Trending - அரசியல்

கலைஞர் கருணாநிதியும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும்! – கண்ணதாசன் எழுதிய கடிதம்

உங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, எனக்கு இருக்கிறது.

ஒரு சோஷலிஸ்ட் ஜாதகத்தை நம்பலாமா என்கிறீர்களா?

நம்பலாம். ஜாதகத்தைக் காட்டி ஒருவன் ஏற்றம் பெறவும், ஒருவன் ஏங்கித் தவிக்கவும், சமுதாயம் அனுமதிக்கக் கூடாதே தவிர ஜாதகத்தைக் கொண்டு நிகழ்ந்த நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதில் தவறில்லை.

ஜாதகத்தின் சில கணிதங்கள், என்னை நம்ப வைத்திருக்கின்றன.

இது போன்ற நம்பிக்கை கொண்டவர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள்.

ஒருவன் பிறந்த தேதியை வைத்துச் சொல்லப்படும் குணாதிசயங்கள், மேல்நாடுகளில் அதிகம்.

ஒரே தேதியில் பிறந்த இரண்டு பேருக்குள் பெரும்பாலும் ஒற்றுமை இருக்கிறது.

புகழ் பெற்ற ஜவாகர்லால் நேருவுக்குப் பிறகு அவரது மகளையும், ஆற்றல்மிக்க அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியையும் காலம் நமக்குக் காட்டுகிறது.

நான் முன்பே சொன்னது போல், அண்ணாவிடம் இல்லாத சில குணவிசேஷங்கள் கருணாநிதியிடம் உண்டு.

கட்சி லாகனிலிருந்து ஆட்சி லாகன் வரை அவர் கையிலே இருக்கிறது.

தொண்டர்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதிலிருந்து, நிர்வாக அலுவலர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பது வரை, ஒரு தனித் திறமையை அவரிடம் முடிகிறது.

ஃபைல்களை தூக்கிப் போடாமல், மனமளவென்று வாசித்து முடித்து, உடனுக்குடன் பைசல் செய்யும் திறமை அவருக்கு இருக்கிறது.

அவருக்கு வயது கொஞ்சம் குறைவாக இருப்பதால், அகில இந்தியாவிலும், அவர் திறமை இன்னும் உணரப்படாமல் இருக்கலாம்.

ஆனால் இந்திய வரலாற்றில் அவர் ஒரு பகுதி என்பதை காலம் காட்டத்தான் போகிறது.

அவர் இன்னும் நீண்ட காலம் வாழ நான் பிராத்திக்கின்றேன்.

வளர்தோங்கிய ஆலமரத்தின் விழுதுகள் பூமியைத் தொடும் நேரம்.

வளமான மழைக் காலத்தில் குதித்தாடும் தவளைகள் போல் தமிழர்களும் மகிழ்ச்சி கொண்டாடும் நேரம்.

அமைதி நிரம்பிய சமுதாயம் காட்சியளிக்கும் தேரம்.

கோபுரம் போன்ற வீடுகளில் குடிசைவாசிகள் குடியேறிக் கொண்டிருக்கின்ற நேரம்

தெருத் தெருவாக அலைத்து, ‘அம்மா தாயே’ என்றலறி ஐந்து பத்துக் காசுகளுக்கும் எச்சில் இலைகளுக்கும் சண்டை போடும் பிச்சைக்காரர்கள், ‘நாங்களும் குடிமக்கள் தான். கவுரவமான வாழ்க்கை வாழ்பவர்கள்தான். என்று காட்டிக் கொள்ளப் போகும் நேரம்.

தமிழகம் தழைத் தோங்கும் இந்த நேரத்தில் அதன் காவல் தலைவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

பாதுஷா அக்பருக்குப் பிறகு பாரதம் ஒரு இந்திராவையும் மூவேந்தர்களுக்குப் பிறகு தமிழகம் ஒரு கருணாநிதியையும் சந்திக்கின்றன.

பிறந்த தேதி கொண்டு கணிக்கும் ஆங்கிலப் புத்தகங்களில், ஒரே தேதியில் பிறந்த பிரமுகர்கள் சிலரைக் குறிப்பிடுகிறார்கள்.

அப்படி ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த போது கருணாநிதி பிறந்த ஜுன் 3ஆம் தேதியன்று யார் யார் பிறந்தார்கள் என்று பார்த்தேன்.

அவர்களிலே முதற் பெயராகத் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பெயராகும்.

ஜூன் 3ஆம் தேதி பிறந்தவர்களின் குணாதிசயங்களையும் அது விவரித்தது.

கவர்ச்சிகரமாகப் பேசக் கூடியவர்கள்., பழகிய நண்பர்களைப் பற்றுவிடாமல் அணைத்துக் கொள்ளக் கூடியவர்கள்.

காரியங்களில் வெற்றி பெறுவதற்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்கக் கூடியவர்கள்.

நடக்காத விஷயங்களைப் பற்றிச் சிந்திக்காதவர்கள். தொலை நோக்கு உடையவர்கள்.

வெற்றியை கொண்டாடவும், தோல்வியை நிதானத்தோடு தாங்கித் கொள்ளவும் சக்தியுள்ளவர்கள். குடும்பத்துப் பாசம் மிக்கவர்கள் என்றெல்லாம் ஜுன் 3ஆம் தேதி பிறந்தவர்களின் குணம் விவரிக்கப் பட்டிருக்கிறது.

அதுமட்டுமா?

அவர்களது உடல் கூறுகள் பற்றியும், உணவிலே பிரியம் உள்ளவர்களா, இல்லாதவர்களா எனபது பற்றியும், அவர்களுக்கு என்ன நோய் வருமென்பது பற்றியும் கூட அது விவரிக்கிறது.

ஜுன் 3ஆம் தேதி பிறந்தவர்களுக்கு லேசான கண்வலி இருக்குமாம்.

அந்தப் புத்தகம் எழுதப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு.

அந்த நூலாசிரியன் சொல்லும் கண்வலி மட்டுமின்றி அதே குணாதிசயங்களும் கருணாநிதியிடம் அமையக் கண்டேன்,

இயற்கையாகவே அவரது ஆற்றல்களை நோக்கும் போது எனக்கு ஏற்படுகிற ஆச்சரியத்தை அந்த நூல் உறுதி செய்தது.

ஐத்தாம் ஜார்ஜ் மன்னரின் வாழ்க்கையோடு கருணாநிதியின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், கருணாநிதி மன்னரல்லவே தவிர, ஜனநாயகத்தின் மன்னர்களுக்குச் சமான இடத்தில் அவர் இருக்கிறார்-

அமர்ந்தது மட்டுமின்றி அந்த இடம் அவருக்குக் கிடைத்தது நியாயம் என்பதையும் உறுதி செய்து விட்டார்.

அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியைத் தவிர வேறு யாராவது, இவ்வளவு சாமர்த்தியமாக, திறமையாக இந்தப் பதவியை ஏற்று நிர்வகித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

இந்திய அரசியல் வானத்தில், நிலைத்திருக்கக்கூடிய நட்சந்திரங்கள் சிலவே உண்டு.

அதிலும் பல துறைகளிலும் பேர் சொல்லக்கூடிய ஒரே திறமையானவர் கருணாநிதியாவர்.

இயற்கைதான் வாரிசுகளை எவ்வளவு தெளிவாக உருவாக்கியிருக்கிறது!

இப்படி நான் சொல்வதால் இடைக் காலத்தில் இருந்தவர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்று பொருளல்ல.

அங்கே நேருவைவிட, தான் துணிச்சலுடையவர் என்பதை இந்திரா நிரூபித்திருக்கிறார்.

இங்கே அண்ணாவைவிட ஆற்றலுடையவர் என்பதை கருணாநிதி நிரூபித்திருக்கிறார்.

ஆகவே நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்த இரண்டு தலைவர்கள் என இவர்களை நான் கருதுகிறேன்.

உடம்பார் அழியின் உயிரால் அழிவெய்தி படு மெய் ஞானம் சேரலும் மாட்டார்” என்னும் மூதுரையை மனதில் கொண்டு இவர்கள் உடல் நலத்தோடு பல காலம் வாழ்ந்து, மெய்ஞானிகளாகத் திகழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,

ஆகவே இன்று இவர்களில் நான் கருணாநிதிக்காகப் பிரார்த்திக்கிறேன்.

அன்பும் பாசமும் நிறைந்த அந்தக் கண்கள் என்றும் ஒளி நிறைந்து திகழ வேண்டும்.

அணைப்பதிலும் பிரிப்பதிலும் வல்ல அந்த நெஞ்சம் என்றும் அமைதியுற்று வாழவேண்டும்.

துன்ப காலங்களில் அவனை விட்டு நீங்கா திருக்கும் அந்தப் புன்னகை அந்த முகத்தில் என்றும் திகழ வேண்டும்.

நட்புக்கோர் இலக்கணமாய், நல்லவர்க்கு வழிகாட்டியாய், தொண்டருக்குத் தொண்டனாய், தலைவருக்குத் தலைவனாய்த் திகழும் நண்பர் கருணாநிதி இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியமாய் வாழ வேண்டும்.

“கட்டுமாறு உடலுறுதி வேண்டும்,”

“விசையுறு பந்தினைப் போல் – மனம் வேண்டியபடி செல்லும் உடல் வேண்டும்!” என்றெல்லாம் பாரதி பாடினாரே அந்தப் பாட்டின் பொருளாக அவர் திகழ வேண்டும்.

சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் மிக்க அவரது சேனை தமிழகத்துக்கு நெடுநாள் தேவை,

அவரோடு பழிகிய காலங்கள் மீண்டும் என் நினைவுக்கு வருகின்றன.

கால தாமதமின்றிக் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பகலில் மூன்று மணி ஆனாலும் உணவு உட்கொள்வதையே மறந்து பயணம் போவார்.

இரவு இரண்டு மணி வரை பேசச் சொன்னாலும் பேசுவார்.

சுவையான – விதமான – உணவு வகைகளைத் தேடி அலைய மாட்டார்.

வெட்ட வெளியில் துண்டை விரித்தும் படுத்துத் தூங்குவார்.

கட்சி மொழி- நாடு என்பதிலேயே கவனமாக இருப்பார்.

அவர் பட்டபாட்டுக்கு பெற்ற பதவி மிகவும் குறைவே!

அரசியலுக்கு அப்பால் அன்புக்குரிய நண்பனென்ற முறையில் அவர் பல்லாண்டு வாழ நான் பிரார்த்திக்கிறேன்.

நான் பகைமை பாராட்டிய காலங்களிலும் பழைய நினைவுகளைப் பசுமையாக வைத்திருந்து இன்று அவ்வப்போது அவர் நினைவு படுத்தும்போது எனது உணர்ச்சிகளை எண்ணி நான் கலங்குவதுண்டு.

என்னுடைய ஆயுள் குறைவாகவும் அவருடைய ஆயுள் அதிகமாகவும் இருக்குமானால் அதுவே இறைவன் எனக்குச் செய்யும் கடைசி உதவியாகும்.

தமிழாய்ந்தோரையெல்லாம் அவர் கௌரவித்தது போல் வேறு யார் கௌரவித்தார்கள்?

சேலம் கவியரங்கில் நான் பாடியது போல், அவர் பதவியில் இருக்கும்போதே என் வாழ்வின் முடிவுகள் வர வேண்டும். உலகத்திற்கு என்னைக் காட்ட அவர் ஒருவர் தான் இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஆகவே இறைவனின் முன் நான் மண்டியிட்டுச் செய்யும் பிரார்த்தனை – அவர் ஒரு நாள் கூட நோய்வாய்ப் படாமல் நீண்டகாலம் வாழ வேண்டுமென்பதே

கற்பக விருட்சங்களை விறகுகளாக்க கடவுள் விரும்ப மாட்டான்.

எனது ஆன்மாவுக்கும் எழுத்துக்களுக்கும் சக்தி இருக்குமானால் அவை நிறைவேற்ற வேண்டிய பனி ஒன்றே!

அது கருணாந்தியை ஆரோக்கியமாக வைத்திருப்பதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *