Trending - உதயமுகம் டி.வி

தொலைபேசி – சில சுவையான உண்மைகள் – ஆதனூர் சோழன்

“மிஸ்டர் வாட்சன், இங்கே வாங்க. நான் உங்களைப் பார்க்கனும்.”

இதுதான் முதல் தொலைபேசிப் பேச்சு. ரொம்ப சுருக்கமானதுதான். பக்கத்து அறையில் இருந்த வாட்ஸனோடு கிரஹாம்பெல் பேசியதுதான். ஆனால் உலகையே புரட்டிப் போட்ட முதல் பேச்சு.

இன்றைக்கு உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்து விட்டது.

ஸ்காட்லாந்தில் பிறந்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்.  1876 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பாஸ்டனில் உள்ள அவரது ஆய்வகத்தில் இருந்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்தான் தொலைபேசிக்கான காப்புரிமையைப் பதிவு செய்திருந்தார்.

தனது கண்டுபிடிப்பை உலகிற்கு நிரூபிக்கவே தனது உதவியாளருடன் பேசிச் சோதனையை நிகழ்த்தினார்.

அன்றுமுதல் தொலைபேசி யுகம் தொடங்கியது.

உலகின் மூலை முடுக்குகள் அனைத்தையும் உள்ளங்கைக்குள் கொண்டுவந்த அந்த புரட்சி இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறது என்பது எதிர்கால ஆச்சர்யமாக இருக்கும்.

இனி தொலைபேசி குறித்து சில உண்மைகளை பார்க்கலாம்…

“தொலைபேசியின் தந்தை” அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்று அறிகிறோம். ஆனால், தொலைபேசி என்ற உள்ளடக்கத்தை உருவாக்கிய முதல் நபர் அவர் அல்ல.  

இத்தாலியைச் சேர்ந்த அன்டோனியோ மியூச்சி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹான் பிலிப் ரீஸ் ஆகிய இருவரும் ஏற்கெனவே ஒலியைக்-கடத்தும் கருவிகளை வடிவமைத்து இருந்தனர்.

அதுமட்டுமல்ல, பெல் தனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைத் தாக்கல் செய்த அதே நாளில், இல்லினாய்ஸ் நகரைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான எலிஷா கிரேயும், தனது தொலைபேசி கண்டுபிடிப்புக்காக காப்புரிமை விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.

அவருடைய விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. காப்புரிமை பெற்ற கிரஹாம்பெல் மூன்றாவது நாளில் தனது கண்டுபிடிப்பான தொலைபேசிக் கருவியை செயல்படுத்திக் காட்டினார்.

இதையடுத்து கிரே சட்டப்போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால், 1888ல் அமெரிக்க உச்சநீதிமன்றம் பெல்லுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

1879-ல், மசாசூசெட்ஸ் மாநிலத்தின் லோவெல் நகரில் தட்டம்மை நோய் பரவியது. நோய் தாக்குதலுக்கு உதவி பெற தொலைபேசி எண்கள் முதன்முதலா அறிமுகம் செய்யப்பட்டன.

அதுவரை பெயர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இதையடுத்து தொலைபேசி சந்தாதாரர்களுக்கும் எண்களைக் கொண்டே பெயரிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான உள்ளூர் சந்தாதாரர்களின் பெயர்களைத் தெரிந்துகொள்ளாமலேயே அழைப்புகளைக் கையாளும் திறன் வளர்ந்தது. ஆனால், சந்தாதாரர்கள் தங்களை வெறும் எண்களாக கருதுவதை எதிர்த்தனர்.

தங்களை மனிதர்களாக கருத வேண்டும் என்று கூறி, இந்த எண்கள் முறையை எதிர்த்து சங்கம் உருவானது.

19ஆம் நூற்றாண்டில் கனெக்டிகட்டைச் சேர்ந்த வில்லியம் கிரே என்பவர், தனது மனைவியின் மருத்துவத்துக்காக மருத்துவருக்கு போன் செய்ய விரும்பினார். ஆனால் அவருக்கு தொலைபேசி கிடைக்கவில்லை.

அதுவரை, தனியார் தொலைபேசி சந்தா சேவையை பெறுவதற்கு நிறைய பணம் செலவாகியது. வில்லியம் கிரே தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு, நாணயத்தால் இயங்கக்கூடிய தொலைபேசியை உருவாக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது.

அவர் உருவாக்கிய முதல் கட்டணத் தொலைபேசி 1889-ல் கனெக்டிகட்டில் உள்ள ஒரு வங்கியில் செயல்படத் தொடங்கியது. அதுமட்டுமல்ல, 1902-க்குள், அமெரிக்கா முழுவதும் அதுபோன்ற சுமார் 81 ஆயிரம் கருவிகள் இயங்கின. நூற்றாண்டின் இறுதியில் அந்த எண்ணிக்கை 2 மில்லியனாக உயர்ந்தது,

பின்னர் கைபேசி பயன்பாடு பரவலானதால் அது தலைகீழாக மாறியது. 2018ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ஒரு லட்சம் கட்டணத் தொலைபேசிகள் மட்டுமே எஞ்சியிருந்தன.

ஒருபக்கம் கனெக்டிகட் நகரில் கிரே தனது கட்டணத் தொலைபேசியைச் சரிசெய்து கொண்டிருந்தார். அதே காலகட்டத்தில், கன்சாஸ் நகரத்தைச் சேர்ந்த அல்மான் பி. ஸ்ட்ரோஜர் என்பவர் தானியங்கி தொலைபேசி நிலையத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இவர் சவ அடக்கம் செய்யும் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்.

சவ அடக்கம் செய்யும் ஒருவர் ஏன் இந்த முயற்சியில் ஈடுபட்டார். அந்த அளவுக்கு தனியார் தொலைபேசி இயக்ககங்கள் ஆதிக்கம் செலுத்தின. எனவே, மின்காந்த சக்தியால் இயங்கும் ஒரு தானியங்கி தொலைபேசி நிலையத்தை உருவாக்க விரும்பினார்.

1891ல் காப்புரிமை பெற்று, அடுத்த ஆண்டே இண்டியானா மாநிலத்தின் லா போர்ட் நகரில் செயல்படத் தொடங்கியது. 1930-களில் மேம்பட்ட தானியங்கித் தொழில்நுட்பத்தின் வருகையால் தனியார் தொலைபேசி இயக்ககங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2021-ஆம் ஆண்டு வாக்கில், “தனியார் தொலைபேசி ஆபரேட்டர்கள்” வெறும் 5 ஆயிரம் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது.

முதல் மொபைல் தொலைபேசி அழைப்பு, சுமார் 36 கிலோ  எடையுள்ள ஒலிபரப்பு சாதனங்கள் ஏற்றப்பட்ட ஒரு காரிலிருந்து, 1946ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இன்று நாம் அறிந்த கையடக்க செல்போனின் தோற்றத்தை, மோட்டோரோலா நிறுவனத்தின் நிர்வாகி மார்ட்டின் கூப்பரின் பணியில் இருந்து தெரிந்து கொள்வோம்.

அவர், 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மிட் டவுன் மன்ஹாட்டன் தெருவிலிருந்து ஒரு அழைப்பின் மூலம் தனது நிறுவனத்தின் மாடலை டெமோ செய்து காண்பித்தார்.

அந்த வெற்றிக்குப் பிறகு, முதல் செல்போன் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, மோட்டோரோலா டைனாடேக் 8000X என்ற பெயரில் மார்க்கெட்டுக்கு வந்தது. சுமார் 1 கிலோ எடையுள்ள அந்த கனமான சாதனம், $3,995 அதாவது இந்திய மதிப்பில் 3 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

10 மணிநேரம் சார்ஜ் செய்தால் 30 நிமிடங்கள் வரை அதில் பேச முடிந்தது.

தொலைபேசி வரலாற்றில் அடுத்த பெரிய பரிணாம வளர்ச்சியாக ஸ்மார்ட் போன் அறிமுகமானது. 1992ல் ஐபிஎம் நிறுவனத்தின் சைமன் பர்சனல் கம்யூனிகேட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம்  பக்கங்கள், தொலைநகல்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பும் திறன்கொண்ட செல்போனாக அது இருந்தது.

அப்போது அதற்கு ஸ்மார்ட் போன் என்ற பெயர் இல்லை. என்றாலும், உலகின் முதல் ஸ்மார்ட்போனாக அது இருந்தது. பல தொழில்நுட்ப முன்னோடிகளைப் போலவே, சைமனும் பெரியதாகவும், விலை உயர்ந்ததாகவும், குறுகிய காலமே நீடித்ததாகவும் இருந்தது.

ஆகஸ்ட் 1994-ல் அந்தத் தொலைபேசியின் வணிக வெளியீட்டைத் தொடர்ந்து, ஐபிஎம் நிறுவனம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அந்தத் தயாரிப்பை நிறுத்துவதற்கு முன்பு சுமார் 50 ஆயிரம் செல்போன்களை மட்டுமே விற்றது. ஆனால் 2023-ன் தொடக்கத்தில், உலகம் முழுவதும் 600 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். இன்றைய கணக்குப்படி 740 கோடி ஸ்மார்ட் போன்கள் ஆக்டிவாக இயங்குகின்றன என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *