன் பேய்க் கூட்டம் முழுவதையும் திரட்டிக் கொண்டு ஜொபாரிடம் வந்தால் அவன் சாத்தானைக் கத்தியால் குத்தாவிட்டாலும் கடுமையாகத் திட்டி நொறுக்கியிருப்பான். பேய்களுக்கோ, ஒவ்வொன்றின் மூஞ்சியிலும் ஒரு உதை கட்டாயம் கொடுத்திருப்பான். இதில் சந்தேகமே கிடையாது.
“எல்லா ஜிப்ஸி முகாம்களும் அவனை அறிந்திருந்தன, அல்லது அவனைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தன. அவனுக்குப் பிடித்தவை குதிரைகள் மட்டுந்தான், வேறு எதுவும் இல்லை. குதிரைகளும் கூட வெகு நேரத்திற்கு அல்ல. கொஞ்சம் சவாரி செய்வான், பின்பு விற்று விடுவான். பணத்தை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அவனுக்கு எதிலுமே ஆழ்ந்த பற்று கிடையாது. உனக்கு அவனுடைய நெஞ்சு வேண்டும் என்று வைத்துக்கொள். அவனே மார்பைப் பிளந்து நெஞ்சைப் பறித்து உன்னிடம் கொடுத்து விடுவான், அதனால் உனக்கு நன்மை ஏற்பட்டால் போதும். அப்படிப்பட்டவனாக்கும் அவன், தம்பீ!
“அந்தக் காலத்தில் எங்கள் முகாம் புக்கோவினாவில் சுற்றிக் கொண்டிருந்தது. இது ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஒரு நாள்-வசந்த கால இரவில்-நாங்கள் சில பேர் உட்கார்ந்திருந்தோம். நான், படை வீரன் தனீ லோ-இவன் கோஷத்தோடு* சேர்ந்து சண்டை போட்டவன் – கிழவன் நூர், மற்றவர்கள், தனீலோவின் மகள் ராத்தா எல்லோரும் இருந்தோம்.
“என் மகள் நோன்காவை அறிவாய் அல்லவா? பெண்ணரசி அவள்! ஊம், ஆனால் ராத்தாவை இவளோடு ஒப்பிடக்கூடாது, அது நோன்காவுக்கு நிரம்பப் பெருமை தருவதாகும். அவளை, இந்த ராத்தாவை, வார்த்தைகளால் வருணிக்கவே முடியாது. அவளுடைய அழகைப் பிடிலில் வேண்டுமானால் இசைக்கலாம். அதுவும் பிடிலைத் தன் சொந்த உள்ளம் போல அறிந்தவன்தான் இசைக்க முடியும்.
“எத்தனையோ வாலிபர்களுடைய நெஞ்சுகளைக் கருக்கி விட்டாள் அவள். அடேயப்பா, நிறைய நெஞ்சுகளை! மொராவாவில் ஒரு பிரபு, கிழவன், முன்குடுமிக்கார உக்ரேனியன், அவளைக் கண்டு பிரமித்துப் போனான். குதிரையில் உட்கார்ந்து, காய்ச்சல் வந்தவன் போல நடுங்கியபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அழகன் அவன், திருநாளில் சாத்தான் போல. கோட்டில் தங்கச் சரிகைப் பூத்தையல். குதிரை காலை லேசாக அடித்தபோது இடையில் வாள் மின்னல் போலப் பளிச்சிட்டது. வாள் முழுவதும் நன் மணிகளால் இழைக்கப்பட்டிருந்தது. தொப்பியில் இளநீல மகமல் ஆகாயத்தின் துண்டு போல இருந்தது. கிழப் பிரபு பெரிய மிடுக்கன்! பார்த்துக் கொண்டே இருந்தவன், ராத்தாவிடம், ‘ஏய், இந்தா, முத்தமிடு, பை நிறையப் பணம் தருகிறேன்’ என்றான். அவளோ, மறு பக்கம் திரும்பிக் கொண்டாள். அவ்வளவுதான்! ‘நான் உன் மனதைப் புண்படுத்தி விட்டேன் என்றால் மன்னித்துவிடு, கொஞ்சம் அன்போடு பார்க்கவாவது செய்’ என்று கிழப் பிரபு பணிவாய்க் கெஞ்சி, பணப் பையை அவளுடைய காலருகே எறிந்தான். பெரிய பணப்பை, தம்பீ! ஆனால் அவளோ, தற்செயலாகப் போல அதைச் சேற்றில் உதைத்துத் தள்ளினாள், அவ்வளவுதான்.
‘அடி பெண்ணே!’ என்று பெருமூச்செறிந்து குதிரையைச் சவுக்கால் விளாறினான் அவன். புழுதிதான் படலங்களாகக் கிளம்பியது.
“அடுத்த நாள் அவன் மறுபடி வந்தான். ‘அவளுடைய தகப்பன் யார்?’ என்று முகாமில் இடிபோல முழங்கினான். தனீலோ வெளியே வந்தான். ‘உன் மகளை விலைக்குக் கொடு. என்ன வேண்டுமானாலும் வாங்கிக்கொள்!’தனீலோ அவனிடம் சொன்னான்: ‘பிரபு வம்சத்தவர்கள் தாம் தங்கள் பன்றிகள் முதல் மனச்சாட்சி வரை எல்லாவற்றையும் விலைக்குக் கொடுப்பார்கள். நான் கோஷத்தோடு சேர்ந்து சண்டை போட்டவன். எதையும் நான் விற்பனை செய்வதில்லை. பிரபு இரைவதற்கு வாயெடுத்தான். அவன் கை வாளை உருவப் போயிற்று. ஆனால் எங்களில் ஒருவன் தீப் பிடித்த கற்றையைக் குதிரையின் காதில் நுழைத்து விடவே அது சவாரிக்காரனோடு பாய்ந்தோடிற்று. நாங்களும் முகாமைப் பெயர்த்துக் கொண்டு கிளம்பி விட்டோம். ஒரு நாள், இரண்டு நாள் நடந்தோம். பார்க்கிறோமோ, பிரபு எங்களை எட்டிப் பிடித்து விட்டான்! ‘ஏய், ஆட்களே, ஆண்டவனுக்கும் உங்களுக்கும் முன் என் மனச்சாட்சி கறைபடவில்லை. பெண்ணை எனக்கு மணம் செய்து வையுங்கள். என் சொத்தை எல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் பெரும் பணக்காரன்!’ என்றான். அவன் அனலாய்ச் சிவந்திருந்தான். காற்றில் ஆடும் இறகுப் புல் போலச் சேணத்தின் மேல் ஆடினான். நாங்கள் யோசனை செய்தோம்.
“இந்தா, மகளே, பேசு!” என்று மீசைக்குள் சொன்னான் தனீலோ.
‘பெண் கழுகு தானாக விரும்பிக் காக்கைக் கூட்டுக்குப் போனால் என்ன ஆகும்?’ என்று ராத்தா எங்களிடம் கேட்டாள்.
“தனீலோ வாய்விட்டுச் சிரித்தான். நாங்களும் அவனோடு சேர்ந்து சிரித்தோம்.
‘நன்றாய்ச் சொன்னாய் மகளே! கேட்டாயா, சீமானே? காரியம் பலிக்கவில்லை. நீ புறாக்களைத் தேடு. அவை இணங்கி வரக் கூடியவை’ என்றான் தனீலோ. நாங்கள் மேலே நடந்தோம்.
“அந்தச் சீமானோ, தொப்பியைக் கழற்றித் தரையில் எறிந்து விட்டுப் பூமி அதிரக் குதிரையை விரட்டிக் கொண்டு போய் விட்டான். அப்பேர்ப்பட்டவளாக்கும் ராத்தா, தெரிந்து கொள், தம்பீ!
“ஆயிற்றா! ஒரு நாள் இரவில் நாங்கள் உட்கார்ந்திருந்த போது ஸ்தெப்பி வெளியில் இசை பெருகுவதைக் கேட்டோம். அருமையான இசை! அதைக் கேட்டு நாளங்களில் இரத்தம் சூடேறியது. அந்த இசை எங்கோ அழைத்தது. ஏதாவது பெரிய காரியம் செய்ய வேண்டும் என்ற ஆசை அந்த சங்கீதத்தால் எங்கள் எல்லோருக்கும் உண்டாயிற்று. எதைச் செய்த பிறகு வாழ்வது அவசியம் இல்லையோ, அல்லது வாழ வேண்டும் என்றால் உலகம் பூராவையும் ஆள்பவர்களாக வாழ வேண்டுமோ அப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்யும் ஆசை. இதை நாங்கள் உணர்ந்தோம்.
“கொஞ்ச நேரத்தில் ஒரு குதிரையின் உருவம் இருட்டில் கண்ணுக்குத் தென்பட்டது. அதன் மேல் ஒருவன் உட்கார்ந்து எங்கள் பக்கமாக வந்து கொண்டே பிடில் வாசித்துக் கொண்டிருந்தான். நெருப்பின் பக்கத்தில் குதிரையை நிறுத்தி, பிடில் வாசிப்பதை விட்டு விட்டுப் புன்னகையுடன் எங்களைப் பார்த்தான்.
‘’’ஏகே, ஜொபார், நீயா அது!’ என்று மகிழ்ச்சி பொங்க அவனைப் பார்த்துக் கூவினான் தனீலோ. ‘இவன்தான் லோய்க் கோ ஜொபார்!”
“அவனுடைய மீசைகள் தோள்கள்மேல் படிந்து தலை முடியோடு சேர்ந்திருந்தன. விழிகள் பளிச்சிடும் நட்சத்திரங்கள் போலச் சுடர்ந்தன. புன்னகையோ, முழுச் சூரியன் போல ஒளி வீசிற்று, கடவுள் ஆணை! குதிரையோடு சேர்த்து ஒரே இரும்பு வார்ப்பில் வடித்தவன் போல் இருந்தான். நெகிடி நெருப்பின் வெளிச்சத்தில் குருதி படிந்தவன் போல நின்று பற்கள் மின்னும்படிச் சிரித்தான். அவன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவோ, இந்த உலகத்தில் நானும் வாழ்கிறேன் என்பதை வெறுமே கவனிக்கவோ செய்வதற்கு முன்பே என்னையே நேசிக்கிற அளவு அவன் மேல் அன்பு கொள்ளத் தொடங்கி விட்டேன்! இது உண்மை அல்ல என்றால் நான் கடைத்தேறாமல் போவேனாக!
“பார்த்தாயா தம்பீ, எப்பேர்ப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்று! இப்படிப்பட்டவன் நம் விழிகளைக் கூர்ந்து பார்த்ததுமே நம் உள்ளத்தை ஆட் கொண்டு விடுகிறான். இதனால் நமக்குக் கொஞ்சங்கூட வெட்கம் உண்டாவதில்லை. தவிரப் பெருமையும் ஏற்படுகிறது. இந்த மாதிரி ஆளோடு சேர்ந்து நாமும் மேலானவர்களாக மாறி விடுகிறோம். இந்த மாதிரி மனிதர்கள் கொஞ்சம் பேர்தான், நண்பா! அவர்கள் கொஞ்சம் பேர் என்றால் அதுவும் சரிதான். உலகத்தில் நல்லது நிறைய இருந்தால் அதை யாரும் நல்லதாக மதிக்க மாட்டார்கள். அப்படித் தான்! மேலே கேளு.
“ராத்தா சொன்னாள்: ‘ஜொபார், நீ நன்றாக வாசிக்கிறாய்! இவ்வளவு நாதம் உள்ள, நுட்பமான பிடிலை உனக்கு யார் செய்து தந்தார்கள்?’ அவனோ, சிரித்தான். ‘நானே தான் செய்தேன். மரத்தால் செய்யவில்லை. நெஞ்சாரக் காதலித்த இளம் பெண்ணின் மார்புக் கூட்டால் செய்தேன். அவளுடைய இதயத்திலிருந்து நரம்புகள் முறுக்கிக் கொண்டேன். பிடில் இப்போதும் கொஞ்சம் அபஸ்வரம் பேசுகிறது, ஆனால் சரியாகவில் போட என்னால் முடியும்‘ என்றான்.
“பெண்ணினுடைய விழிகள் தன் உள்ளத்தில் காதல் நெருப்பை மூட்டிவிடக் கூடாது. ஆனால் தனக்காக ஏக்கத்தால் கலங்க வேண்டும் என்பதற்காக அவற்றை மங்கடிக்க முயல்வது நம்மவர்களின் வழக்கம் என்பது தெரிந்தது தான். ஜொபாரும் இப்படியே செய்தான். ஆனால் அவன் முயற்சி பலிக்கவில்லை. ராத்தா ஒரு பக்கம் திரும்பி, கொட்டாவி விட்டு, ‘ஜொபார் புத்திசாலி, சாமர்த்தியசாலி என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேனே. ஆட்கள் எப்படிப் பொய் சொல்லுகிறார்கள் பார்!’ என்று கூறிவிட்டு அப்பால் போய் விட்டாள்.
“ஜொபார் குதிரையிலிருந்து இறங்கி, ‘ஏகே, அழகீ, உனக்குப் பற்கள் கூர்மை!’ என்றான். அவன் கண்கள் பளிச்சிட்டன. ‘வணக்கம், அண்ணன்மாரே! நான் உங்களிடம் வந்திருக்கிறேன்!’ என்று சொன்னான்.
‘விருந்தாளியை வரவேற்கிறோம்!’ என்று அவனுக்குப் பதில் கூறினான் தனீலோ. முத்தமிட்டுக் கொண்டோம். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தபின் படுத்தோம்… அயர்ந்து தூங்கினோம். காலையில் பார்க்கிறோமோ ஜொபாரின் தலையில் துணியால் கட்டு போட்டிருந்தது. என்ன ஆயிற்று? தூங்கிக் கொண்டிருந்த போது குதிரை குளம் பால் காயப்படுத்தி விட்டதாம்.
‘ஏ, ஏ, ஏ! அந்தக் குதிரை யார் என்று புரிந்து கொண்டு நாங்கள் மீசைக்குள் குறு நகை செய்தோம். தனீலோவும் புன் சிரிப்பு சிரித்தான். என்ன விஷயம்? ஜொபார் ராத்தாவுக்கு ஏற்றவன் அல்லவோ? அல்லவாம்! அட, பெண் என்ன தான் அழகி ஆனாலும் அவள் மனது குறுகலானது, சின்னது. அவள் கழுத்தில் ஒரு மணங்கு தங்க நகைகள் பூட்டினாலும் இருப்பதை விட மேலானவள் ஆக அவளால் முடியாது. இது கிடக்கட்டும்!
“அந்த இடத்திலே நாங்கள் நெடுங் காலம் வசித்தோம். அந்தச் சமயத்தில் எங்கள் காரியங்கள் நன்றாக இருந்தன. ஜொபார் எங்களோடு இருந்தான். அருமையான தோழன் அவன்! விவேகம் உள்ளவன். கிழவன் போல. எல்லாக் காரியத்திலும் தேர்ந்தவன். ருஷ்ய எழுத்தும் மகயார் எழுத்தும் படித்துப் புரிந்து கொண்டான். சில வேளைகளில் அவன் பேசத் தொடங்கினால் ஆயுள் பூராவும் உறங்காமல் அவனுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கத் தோன்றும்! பிடில் வாசித்தான் என்றால், உலகத்தில் வேறு எவனாலும் அப்படி வாசிக்க முடியாது. இது பொய்யானால் என் தலையில் இடி விழட்டும்! பிடில் நரம்புகள் மேல் அவன் வில் போடுவதைக் கேட்டதும் நம் இருதயம் திடுக்கிடும். இன்னொரு இழுப்பு இழுப்பான், கேட்டு நெஞ்சுத் துடிப்பு நின்று விடும். அவனோ, பிடில் வாசித்துக் கொண்டே புன்னகை செய்வான். அவன் வாசிப்பதைக் கேட்டு ஒரே நேரத்தில் அழவும் சிரிக்கவும் ஆசை உண்டாகும். ஒரு சமயம் யாரோ கசப்புடன் முனகுவது போலவும் உதவி கேட்பது போலவும் கத்தியால் அறுக்கிற மாதிரி நெஞ்சை வகிர்வது போலவும் இருக்கும். மறு சமயம், ஸ்தெப்பி வெளி ஆகாயத்துக்குக் கதைகள் சொல்லும், துயரக் கதைகள். அருமைக் காதலனுக்கு விடைகொடுத்து அனுப்பும் பெண் அழுவாள்! அருமைக் காதலன் ஸ்தெப்பி வெளியில் காதலியைக் கூவி அழைப்பான். திடீரென்று – ஹேய்! கட்டில்லாத, உயிர்த் துடிப்புள்ள பாட்டு இடி போல முழங்கும். இந்தப் பாட்டுக்கு இசைய வானத்தில் சூரியனே நடனம் ஆடுவது போல இருக்கும்! அப்படியாக்கும் தம்பீ அவன் வாசிப்பான்!
“கேட்பவனுடைய உடம்பின் ஒவ்வொரு தசைநாரும் அந்தப் பாட்டைப் புரிந்து கொள்ளும். அவன் அதற்கு அடிமை ஆகிவிடுவான். ஜொபார் மட்டும் அப்போது, ‘கத்திகளை எடுத்துக் கொண்டு கிளம்புங்கள், தோழர்களே! என்று கூவி இருந்தால் நாங்கள் எல்லோரும் அவன் காட்டிய ஆளுடன் கத்திச் சண்டைக்குக் கிளம்பி இருப்போம். ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்ய அவனால் முடிந்தது. எல்லோரும் அவனை நேசித்தோம். மனமார நேசித்தோம். ராத்தா ஒருத்திதான் அவனை மதிக்கவில்லை. அவ்வளவோடு விட்டிருந்தாலும் போகிறது என்கலாம். அவளோ, ஜொபாரை நையாண்டி வேறு செய்து வந்தாள். அவனுடைய நெஞ்சைக் கடுமையாகப் புண்படுத்தினாள், நிரம்பக் கடுமையாக! ஜொபார் பற்களை நெறுநெறுப்பான், மீசையைப் பிடித்து இழுப்பான். அவன் கண்கள் அடியற்ற பள்ளத்தைவிடக் கருமையாகத் தெரியும். சில வேளைகளில் அவற்றில் பளிச்சிடும் ஒளியைக் கண்டு உள்ளம் திகில் அடையும். ராத்திரி வேளையில் ஜொபார் ஸ்தெப்பியில் வெகு தூரம் போவான். அவனுடைய பிடில் காலை வரை அழுது கொண்டிருக்கும். அழுது கொண்டே ஜொபாரின் விடுதலையைப் புதைக்கும். நாங்கள் படுத்துக் கொண்டு இசையைக் கேட்டபடி என்ன செய்வது என்று யோசிப்போம். இரண்டு பாறைகள் ஒன்றின் பக்கம் மற்றது உருளும் போது அவற்றுக்கு நடுவே நிற்கக் கூடாது, காயப்படுத்திவிடும் என்று அறிந்திருந்தோம். இப்படிக் காலம் கழிந்தது.
“ஒரு நாள் நாங்கள் எல்லோரும் கூடி உட்கார்ந்து காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அலுப்பு தட்டி விட்டது. ‘ஜொபார், பாட்டுப் பாடு, நெஞ்சைக் குதூகலப் படுத்து!’’ என்று கேட்டுக் கொண்டான் தனீலோ. தனக்குக் கொஞ்ச தூரத்தில் வானத்தை நோக்கியவாறு படுத்திருந்த ராத்தாவின் மேல் கண்ணோட்டி விட்டு, நரம்புகளை மீட்டினான் ஜொபார். மெய்யாகவே இளம் பெண்ணின் இருதயத்தால் ஆனது போலப் பிடில் இசை மொழி பேசத் தொடங்கிற்று. ஜொபார் பாடினான்:
“எய்-யை! எரியுது நெஞ்சிலேதீ,
எல்லை அற்றது ஸ்தெப்பி!
கையிலே உறுதி, காற்றைப் போலே
கடுகிடும் என் புரவி!”
“ராத்தா தலையைத் திருப்பி, பாடியவனின் விழிகளை உற்றுப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். அவனுடைய முகம் காலை வானம் போலக் குப்பென்று சிவந்தது.
‘ஏய், அப்பா-ஏய்! என்றன் அன்புத் தோழா!
ஏறிப் பாய்வோமா முன்னே?
மையிருள் போர்த்திட்ட ஸ்தெப்பிக்கப்பால்
வரவேற்கும் வைகல் நம்மை!
எய்-யை! பாய்ந்து எதிர்கொள்வோம் பகலை.
எழும்பிப் பறந்திடுவாய்!
மெய்யாய் நீ பிடரினால் மதியழகி
மேல் மட்டும் இடித்திடாதே!’
“அவன்தான் எப்படிப் பாடினான்! இப்போது யாரும் அந்த மாதிரிப் பாடுவதில்லை! ஆனால் ராத்தாவோ நீரை வடி கட்டுபவள் போல வார்த்தைகளைச் சொட்டினாள்:
“நீ அவ்வளவு உயரே பறக்காதே, ஜொபார், சமநிலை தவறிக் குப்பற விழுந்து விடுவாய் சேற்றுக் குட்டையில். மீசை அழுக்காகி விடும், ஜாக்கிரதை.’ ஜொபார் அவளை வன விலங்கு போல முறைத்துப் பார்த்தான், ஆனால் ஒன்றும் பேசவில்லை. பொறுத்துக் கொண்டு மேலே பாடினான்:
‘ஏய்-அப்பா! இருவரும் உறங்குகையில்
இங்கே நாள் புலர்ந்திடலாம்.
ஐயையோ! நாண நெருப்பிலே நாம்
அப்போது பொசுங்கிடுவோம்!’
‘இதுதான் பாட்டு!’ என்றான் தனீலோ. இந்த மாதிரிப் பாட்டை நான் ஒரு போதும் கேட்டதில்லை. நான் பொய் சொன்னால் சாத்தான் என்னைச் சுங்கான் ஆக்கிக் கொள்ளட்டும்!
“கிழவன் நூர் மீசையைச் சிலுப்பினான், தோள்களைக் குலுக்கினான். ஜொபாரின் துணிச்சல் நிறைந்த பாட்டு எங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது! ராத்தா ஒருத்திக்குத் தான் அது பிடிக்கவில்லை.

‘கழுகின் கத்தலைக் கோரணி காட்டி இப்படித்தான் ஒரு தரம் கொசு ரீங்காரம் செய்தது’ என்றாள் அவள், எங்கள் மேல் வெண்பனி உருண்டையை எறிவது போல. “ராத்தா, ஒரு வேளை உனக்குச் சவுக்கடி கேட்கிறதோ?” என்று அவளை நெருங்கினான் தனீலோ. ஜொபாரோ, தொப்பியைத் தரையில் வீசினான். அவன் முகமெல்லாம் மண் போலக் கறுத்தது.
“பொறு, தனீலோ! முரட்டுக் குதிரைக்கு எஃகுக் கடிவாளம் போட வேண்டும்! உன் மகளை எனக்குக் கட்டிக் கொடு!’ என்றான்.
‘இது முறையான பேச்சு!’ என்று நகைத்தான் தனீலோ.’முடியுமானால் தாராளமாகக் கட்டிக் கொள்!’
‘நல்லது!’ என்றான் ஜொபார். பின்பு ராத்தாவிடம் சொன்னான்: ‘இந்தா, பெண்ணே, நான் சொல்லுவதைக் கொஞ்சம் கேள், பிகு பண்ணிக் கொள்ளாதே! உன் மாதிரிப் பெண்கள் நிறையப் பேரை நான் கண்டிருக்கிறேன், ரொம்ப நிறையப் பேரை! ஒருத்தி கூட என் உள்ளத்தை உன்போல வசீகரிக்கவில்லை. ஆ, ராத்தா என் இதயத்தை ஆட்கொண்டு விட்டாய் நீ! நல்லது, அதனால் என்ன? நடப்பது நடந்தே தீரும். தவிர. ஒருவன் தன்னையே விட்டு விலகியோட உதவும் குதிரை எங்கும் கிடையாது! கடவுளும் என் மானமும் உன் தகப்பனும் இந்த எல்லா ஆட்களும் சாட்சிகளாக உன்னை மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என் விடுதலைக்கு மட்டும் குறுக்கே வராதே. நான் சுட்டற்ற மனிதன், என் விருப்பம் போல வாழ்வேன்!’ இப்படிச் சொல்லி, பற்களைக் கடித்துக் கொண்டு கண்கள் பளிச்சிட அவளிடம் போனான். அவள் பக்கம் அவன் கையை நீட்டியதை நாங்கள் கண்டோம். ராத்தா இந்த ஸ்தெப்பி வெளிக் குதிரைக்குக் கடிவாளம் போட்டுவிட்டாள் என்று நினைத்தோம்! திடீரென்று பார்க்கிறோமோ, ஜொபார் கைகளை ஆட்டித் தடாலென்று தரையில் மல்லாக்க விழுந்தான்! அவன் பின் மண்டை தரையில் மோதிற்று…
“என்ன விந்தை? அவன் மார்பில் துப்பாக்கிக் குண்டு தாக்கியது போல் இருந்தது. உண்மையில் ராத்தாதான் சவுக்கு வாரை அவன் காலில் வீசி மாட்டி, அவனைத் தன் பக்கம் இழுத்தாள். அதனால்தான் ஜொபார் விழுந்தான்.
“ராத்தா அதற்குள் மறுபடி படுத்து அசைவின்றி ஏளனமாக வாய்க்குள் சிரித்தாள். என்ன நடக்கும் என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஜொபார் தரையில் உட்கார்ந்து தலை வெடித்துவிடும் என்று அஞ்சுபவன் போல அதைக் கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தான். அப்புறம் எழுந்திருந்து ஒருவரையும் பார்க்காமல் ஸ்தெப்பி வெளியில் நடந்தான். ‘அவனைக் கவனித்துக் கொள்!’ என்று நூர் என்னிடம் கிசுகிசுத்தான். இரவின் இருட்டில் நான் ஜொபாரின் பின்னே ஸ்தெப்பியில் ஊர்ந்தேன். அப்படியாக்கும் சேதி, தம்பீ!”
மகார் சுங்கானிலிருந்து சாம்பலைத் தட்டிக் கொட்டி விட்டு அதில் மறுபடி புகையிலை திணிக்கலானான். நான் மேல் கோட்டை இன்னும் நன்றாகப் போர்த்துக் கொண்டு படுத்தவாறே அவனுடைய முதிய வதனத்தை நோட்டம் இட்டேன். வெயிலாலும் காற்றாலும் அது கறுத்திருந்தது. அவன் கடுமையும் கண்டிப்பும் தோன்றத் தலையை அசைத்து வாய்க்குள்ளாக ஏதோ கிசுகிசுத்தான். அவனுடைய நரைத்த மீசை ஆடியது. காற்று அவன் தலை மயிரைப் பரத்தியது. மின்னல் தாக்கியதால் கரிந்து விட்டாலும் இன்னமும் விறலும் உறுதியும் தன் வலிமையில் பெருமையும் கொண்ட முதிர்ந்த ஓக் மரத்துக்கு நிகராகக் காணப்பட்டான் அவன். கடல் முன்போலவே கரையோடு இரகசியம் பேசிக் கொண்டிருந்தது. காற்று அதன் கிசுகிசுப்பை அதே போல ஸ்தெப்பி வெளியில் பரப்பிக் கொண்டிருந்தது. நோன்கா பாடுவதை நிறுத்தி விட்டாள். வானில் அடர்ந்திருந்த மேகங்கள் இலையுதிர் கால இரவை இன்னும் இருண்டது ஆக்கிக் கொண்டிருந்தன.
“குனிந்த தலையும் சாட்டை வார்கள் போலத் தொங்கிய கைகளுமாக ஜொபார் கால் போனதிக்கில் நடந்தான். ஓடைப் பள்ளத்தை அடைந்ததும் கல்லின் மேல் உட்கார்ந்து பெரு மூச்செறிந்தான். அதைக் கேட்டு இரக்கத்தால் என் நெஞ்சில் உதிரம் பெருகிற்று, ஆனாலும் நான் அவனை நெருங்க வில்லை. துயரத்தை வார்த்தைகளால் துடைக்க முடியாது அல்லவா? அதனால்தான்! ஒரு மணி, இரண்டு மணி, மூன்று மணி ஆகியும் அவன் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.
“நான் கொஞ்ச தூரத்தில் படுத்திருந்தேன். நிலாக் கால இரவு, சந்திரன் ஸ்தெப்பி முழுவதிலும் வெள்ளியாக ஒளி பரப்பிற்று. தூரத்திலும் எல்லாம் கண்ணுக்குத் தெரிந்தன.
“ராத்தா முகாமிலிருந்து வேகமாக வந்ததைத் திடீரென்று கண்டேன்.
“எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று! ‘அடேயப்பா, என்ன மிடுக்கு! துணிந்தவள் இந்த ராத்தா!’ என்று எண்ணிக் கொண்டேன். அவள் அவனை நெருங்கினாள். அவன் காதில் ஒன்றும் படவில்லை. அவள் அவனுடைய தோள் மேல் கையை வைத்தாள். ஜொபார் திடுக்கிட்டான் முட்டி பிடித்த கைகளை விரித்துத் தலையை நிமிர்த்தினான். அக்கணமே குதித்தெழுந்து கட்டாரியை உருவினான்! இதோ பெண்ணை வெட்டிப் போட்டு விடுவான் என்பதைக் கண்டேன். முகாமுக்குக் கேட்கும் படிக் கூச்சலிட்டு அவர்களிடம் ஓடிப்போக நினைத்தேன்.
“ ‘எறிந்து விடு! தலையைச் சுக்கல் ஆக்கி விடுவேன்!’ என்ற சொற்கள் ஆதற்குள் காதில் பட்டன. பார்க்கிறேனோ, ராத்தாவின் கையில் ரிவால்வர், அவள் ஜொபாரின் நெற்றியைக் குறி வைத்து ரிவால்வரைப் பிடித்திருந்தாள். பேய் மகள்! ‘இப்போது இரண்டு பேரும் பலத்தில் சமம், மேலே என்ன நடக்கும்?’ என்று எண்ணமிட்டேன்.
“ராத்தா ரிவால்வரை இடைவாரில் செருகிக் கொண்டு ஜொபாரிடம் சொன்னாள்: ‘கேள். நான் உன்னைக் கொல்ல வரவில்லை, சமாதானம் செய்து கொள்ள வந்தேன். கட்டாரியை எறிந்து விடு!’ அவன் கட்டாரியை எறிந்து விட்டு அவளை முறைத்துப் பார்த்தான். அந்தக் காட்சி அதிசயமாய் இருந்தது. தம்பீ! இரண்டு பேர் நின்று ஒருவரை ஒருவர் காட்டு விலங்குகள் போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவ்வளவிற்கும் இரண்டு பேரும் நிரம்ப நல்லவர்கள், துணிவு உள்ளவர்கள். தெளிந்த நிலா அவர்களைப் பார்த்தது, நானும் பார்த்தேன் அவ்வளவுதான்.
‘நான் சொல்வதைக் கேள், ஜொபார். நான் உன்னைக் காதலிக்கிறேன்!’ என்றாள் ராத்தா. அவனோ கைகளும் கால்களும் கட்டப்பட்டவன் போல வெறுமே தோள்களை மட்டும் அசைத்தான்.
‘நான் வீரர்களைப் பார்த்திருக்கிறேன். நீ அவர்களை விட அதிகத் துணிச்சல் உள்ளவன், அகத்திலும் முகத்திலும் அழகன். நான் கண் சாடை செய்தாலே போதும், அவர்களில் ஒவ்வொருவனும் தன் மீசையைச் சிரைத்துக் கொண்டிருப்பான். நான் விரும்பினால் அவர்கள் எல்லோரும் என் காலில் விழுந்திருப்பார்கள். ஆனால் பயன் என்ன? அவர்கள் ஏற்கெனவே பெரிய துணிச்சல்காரர்கள் அல்ல. நான் அவர்கள் எல்லோரையும் பெட்டைகள் ஆக்கி இருப்பேன். துணிந்த ஜிப்ஸிகள் உலகில் கொஞ்சம் பேர்தான் மீதி இருக்கிறார்கள், ஜொபார், கொஞ்சம் பேர்தான். நான் ஒருபோதும் எவனையும் காதலிக்கவில்லை. ஜொபார், ஆனால் உன்னைக் காதலிக்கிறேன். அதோடு விடுதலையையும் நான் விரும்புகிறேன்! ஜொபார், உன்னைக் காட்டிலும் அதிகமாக விடுதலை மேல் அன்பு கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் எனக்கு வாழ முடியாது, அப்படியே நான் இல்லாமல் உன்னாலும் வாழ முடியாது. ஆகையால்தான் நீ உள்ளத்தாலும் உடலாலும் என்னுடையவன் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், கேட்டாயா?’ அவன் ஏளனச் சிரிப்பு சிரித்தான்.
“கேட்டேன்! உன் பேச்சைக் கேட்க உள்ளத்துக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. எங்கே, இன்னும் சொல்லு!”
‘இன்னும் நான் சொல்வது இது தான். ஜொபார், நீ எவ்வளவுதான் போக்கு காட்டினாலும் நான் உன்னை வசக்கி விடுவேன், நீ என்னவன் ஆகி விடுவாய். ஆகவே நேரத்தை வீண் போக்காதே. என் முத்தங்களும் கொஞ்சல்களும் உனக்காகக் காத்திருக்கின்றன… நான் உன்னை ஆரத் தழுவி முத்தமிடுவேன், ஜொபார்! என் முத்தங்களின் மோகத்தில் உன் துணிச்சல் நிறைந்த வாழ்வை மறந்து விடுவாய்… ஜிப்ஸி வீரர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டும் உன் ஆவேசப் பாட்டுக்கள் அப்புறம் ஸ்தெப்பி வெளியில் முழங்க மாட்டா. கனிவுள்ள காதல் பாட்டுக்களை எனக்காக, ராத்தாவுக்காக, நீ பாடுவாய்… ஆகையால் நேரத்தை வீணாக்காதே. நான் இப்படிச் சொன்னேன். இதற்கு அர்த்தம் என்ன என்றால் நாளைக்கு நீ மூத்த தோழருக்கு போல எனக்குப் பணிவாய். முகாம் முழுவதற்கும் முன்பாக என் காலைத் தொட்டு வணங்குவாய், என் வலது கையை முத்தமிடுவாய். அப்போதுதான் நான் உன் மனைவி ஆவேன்.”
“பேய் மகளுடைய ஆசையைப் பாரேன்! இது ஒரு போதும் கேள்விப்படாத சேதி. பழங் காலத்தில் கருமலை வாசிகளிடம் இந்த மாதிரி வழக்கம் இருந்ததாம், கிழவர்கள் சொல்லுவார்கள். ஆனால் ஜிப்ஸிகளிடம் ஒரு போதும் கிடையாது! தம்பீ, எங்கே, இதை விட வேடிக்கையானது எதையேனும் இட்டுக் கட்டிச் சொல்லு பார்க்கலாம்! ஒரு வருஷம் பூராவும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டாலும் உன்னால் சொல்ல முடியாது!
“ஜொபார் ஒரு பக்கம் நகர்ந்து, நெஞ்சில் காயம் பட்டவன் போல ஸ்தெப்பி எங்கும் கேட்கும்படி வீரிட்டான். ராத்தா திடுக்கிட்டாள், ஆனால் பதைப்பை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
‘நல்லது, நாளைக்குச் சந்திப்போம். நான் சொன்னபடி அப்போது நீ செய்ய வேண்டும், கேட்டாயா, ஜொபார்!’
“கேட்டேன்! செய்வேன்’ என்று முனகி அவள் பக்கம் கையை நீட்டினான் ஜொபார். அவளோ, அவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ஜொபார் காற்றில் முறிந்த மரம் போலத் தள்ளாடி, பொருமி அழுது கொண்டும் சிரித்துக் கொண்டும் தரையில் விழுந்தான்.
“இப்படி அவனை வதைத்து எடுத்தாள் பாழும் ராத்தா. நான் சிரமப்பட்டு அவனுக்கு மயக்கம் தெளிவித்தேன்.
“ஏகே! மனிதர்கள் துன்பத்தில் உழல்வது எந்தச் சாத்தானுக்குப் பிரீதி? மனிதனுடைய நெஞ்சு துயரத்தால் பிளந்து தேம்புவதைக் கேட்க யாருக்கு விருப்பம்? நீயே யோசித்துப் பார்!..
“நான் முகாம் திரும்பி எல்லாவற்றையும் பெரியவர்களுக்கு விவரித்தேன். அவர்கள் ஆலோசனை செய்து இதன் முடிவு என்ன ஆகிறது என்று பொறுத்திருந்து பார்க்கத் தீர்மானித்தார்கள். நடந்தது இதுதான். மாலையில் நாங்கள் எல்லோரும் நெருப்பைச் சுற்றிக் குழுமிய போது ஜொபாரும் வந்தான். அவன் கலங்கி, ராத்திரிக்குள் பயங்கரமாக மெலிந்து போயிருந்தான். அவனுடைய கண்கள் குழி விழுந்திருந்தன. விழிகளைத் தாழ்த்திக் கொண்டு, தலையை நிமிர்த்தாமலே எங்களிடம் சொன்னான்:
“சேதி இதுதான், தோழர்களே. நேற்று இரவு நான் என் நெஞ்சைத் துருவிப் பார்த்தேன். பழைய கட்டற்ற வாழ்க்கைக்கு அதில் இடம் இல்லை என்பதைக் கண்டேன். அதில் ராத்தா ஒருத்தி மட்டுமே வாழ்கிறாள் – அவ்வளவு தான்! இதோ பாருங்கள், அழகி ராத்தா புன்னகை செய்கிறாள், ராணி போல! என்னைவிட அதிகமாகத், தன் விடுதலையை அவள் நேசிக்கிறாள். நானோ, என் விடுதலையைக் காட்டிலும் மேலாக அவளைக் காதலிக்கிறேன். நான், துணிவுள்ள லோய்க்கோ ஜொபார், இவளைச் சந்திக்கும் வரை வாத்துக்களோடு வேட்டைப் பருந்து விளையாடுவது போலப் பெண்களோடு சரசமாடிக் கொண்டிருந்தேன். இவளுடைய அழகு என்னை எப்படிப் பணிய வைத்து விட்டது என்பதை எல்லோரும் பார்க்கும் விதத்தில் இவள் ஆணையிட்டபடி இவளுடைய காலைத் தொட்டு வணங்குவது என்று முடிவு செய்து விட்டேன். பிறகு இவள் என் மனைவி ஆவாள், என்னைக் கொஞ்சி முத்தம் இடுவாள். ஆகவே, உங்களுக்குப் பாட்டுக்கள் பாடவும் இப்போது எனக்கு விருப்பம் இல்லை. என் விடுதலை போய்விட்டதிலும் வருத்தம் இல்லை! அப்படித்தானே, ராத்தா?”-அவன் விழிகளை உயர்த்தி ராத்தாவைக் கூர்ந்து பார்த்தான். அவள் பேசாமல் கண்டிப்புடன் தலையசைத்துக் கையினால் தன் காலைச் சுட்டிக் காட்டினாள். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஒன்றையும் புரிந்து கொள்ளவில்லை. ஒரு பெண்ணின்-அவள் ராத்தா என்றாலும் கூட-காலில் லோய்க்கோ ஜொபார் விழுவதைப் பார்க்காதிருப்பதற்காக எங்கேனும் போய்விடலாமா என்று கூட நினைத்தோம். எங்களுக்கு எதனாலோ வெட்கமாக இருந்தது. வருத்தமும் ஏக்கமும் கூட ஏற்பட்டன.
‘ஊம்!’ என்று ஜொபாரை அதட்டினாள் ராத்தா.
‘ஏகே, அவசரப்படாதே. நேரம் இருக்கிறது. அப்புறம் உனக்கு அலுத்துக் கூடப் போய்விடும்…’ என்று நகைத் தான் ஜொபார். எஃகு கணகணப்பது போலக் கெக்கலித்தான்.
‘ஆக, விஷயம் எல்லாம் இவ்வளவுதான், தோழர்களே! என்ன பாக்கி இருக்கிறது? ஆமாம், என் ராத்தாவின் இருதயம் அவள் எனக்குக் காட்டிய மாதிரி அவ்வளவு கடினமானதா என்று சோதித்துப் பார்ப்பது பாக்கி இருக்கிறது. சோதித்துத் தான் பார்த்து விடுகிறேனே, என்னை மன்னியுங்கள், சகோதரர்களே!”
“ஜொபார் என்ன செய்ய விரும்புகிறான் என்று ஊகிக்கக் கூட எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை, அதற்குள் ராத்தா தரையில் கிடந்தாள். அவளுடைய நெஞ்சில் பிடிவரை பாய்ந்திருந்தது ஜொபாரின் வளை கத்தி. நாங்கள் மலைத்துப் போனோம்.
“ராத்தா சுத்தியை உருவி ஒரு பக்கத்தில் எறிந்தாள். தன் கருங் கூந்தல் கற்றையால் காயத்தை அழுத்திக் கொண்டு புன்னகையுடன் கணீரென்று தெளிவாகச் சொன்னாள்:
‘விடை கொடு, ஜொபார்! நீ இப்படிச் செய்வாய் என்பது எனக்குத் தெரியும்!..’ அப்புறம் அவளுடைய உயிர் பிரிந்துவிட்டது.
புரிந்து கொண்டாயா அவளை, தம்பீ? அப்படிப்பட்ட வளாக்கும் -நான் என்றும் கடைத்தேற வகை இன்றிப் பாழாய்ப் போவேனாக-அந்தப் பேய் மகள்!
“ஆ! நானும் உன் காலில் விழுந்து வணங்குகிறேன், செருக்குள்ள அரசி!’ என்று ஸ்தெப்பி வெளி அதிர முழங்கினான் ஜொபார். பின்பு தரையில் விழுந்து, உயிரற்ற ராத்தாவின் கால்களோடு உதடுகளைப் பொருத்தீக் கொண்டு அசையாது கிடந்தான். நாங்கள் இறந்தவளுக்கு வணக்கம் தெரிவிப்பதற்காகத் தொப்பிகளைக் கழற்றிக் கைகளில் வைத்துக்கொண்டு பேசாமல் நின்றோம்.
“இந்த மாதிரி விவகாரத்தில் ஒருவன் என்ன சொல்ல முடியும் தம்பி? ஒன்றும் முடியாது! ‘இவனைக் கட்டிப் போட வேண்டும்!’ என்று அரை மனதாகச் சொன்னான் நூர். லோய்க்கோ ஜொபாரைக் கட்டிப் போட ஒருவனுக்கும் கை வந்திருக்காது. யாருக்குமே கை வந்திருக்காது, நூர் இதை அறிந்திருந்தான். அவன் சைகையை உதறி விட்டு அப்பால் போய் விட்டான். தனீலோவோ, ராத்தா ஒரு பக்கம் விட்டெறிந்த கத்தியை எடுத்து, நரை மீசையைச் சிலுப்பிய வண்ணம் நீண்ட நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கத்தியில் ராத்தாவின் இரத்தம் இன்னும் சூடு ஆறவில்லை. சுத்தி வளைவாகவும் கூர்மையாகவும் இருந்தது.
பின்பு தனீலோ ஜொபாரை நெருங்கி அவன் முதுகில் இருதயத்துக்கு நேராகக் கத்தியைச் செருகினான். ராத்தாவின் தகப்பன் ஆயிற்றே. கிழப் படைவீரன் தனிலோ!
“ஜொபார் தவிலோ பக்கம் திரும்பி, ‘இதுதான் வேண்டும்!’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டு ராத்தாவை எட்டிப் பிடிக்கப் போய்விட்டான்.
“நாங்கள் பார்த்தோம். மயிர்க் கற்றையுடன் கையை மார்பில் அழுத்தியபடிக் கிடந்தாள் ராத்தா. அவளுடைய திறந்த விழிகள் நீல வானத்தில் நிலைத்திருந்தன. அவள் காலருகே விழுந்து கிடந்தான் வீரன் லோய்க்கோ ஜொபார். தலைமயிர்ச் சுருள்கள் அவன் முகத்தில் விழுந்திருந்தன. முகம் தெரியவில்லை.
“நாங்கள் நின்றபடி யோசனை செய்தோம். கிழவன் தனிலோவின் மீசை துடித்தது. அடர்ந்த புருவங்கள் நெரிந்தன. வானத்தை நோக்கியவாறு பேசாதிருந்தான். நிலவு போல நரைத்திருந்த நூர் முகம் குப்புறத் தரையில் படுத்து விம்மி அழுதான். அவனுடைய முதிய தோள்கள் நடுநடுங்கின.
“அழுவதற்குக் காரணம் இருந்ததே. தம்பீ!
“…நீ போகிறாய். நல்லது, உன் வழியில் போ. அக்கம் பக்கம் திரும்பாதே. நேராகவே போ. ஒரு வேளை நீ வீணாக மட்கிப் போகாமல் தப்பி விடலாம். அவ்வளவு தான், தம்பீ!”
மகார் பேச்சை நிறுத்தி, புகையிலைப் பையில் சுங்கானை வைத்து விட்டு மேல் சட்டையை மார்பில் சேர்த்து இறுக்கிக் கொண்டான். மழை தூறியது, காற்று வலுத்தது, கடல் சீற்றத்துடன் ஆழ்ந்து முழங்கியது. குதிரைகள் அணையும் தறுவாயில் இருந்த நெருப்பின் அருகே ஒன்றன் பின் ஒன்றாக வந்து அறிவு சுடர்த்த பெரிய விழிகளால் எங்களைப் பார்வையிட்டு, கெட்டியான வளையமாக எங்களைச் சூழ்ந்து அசையாமல் நின்றன.
“ப்பப் பா, ஹை!’’ என்று அவற்றை நோக்கிக் கொஞ்சலாகக் கத்தி, தன் அன்புக்குரிய கரும் புரவியின் கழுத்தை உள்ளங்கையால் தட்டிக் கொடுத்தான் மகார். பின்பு என்னைப் பார்த்து, “உறங்க நேரம் வந்து லிட்டது!’’ என்று சொல்லி, மேல் சட்டையால் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு வலிய மேனியைத் தரையில் கிடத்தி மௌனமானான்.
எனக்குத் தூங்க விருப்பம் இல்லை. நான் ஸ்தெப்பியின் இருளில் பார்வையைச் செலுத்தினேன். அரசிக்குரிய எழிலும் பெருமிதமும் வாய்ந்த ராந்தாவின் உருவம் என் கண்களுக்கு முன் காற்றில் நீந்தியது. கருங் கூந்தல் கற்றையுடன் கையை மார்புக் காயத்தில் அழுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய பழுப்பேறிய மெல்லிய விரல்களின் இடுக்கு வழியாக இரத்தம் துளித்துளியாகப் பெருகி நெருப்பாய்ச் சிவந்த நட்சத்திரங்களாகத் தரையில் சொட்டியது.
அவனை அடியொற்றிப் பின்தொடர்ந்து நீந்தினான் துணிவுள்ள வீரன் லோய்க்கோ ஜொபார். அடர்ந்த கரு மயிர்ச் சுருள்கள் அவனுடைய முகத்துக்குத் திரையிட்டிருந்தன. குளிர்ந்த பெரிய கண்ணீர்த் துளிகள் அவற்றுக்கு அடியிலிருந்து சொரிந்தன…
மழை வலுத்தது. லோய்க்கோ ஜொபார், முதிய படை வீரன் தளீலோவின் மகள் ராத்தா என்னும் ஜிப்ஸி அழகர்களின் பெருமிதம் வாய்ந்த இணையைப் போற்றி ஏக்கம் ததும்பிய ஆழ்ந்த பாட்டைப் பாடியது கடல்.
அவர்கள் இருவருமோ, இரவின் இருளில் ஓசையின்றி நீந்தியவாறு சுற்றிச் சுற்றி வந்தார்கள். செருக்குள்ள ராத்தாவுக்கு இணையாக வர அழகன் ஜொபாரால் முடியவே இல்லை.



