Trending - கட்டுரைகள்

பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar

வெகு பிரம்மாண்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நன்னீராட்டு விழா நடந்தேறியுள்ளது.

பொதுவாக வெளியூர்க்காரர்கள் கேட்பார்கள், மதுரைக்காரர்கள் ஊர்ப்பெருமை அதிகம் பேசுகிறீர்களே, மதுரைக்காரர்கள் எங்கு போனாலும் மற்றவர்களோடு இணைந்து விடுகிறீர்களே என்று…

உண்மை தான், ஏனென்றால் மதுரைக்கு மக்கள் மட்டுமே கதி. மதுரை என்ற ஊருக்கு இருக்கும் கலாச்சார நாகரிகம் அதன் மக்களால் தான் உயிர்ப்புடன் இருக்கிறது. மதுரையின் மக்களுக்கு மதுரை என்ற ஊரே பேசுபொருள், வாழ்வியல் எல்லாம்.

அத்தகைய மக்களைத்தான் தடுத்து நிறுத்தி பிரம்மாண்ட விழா நடத்தியிருக்கிறது அரசு.

கோயிலைச் சுற்றியிருக்கும் வீதிகளில் மாசு கட்டுப்பாட்டு மற்றும் நெரிசலைக் குறைக்க வண்டிகளைத் தடை செய்திருந்தார்கள்.

விழா அன்று விஐபிக்களுக்காக வண்டிகளை அனுமதித்து பாதசாரிகளை, சாமான்யர்களைத் தடுத்திருக்கிறார்கள்.

ஆசியாவின் பெருந்திரளான மீனாக்ஷி திருக்கல்யாணம், அழகர் திருவிழாக்களில் மக்கள் நகர்ந்துகொண்டே இருப்பார்கள். அவற்றில் பாதி கூட இந்தக் கூட்டம் இல்லை. ஆனாலும் தடுத்திருக்கிறார்கள்.

விஐபி பாஸ் விநியோகித்து அவர்களை மட்டும் கோயில் உள்ளே அனுமதித்திருந்தால் கூட போதுமானது. ஆனால் கோபரத்தை அருகிலிருந்து பார்க்கவே நிறுத்தியிருக்கிறது அரசு இயந்திரம்.

சிறப்பாக நடந்துள்ளது என்ற அறநிலையத்துறை அமைச்சரின் கூற்று முழுக்கப் பொய்யானது.

அனைவரும் அனுமதிக்கப்பட்டார்கள் என்ற அமைச்சர் நிர்மல்குமாரின் வாதப்படி பத்துமணிக்கு மேல் தான் அதாவது அவர்கள் சிவப்புக் கம்பளம் விரித்த பெரும் ஆட்கள் நின்று அமர்ந்து உல்லாசமாய்த் தரிசித்து வெளியேறியபின்தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விஐபிக்கள் மட்டுமா ஓட்டு போட்டு அமைச்சர் ஆனீர்கள் என்று நிர்மல்குமார் காரை நிறுத்திக் கேட்டது யாருமல்ல உள்ளிருந்து வெளியேறி மக்களுக்குள் இறங்கிய ஒரு மீனாக்ஷி தான்..

நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டோம், போறப்ப அந்த ஆத்தா கோபுரத்த பாத்துட்டு தீர்த்தத்த தலைல வாங்கிட்டு போகப்போறோம்… னு சொன்னா எல் ஈ டி ஸ்கிரீன் வச்சிருக்கோம்ல, அதுல பாக்கலாம்ல னு ஒரு ஆபிஸர் கேக்குறார்… ஸ்க்ரீன்ல பாக்குறதா இருந்தா நாங்க டிவிலயே பாப்போமே என்று அதிகாலையில் கேட்டாரே! அவர் யாரென நினைக்கிறீர்கள் உள்ளிருந்த மீனாக்ஷி தான்..

லாட்டரி முதலாளி அமர்ந்திருக்க நிற்க இடமில்லாமல் ஓரமாக கம்பியைப் பிடித்தபடி நின்றிருந்தாளே வயதான அறங்காவலர் தமிழ்வேள் குடும்ப மதுரையின் ருக்மணி.. யாரென்று நினைத்தீர்கள்… மீனாக்ஷி தான்..

இத்தனைச் சாமான்யர்களை நிற்கவைத்துவிட்டு நடந்தேறிய ஆரிய விழாவில் என் பிரியத்திற்குரிய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெ வும் உள்ளிருந்தார் என்பது தான் கவனிக்கத்தக்கது..

இதை பிஜேபியோ அமெரிக்க அரசாங்கமோ இப்படிச் செய்திருந்தால்

இந்நேரம் இப்படி எழுதியிருப்பார்

“இத்தனை மீனாட்சிகளைத் தவிக்கவிட்டு எந்த வீட்டு மீனாக்ஷிக்குக் கும்பாபிஷேகம் நடத்துகிறீர்கள்? “

எப்பொழுது வந்தாலும் இரத்தம் இரத்தம் தான், இப்பொழுது மட்டும் தக்காளிச்சட்ணியாகத் தெரிகிறது.

அவ்வளவே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *