நேரு, இளவரசனாக பிறந்தவர். அரசனாக வளர்ந்தவர். ஆண்டியாக வாழ்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்துகொண்ட பிறகு, அவர் பெரும்பாலும் பணக்கஷ்டத்தில்தான் வாழ்ந்தார். ‘அவரது புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகை மட்டும்தான், அவருக்கு ஒரே வருமானமாக இருந்தது’ என்று எழுதுகிறார், அவரிடம் உதவியாளராக இருந்த மத்தாய்.
ஆனந்தபவன் அரண்மனையும், அலகாபாத் சிறைச்சாலையும் அவருக்கு ஒன்றாகவே தெரிந்திருக்கிறது.
“வீட்டின் வேலையாள்களுக்கும் சேர்த்து சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்த தயாளன், அந்தக் காலத்தில் அவர் மட்டுமே’ என்று மனம் நெகிழ்கிறார் மத்தாய்.
சிறையன்னையால் சீராட்டி வளர்க்கப்பட்டவர். சிரமங்களையும் சித்ரவதைகளையும் கடந்து செல்லும் நெஞ்சுரத்தை அவர் காந்தியிடம் இருந்து பெற்றிருந்தார். ‘சிறையைப் போல ஒரு தவச்சாலை இல்லை. தண்டனையைப் போல ஒரு தவமில்லை’ என்றே, சிறை அதிகாரிகளிடம் சொல்கிறார் அவர்.
ஒரு கணக்கின்படி, நேரு சிறையில் இருந்த நாள்கள் மொத்தம், 3259… கிட்டத்தட்ட 9 வருடங்கள், அவர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சிறைவதையை அனுபவித்திருக்கிறார். சிறையில் கழிந்தது அவரின் இளமை. காசநோயால் அவதிப்பட்டு வந்த மனைவியை அருகிருந்து கவனிக்க முடியவில்லை.
1934 பிப்ரவரியில் இருந்து, 1935 செப்டம்பர் வரை, 188 புத்தகங்களை சிறைச்சாலையின் தூசிபடிந்த தரைகளில் அமர்ந்து படித்து முடித்திருக்கிறார், நேரு. அவற்றில் அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று எல்லாமே கலந்திருந்தது. காந்தி அலைந்து திரிந்து கண்டுணர்ந்த இந்தியாவை அவரால் உட்கார்ந்த இடத்திலேயே கண்டுணர முடிந்தது புத்தகங்களில்தான்.
ஆனால் பாருங்கள்… இத்தனை படித்த நேரு, இத்தனை சிந்தித்த நேரு, இத்தனை எழுதிய நேரு, ’நான் எவ்வளவு பெரிய அறிவாளி பார்த்தீர்களா’ என்று எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை.
தன்னுடைய கஷ்ட நஷ்டங்களை மேடையில் சொல்லி அழுது, அரசியல் ஆதாயம் அடைய முயன்றதில்லை. நேருவின் விமர்சகர்கள் கூட, அவரின் அத்தனை செயல்களும் இந்தியா மீதான நம்பிக்கையில் இருந்தும், இந்திய மக்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பில் இருந்தும் எழுந்து வந்ததை ஏற்றுக்கொள்வார்கள்.
நேருவை பிரதமர் ஆக்கியது காந்தியல்ல, காந்தியின் வழியாக காலம்தான் அவரைத் தேர்ந்தெடுத்தது. அடிப்படையில், அவர் ‘Officer Material’அல்ல. ஆனால், ஓர் ஆட்சியாளன் ‘Officer Material’ ஆக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ‘இங்கே கண்ணீர் இருக்கும் வரை, நமக்கு கடமை இருக்கும்’ என்ற சொல்லை, வெறுமே ஒரு நிர்வாகியால் பேசிவிட முடியாது.
சந்தேகமே இன்றி, இந்திய அன்னையின் தலைப்புதல்வன், நேருதான். எத்தனை காந்திகள், மோடிகள் வந்தாலும் அவரது அந்த இடத்தை தட்டிப்பறிக்க முடியாது.
இன்றைய இந்தியா முழுக்க முழுக்க நேருவின் சிருஷ்டி. நேரு மரணத்தை தழுவிய போது, உலக ஊடகங்கள், ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று அழைத்தே அவருக்கு அஞ்சலி செலுத்தின.
இந்தியா வித்தியாசமான நாடு. இங்கே, இருபது மொழிகள். இருநூறு இனங்கள். இரண்டாயிரம் சாதிகள். இதை, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நாம் வெளியே வேண்டுமானால் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால், உள்ளுக்குள் அது ஆண்டாண்டு காலமாக சமத்துவத்தை சூழ்ந்து சுட்டெரிக்கும் நெருப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது. அந்தக் காலங்களில், அந்த நெருப்பு இன்னும் உக்கிரமாக எரிந்து கொண்டிருந்தது.
அப்போது மட்டும், ‘அனைவரும் பங்களிப்பதே உண்மையான ஜனநாயகம்’ என்ற எண்ணத்தை உள்ளத்தில் சூடிய நேரு எனும் தலைவன் எழுந்து வந்திருக்காவிட்டால், இந்தியா உள்நாட்டுப் போர்களால் உருக்குலையும் இன்னொரு ஆப்பிரிக்க நாடாக மாறியிருக்கும்.
நேருவின் கல்யாணப் பத்திரிகை உருது மொழியில் அச்சடிக்கப்பட்டது. அவரது நம்பிக்கைக்கு உகந்த ஆலோசகர்களாக தென்னக மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இருந்தார்கள். அவரது அலுவலகத்தில்கூட, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை, அண்ணல் அம்பேத்கரை அழைத்து உருவாக்கியது, அவரது அரசு. அனைத்துக்கும் மேலே, இந்தியாவின் அடையாளமாக அசோகரை கொண்டு வந்து வைத்தார், நேரு.
அவர் நினைத்திருந்தால் சிவாஜியையோ அக்பரையோ இந்தியாவின் அடையாளமாக மாற்றியிருக்கலாம். ஆனால், தர்மச்சக்கரத்தை உருட்டிய அசோகரை இந்நாட்டின் அடையாளமாக ஆக்கினார், நேரு.
‘உங்களின் மிகப்பெரிய சாதனையாக நீங்கள் கருதுவது எது?’ என்று கேட்டபோது, ‘400 மில்லியன் மக்கள் அவர்களே அவர்களை ஆட்சிசெய்து கொள்ளும் வகையில் இந்தியாவை வடிவமைத்தது’ என்று மட்டுமே சொன்னார், நேரு.
ஆம்! பைகளில் இருக்கும் வாக்குச்சீட்டை எடுத்துப் பாருங்கள். அதை நமக்கு அளித்தது ‘ஜனநாயகம்’. அந்த ஜனநாயகத்தை நமக்கு அளித்தவர், நேரு. ’நீங்கள் விட்டுச் செல்லும் விஷயமாக எது இருக்கும்?’ என்ற கேள்விக்கும், ‘ஜனநாயகம்தான்’ என்றே பதில் சொன்னார்.


