1970 களில், பெரியாரியம் தமிழ்நாட்டில் உச்சத்திலிருந்தது.
1973 ல், பெரியார் மறைந்த பின்னும் பெரியாரியக் கருத்துக்கள் சோடை போகவில்லை.
ஆனால், 1977 களுக்குப் பின் அதிலொரு தொய்விருந்தது.
எதனால் ? யாரால் ?
இதோ இன்று (17/09/2026) பெரியார் பிறந்தநாள் சிறப்பு பதிவொன்றை கவிப்பேரரசு வைரமுத்து வரைகிறார்.
அதில் இறுதியாக இப்படி ஒரு பத்தி வருகிறது.
ஒரு தமிழ்ப் பேரறிஞர் மரணப்படுக்கையில் சொல்கிறார், இந்த நூற்றாண்டில் தமிழரிடையே இருவர் மட்டுமே நிலைபெறுவார்கள் (நினைவில் இருப்பார்கள்)
ஒருவர் பிரபாகரன், இன்னொருவர் பெரியார்.
ஆண்டாளைப் பற்றியும் இதேரீதியில் யாரோ சிலர் இப்படி எழுதினார்கள் என்றெழுதி, சங்கிகளிடையே கடும் வசைகளைப் பெற்றார் வைரமுத்து !
அத்தகைய வசைகள் ஒரு திராவிடனை பாதித்துவிடாது என்று அவாக்களால் கணிக்கப்பட்டுத்தான் Me Too பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டது !
ஆனால் அதே பாணியில் இன்று தராசுத் தட்டுகளில், ஒன்றில் பெரியார் இன்னொன்றில் பிரபாகரனை வைத்துக் காட்டியிருக்கிறார், அதுதான் என்னை உசுப்பிவிட்டது !
பெரியார் வெறுமனே தமிழர்களுக்கானத் தலைவர் அல்ல. அவர் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான விடிவெள்ளி.
அனைத்து இந்தியர்களும் பெரியாரியத்தை ஏற்றிருந்தால் ஆரியம் என்றோ புதைந்து போயிருக்கும்.
பெரியார் அசல் காந்தியவாதி. காந்தியின் பார்ப்பனியத்தை வெறுத்து அவர் காங்கிரசை விட்டு வெளியேறியிருந்தாலும் தான் இருக்கும் வரை அவர் காந்தியவாதியாகவே வாழ்ந்தார். அறப்போராட்டங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள் இதைத் தாண்ட அவர் முயன்றதே இல்லை !
ஆயுதப் போராளிகளையும் அவர் ஆதரித்ததில்லை !
இப்படி பெரியாரிடம் இருந்து பெரியாரியத்தைக் கற்றவர்கள்தான், நான் குறிப்பிட்ட 1977 க்குப் பின், 100% பிரபாகரனையும், அவருடைய ஆயுதபாணி போராட்டங்களையும், துரோகிகள் எனப் பட்டம் சூட்டி தன் இனத்தையே கொன்று குவித்த போதும், அதைத் துளி கூட எதிர்க்காது பிரபாகரனுக்கு முழு ஆதரவை அளித்தனர் !
அத்தோடு நின்றார்களா என்ன ?
புலிகளுக்கு ஆயுதம், உணவு, நிதி, இருப்பிடம், பயிற்சி என அனைத்து வகையிலான உதவிகளையும் தந்தனர். யார் ?
அறவழியில் சமூகத்தை திருத்த பாடுபட்ட பெரியார் போற்றிகள்.
அதுதான் பெரியாரியத்தின் முதல் சறுக்கல்.
எம் ஜி ஆர் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்ததால், பெரியாரியம் மங்கி பிரபாகரியம் வேகமாக காலூன்றியது, அவர்களுக்கு பக்கபலமாக திராவிடர் கழகம் மட்டுமல்லாது, அதிலிருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்த பிற திராவிட இயக்கங்களும் முழுமூச்சாக பிரபாகரியம் போற்றின !
திமுக முழுமூச்சாக பிரபாகரியத்தை ஆதரித்ததில்லை. அவர்கள் ஈழப்போராளிகள் பிரிந்து தனித் தனியாக இயங்கிக் கொண்டும், ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக் கொண்டும், கொலைகள் புரிந்துக் கொண்டும் இருக்கக் கூடாதென பாடுபட்டனர். அதுவே புலிகளுக்கு கடுமையான எரிச்சலைக் கிளப்பியது. சிறிது சிறிதாக திமுக கண் முன்னே அவர்கள் போட்டிக் குழுக்களை பலி போட்டனர் !
கடைசியில் தங்களுக்கு ஒவ்வவே ஒவ்வாத திமுக ஆட்சி கலையவும், கொலைப்பழி விழவும் புலிகள்தான் ஒத்துழைத்தனர் !
இவ்வளவு பட்டும் பிரபாகரியத்தை திராவிடக் கொள்கையாளர்கள் கைவிடவில்லை. புதுப்புது தமிழ் தேசியர்கள் அதற்குப் பின்னர்தான் உயிர் கொண்டனர். நடராஜனின் லீலைகள் அங்குதான் துவங்கியது. அவருடைய பரிசில்களால் தமிழ்த் தேசியர்களும், பெரியாரியர்களும் கைகோர்த்து தீவிர புலி ஆதரவாளர்களாகிப் போய்விட்டனர். புலிப் பூசாரிகள் என்கிற பட்டமெல்லாம் அதனால் வந்ததே !
ஈழப்போரின் உச்சகட்டத்தில் இந்த வெறி முழுக்க திமுக மீது திரும்பியது.
அன்று திராவிடம், பெரியாரியத்தோடு திமுகவையும் இத்தோடு ஒழித்துவிட வேண்டுமென முழு மூச்சாக இயங்கினர் !
2016 வரை இந்த நிலை கடுமையாக இருந்தது.
2016 ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைப்பாரென யாருமே கணிக்கவில்லை.
2014 ஊழல் குற்றச்சாட்டில் சிறை, போலி தீர்ப்பில் பெற்ற விடுதலை, 2015 ல் நிகழ்ந்த பெருவெள்ளச் சாவுகள் அவர் பெயரை கெடுத்திருந்தன.
அந்தமுறை திமுகதான் வருமென பெரும்பாலான கணிப்புகள்.
அதை உடைத்தது இந்த பிரபாகரியம்தான்.
ம ந கூ, தனித்து முதலமைச்சர் ஆசையில் போட்டியிட்ட பாமக, தமிழ் தேசியர்களின் கடும் திராவிட வெறுப்பு போன்றவை பிரபாகரியத்தால் உருவானவையே !
பெரியாரியம் கிட்டத்தட்ட தரை தட்டிவிட்டிருந்ததால் நூலிழையில் திமுக தோற்றது. மீண்டும் ஜெயலலிதா வந்தார்.
ஆனால் அதுதான், அந்தச் சம்பவம்தான் பெரியாரியத்தை அழியாமல் உயிர்ப்பித்தது. இல்லையேல் அன்றோடு அதன் மேல் நினைவிடம் எழுப்பப்பட்டிருக்கும் !
எம் ஜி ஆர், ஜெயலலிதா, ஜோசப் விஜய் போன்ற சினிமா நடிகர்களின் மாயை அழியாமல் பாதுகாப்பது பிரபாகரியம்தான்.
பெரியாரியம் விழிப்புணர்வைத் தரும். ஆனால் அது கடந்த பத்து வருடங்களாக மெல்ல எழுந்து வருவதாலும், பிரபாகரியத்தை இப்போது வரை அவர்களால் கைவிட முடியாத நிலை நீள்வதாலும், இன்னும் பல அசிங்கங்கள் அரங்கேறி மெல்ல மெல்லத்தான் மீள்வோம் !
ஒருபோதும் பெரியாருக்கு நிகராக பிரபாகரன் வரமாட்டார்.
பெரியார் சாதித்தது 1000 எனில் பிரபாகரன் சாதித்தது 0
எனக்கு பிரபாகரன் மீது எந்தக் காழ்ப்புமில்லை.
பிரபாகரனின் பேப்பர் கட்டிங்கை வீட்டில் ஒட்டி வைத்திருந்த ரசிகன் நான். அன்றையத் தந்தி இன்றைய இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர் போல என் மண்டையைக் கழுவி வைத்திருந்தது !
ஆனால் 1991 ல் நான் சுதாரித்துவிட்டேன்.
2016 ல் பலர், பலத்த காயங்களைப் பெற்று மீண்டுவிட்டனர் !
ஆனால் கவிப்பேரரசு போன்ற பெருங்கைகள் கூட இன்னும் பிரபாகரிய மயக்கத்தில் உள்ளனர்.
ஈழத்திற்கு கூட இன்று பிரபாகரியம் தேவையில்லை. அப்படி தேவையெனில் அவர்கள் வைத்துக் கொள்ளட்டும். நமக்கெதற்கு ?
நமக்கு இன்றும் என்றும் தேவை பெரியாரியம் மட்டுமே !
பெரியாருக்கு நிகரென எவரைத் திணித்தாலும் அது திராவிடத்திற்கெதிரான பகிரங்கச் சதி !
இனி ஒருபோதும் அதை அனுமதியோம் !!!


