பேரறிஞர் அண்ணாவின் மரணம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது, நான் ஆதனூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எனது நல்வாய்ப்பாக நான்காம் வகுப்பு காலாண்டுத் தேர்வு வரை ஒன்றிய தலைநகரான அலங்காநல்லூரில் படித்தேன்.
அலங்காநல்லூர் பேரூராட்சி என்பதாலும், ஒன்றியத்தின் தலைநகர் என்பதாலும் முக்கியமான ஊராக இருந்தது.
ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக உயர்நிலைப் பள்ளி பேரூராட்சிக்கு அலுவலகம், பேருந்து நிலையம், வாரச் சந்தை, எல்லாவற்றுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு, பெரியாறு கால்வாய் பாசனம் என்று பல வசதிகள் இருந்தன.
அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், அரசாங்கச் செய்திப் படங்கள், அஜந்தா தியேட்டர் என்பதெல்லாம் அலங்காநல்லூரில்தான் சாத்தியம்.
அந்த ஊரில் ஜல்லிக்கட்டு வாடி வாசலுக்கு எதிரே பெரிய விறகுக்கடை, மரக்கடை வைத்திருந்தார் தாத்தா.
நீளமாக போகிறது. இதுவரைக் கும் போதும். எனது சிறுவயதிலேயே எனது ஆதனூர் கிராமத்தில் என் வயதுச் சிறுவர்களைக் காட்டிலும் எனக்கு கூடுதல் அனுபவம் கிடைக்க இதுவே காரணமாக இருந்தது.
எனது நடு சித்தப்பா வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், ஆதனூர் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். குடும்பமே காங்கிரஸ் குடும்பமாக இருந்தது. கடைசிச் சித்தப்பா பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போதே, திமுக போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குப் போனவர். திமுகவில் ஒன்றிய பொறுப்பாளராக இருந்தார். அவரை வைத்தும், வழக்கறிஞரான உறவினர் திமுக வேட்பாளராக தேர்தலில் நின்றதாலும் திமுகவுக்கு ஆதரவாக குடும்பம் மாறியது.
திமுக வெற்றிக்குப் பிறகுதான் எனது சித்தப்பாவுக்கு திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, நடு சித்தப்பா அலங்காநல்லூருக்கு குடிபெயர விரும்பினார். அதன் காரணமாகத்தான் எனது படிப்பை இடை முறித்து சொந்த ஊரான ஆதனூருக்கு வந்தோம்.
1969 பிப்ரவரி மாதம் 3 ஆம் நாள் அண்ணா மறைந்தார். பஞ்சாயத்து ரேடியோ எங்கள் வீட்டில்தான் இருக்கும். பேட்டரியில் இயங்கக்கூடியது. ஒரு ஸ்பீக்கர் வேறு கட்டியிருப்பார்கள். அண்ணா மரணமும், அதைத் தொடர்ந்து சோக இசையும் ஒலிக்கத் தொடங்கியது.
ஊர் மந்தையில் பரபரப்பாகியது. அண்ணா படம் வைத்து அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், எல்லா ஊர்களிலும் பாடையில் ஒரு உருவ பொம்மையை வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. தண்ணீர் இருக்கும் ஓடைக் கரையில் அடக்கம் செய்யப்பட்டது.
தலைநகர் சென்னையில் நடைபெற்ற அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றோர் எண்ணிக்கை உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. இன்றுவரை அந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை.
அண்ணாவின் வாழ்க்கை முழுவதுமே பல அற்புதங்களால் நிறைந்தது. ஒரு சாமானியர் தனது சிந்தனையில் உருவாக்கிய ஒரு இயக்கம், தொடங்கிய 18 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்கள் மனங்களை வென்றது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாநிலக் கட்சியாக உருவெடுத்தது முதல் அற்புதம்.
அன்று முதல் தமிழ்நாட்டில் வேறு எந்தத் தேசிய கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பது இன்னொரு அற்புதம்.
1967வரை பண்ணையார்களும், நில உடமையாளர்களும், தொழில் அதிபர்களும் அரசியலில் அதிகாரம் செலுத்தினார்கள். அந்த அரசியலை, சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த, சாதிகளைக் கடந்த சாமானியர்களின் கைகளுக்கு மாற்றியது மேலும் ஒரு அற்புதம்.
1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா, 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி மறைந்தார். இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ய இரண்டு நாட்கள் குறைவாகவே ஆட்சியில் இருந்தார்.
ஆனால் அந்த இரண்டு ஆண்டுகளில் அதுவரை தமிழ்நாடு கண்டிராத பலவற்றை அவர் நிகழ்த்திக் காட்டினார்.
இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டினார். அந்த மாநாடு நடைபெற்ற அடையாளமாக சென்னைக் கடற்கரைச் சாலையில் பத்து சிலைகள் இன்றும் கம்பீரமாக நிற்கின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் அவருடைய சொந்த ஊரிலேயே தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரை சாகும்படி விடப்பட்டார்.
ஆனால், அண்ணா முதலமைச்சராகி, தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயரை அதிகாரபூர்வமாக சூட்டினார். அதுமட்டுமின்றி, அவரே, தமிழ்நாட்டில் தமிழும் ஆங்கிலமுமே ஆட்சி மொழி என்பதை உறுதிப்படுத்தினார்.
அண்ணா நிகழ்த்திய அற்புதங்கள் அனைத்தும் இனி எக்காலத்திலும் முறியடிக்க முடியாதவை. அவரைப் பற்றி நான் படித்தவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தேசியம் என்பதே புரட்டு. அது காலிகளின் புகலிடம் என்று தந்தை பெரியார் சொன்னார். இன்றைக்கு இந்திய தேசியவெறியை தூண்டிவிடும் காவிகளின் கூடாரம் பெரியார் சொன்னது உண்மை என்பதை நிரூபிக்க போதுமானதாக இருக்கிறது.
எல்லாவற்றையும் ஒற்றைமயமாக்கல் என்பதே தேசியத்தின் உள்ளடக்கம் என்பதை சமீபத்திய பாஜக ஆட்சி தெளிவாக உணர்த்தி வருகிறது. பல்வேறு இனக்குழுக்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு உணவுப்பழக்கங்கள் என்று வேறுபட்ட மக்கள் அடங்கிய இந்திய தேசியத்தை நோக்கி அண்ணா ஏராளமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்திய தேசியத்தை வெறும் கற்பிதம் என்றே அண்ணா கூறினார்.
அண்ணாவின் திராவிட நாடு கோட்பாடு நிறைவேறியிருந்தால் அது உலக ஜனநாயக அமைப்புகளில் மிகவும் உயர்ந்ததோர் இடத்தைப் பெற்றிருக்கும். இந்திய அரசு கொண்டுவந்த பிரிவினை ஒழிப்பு சட்டத்தைத் தொடர்ந்து அண்ணா தனது திராவிடநாடு கோரிக்கையை கைவிட நேர்ந்தது. ஆனால், தனது திராவிட நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டாரோ, அந்த சிறப்பு அம்சங்கள் அனைத்தும் இந்திய அரசில் இடம்பெற வேண்டும் என்று முழக்கமிட்டார். அதாவது தனது திராவிடநாடு கொள்கையை இந்தியா முழுமைக்குமாக பொருத்தினார்.
சமத்துவம் என்பது அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற புதிய புரிதலை அறிமுகப்படுத்தினார் அண்ணா. இயக்கத்தைத் தொடங்கிய அண்ணா 18 ஆண்டுகளில் அதை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். ஆட்சி முறைக்கும், கட்சி செயல்பாடுக்கும் புதிய இலக்கணங்களை வகுத்து அமல்படுத்தினார். வீட்டுக்கும் ஆட்சிக்கும் இடையே இடைவெளி வேண்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையே இடைவெளி வேண்டும் என்றெல்லாம் புதிய நடைமுறைகளை தனது தம்பியருக்கு கற்பித்தார். அவருடைய நோக்கத்தை உலகமே வியக்கும் வகையில் கலைஞர் முன்னெடுத்தார்.
ஆம், நெருக்கடி நிலையின்போது அதை எதிர்த்து முதன்முதலில் பிரகடனம் செய்தபோதும், சமீபத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் இந்திய அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும் திமுக என்ற இயக்கத்தை சர்வதேச நாடுகள் கவனித்ததை மறந்துவிடக்கூடாது.
இன்றுவரை ஜனநாயகத்திற்கு ஒரு ஆபத்து என்றால் அதை பாதுகாக்க எழும் முதல் குரல் திமுகவுடையதாகவே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதில் கொல்கத்தா ஆய்வறிஞரான கர்க சட்டர்ஜி, “1965ல் அண்ணா நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம்தான், வங்காளியான என்னை இந்தி படிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாமல் தடுக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் ப்ரவ்ன் பல்கலைக்கழக ஆய்வறிஞர் பிரேர்ணா சிங், “தமிழ்நாட்டில் மாநில உணர்வுடன், சமூகநலத் திட்டங்கள் பிணைக்கப்பட்டதற்கு சிறந்த குறியீடு அண்ணாவின் ரூபாய்க்கு ஒருபடி அரிசி” திட்டம் என்று கூறியிருக்கிறார்.
ஆம், அவர் கூறுவது உண்மைதான். அண்ணா படி அரசி 1 ரூபாய்க்கு தருவோம் என்று அறிவித்தபோது கேலி செய்தார்கள். ஆனால், அவரைத் தலைவராக கொண்ட இயக்கங்களோ, மாதம் 20 கிலோ அரிசியை இலவசமாகவே கொடுத்து சாதித்திருக்கின்றன என்பதையே இவர் சொல்ல வருகிறார்.
மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் “அண்ணாவின் எளிமையும், தன்னலமற்ற தன்மையும் திராவிட இயக்கத்துக்கான அவருடைய அர்ப்பணிப்பும் அவரை கற்பனைக்கெட்டாத புகழ்கொண்ட மக்கள் தலைவராக்கின” என்கிறார்.
அதுமட்டுமின்றி, இந்தியாவை மூழ்கடிக்க முயன்ற சமஸ்கிருதம் என்ற கோலியாத் அரக்கனை வீழ்த்திய எளிய டேவிட் என்று அண்ணாவை ஒப்பிடுகிறார்.
தமிழுடன் ஆங்கிலத்துக்கு அவர் அளித்த முக்கியத்துவம்தான் இன்றைக்கு உலகம் முழுவதும் இந்தியர்கள் எளிதாக தொடர்பு கொள்வதற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. உலக மக்களுடன் சரளமாகப் பேசுவதற்கு ஜன்னலாக ஆங்கிலம் பயன்படுவதற்கு அண்ணாவே காரணம் என்று பொருளாதார அறிஞரும், மூத்த பத்திரிகையாளருமான சுவாமிநாதன் எஸ்.அங்கலாசாரிய அய்யர் குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரிவினை தடுப்புச் சட்டத்தைத் தொடர்ந்து திராவிட நாடு இலக்கை அண்ணா கைவிட்டார். ஆனாலும், கூட்டாட்சி, சுயாட்சி என்று புதிய இலக்குகளை அவர் நிர்ணயித்தார்.
1947 முதல் 1962வரை காங்கிரஸ் கட்சி தனது அமைச்சரவையில் இஸ்லாமியருக்கு இடம் கொடுக்கவில்லை. இதை அண்ணாதான் சுட்டிக் காட்டினார். அதன் பிறகுதான் 1962ல் கடையநல்லூர் மஜீத்துக்கு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் கொடுத்தது என்பதும் மறக்க முடியாத உண்மை ஆகும்.
இன்னொரு விஷயமும் இருக்கிறது. முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத், திராவிட நாடு கோரிக்கையை ஏற்க மறுத்தார். ஆனால், அதையும் மீறி பெரியாரும் அண்ணாவும் இஸ்லாமியர்களுடன் மேடைகளைப் பகிர்ந்துகொண்டனர். அதன்மூலம், பொதுவெளியில் இஸ்£லமியர்கள் ஒதுக்கப்படுவதற்கு முடிவு கட்டினார்கள் என்பதை இஸ்லாமியர்கள் இன்றைக்கும் நினைவில் கொள்கிறார்கள்.
இந்தக் கட்டுரையின் நோக்கம், அண்ணாவின் ஆற்றலை, அவருடைய எளிமையை, அவருடைய மேதைமையை, அவருடைய அரவணைப்பை, அவருடைய மனிதநேயத்தை, உலகளாவிய சிந்தனை வளத்தை நினைவுபடுத்துவதுதான்.
ஏற்கெனவே கட்டுரை நீண்டுவிட்டது. ஆனாலும், இன்றைய தலைமுறைக்கு அண்ணாவை, பெரியாரை, கலைஞரை நினைவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. எனினும், நீளம் கருதி சில விஷயங்களை மட்டும் குறிப்பிட்டு முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.
மகாத்மா காந்திக்கு அடுத்தபடியாக மாற்றுத்தரப்பினரும் மதித்துப் போற்றும் அளவுக்கு ஆற்றல் பெற்றவராக தமிழ்நாட்டில் அண்ணா மட்டுமே இருந்தார். இங்கேயுள்ள முக்கியமான கட்சிகளின் பொருளாதார கண்ணோட்டத்துக்கு அண்ணா மாற்றுப் பொருளாதாரக் கண்ணோட்டத்தை கொண்டிருந்தார்.
அண்ணா முன்வைத்து பிரச்சாரம் செய்த திராவிட நாடு குறித்த விவரங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியாது. திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாமல், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று புலம்புகிறது ஒரு கூட்டம்.
ஆம், திராவிட நாடு என்ற கோட்பாடு இந்திய அரசை பாடாய் படுத்தியது. திமுகவையே தடை செய்யும் அளவுக்கு அந்தக் கோட்பாடு இந்திய அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தக் கட்டுரை இதை அறிய உதவும் என்று நினைக்கிறேன்.
ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், கார்த்திகேசு சிவத்தம்பியிடம் ஒரு நேர்காணல் நடத்தினார். அதில், அண்ணாவும், கலைஞரும் அறிவார்ந்த கவர்ச்சி மூலமாக மக்களை அரசியலுக்கு ஈர்த்தார்கள். ஆனால், எம்ஜிஆர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. வெறும் வாக்குகளுக்கான வெகுஜனக் கவர்ச்சியையே மூலதனமாக வைத்து மக்களை இழுக்க முயன்றார்.
திராவிட நாடு கோரிக்கையை தடுப்பதற்காக மத்திய அரசு பிரிவினை தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் அண்ணா பேசினார். தனது உரையில்
“இந்த மசோதாவை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் ஒரு தனி ஆளை சமாளிக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தையே திருத்துகிறார்கள் என்று மக்கள் கருதுவார்கள்” என்று கிண்டல் செய்தார்.
அதையும் மீறி, 1962ல் அண்ணாவை சமாளிப்பதற்காக பிரிவினைவாத தடைச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
அதன் தொடர்ச்சியாக பாஜக அரசு இப்போது, தீவிரவாதத் தடுப்புச்சட்டத்தை கூர்மைப் படுத்தியது. எதிர்க்கட்சிகளை மிரட்ட பல சட்டங்களை அவ்வப்போது கொண்டு வருகிறது.
ஒற்றையாட்சிக்கும், இந்தி ஆதிக்கத்துக்கும் எதிராக ஓங்கிக் குரல் எழுப்பிய அண்ணாவை, அற்புதங்களின் குவியல் என்றே கூறலாம். அவருடைய குரலின் தொடர்ச்சி தமிழகத்தில் இன்னும் உயிர்த்திருக்கிறது என்பதே நமது ஆறுதல்.•


