திமுக தொண்டர்களுக்கு தங்கள் கட்சி மீது இருக்கிற பாசத்தை விட இந்தச் சமூகத்தின் மீது இருக்கிற அக்கறை மிக அதிகம். இதற்கு திமுக பேசும் சமூக நீதியும், அதன் முற்போக்குச் சிந்தனைகளும்தான் காரணம்.
பிறர் இவற்றைப் பேசவில்லையா, பின் ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தனை வலுவான தொண்டர் ஆதரவு என்றால், நீண்ட நெடுங்காலமாக இருக்கும் திமுகவின் சமரசமற்ற கொள்கை உறுதி அதற்குக் கொடுக்கும் நம்பகத்தன்மை வேறு எந்தக் கட்சிக்கும் இங்கே இல்லை.
அதிமுக, தவெக, மதிமுக, தேமுதிக போன்ற பிற கட்சியினருக்கு, அவர்களுடைய தலைவர்களால் அந்தக் கட்சிகளைப் பிடிக்கும். ஆனால், திமுகவின் கொள்கைகளை சமரசமில்லாமல் பேசுவதால்தான் கலைஞரையும், ஸ்டாலினையும் தொண்டர்களுக்கு பிடித்தது என்பது தான் உண்மை. கொள்கைகளை உரத்துப் பேசித் தமிழ் நாடு முன்னேற காரணமானவர்கள் என்பதால்தான் இந்த பாசம்.
எனவேதான், சிந்திக்கக்கூடியவர்களின் முதல் தேர்வாகத் திமுக இருக்கிறது. தேர்தலில் திமுக தோற்றால் கட்சியைக் காப்பாற்ற தொண்டர்கள் ஆவேசமாக புறப்பட்டு வருவார்கள். அதற்கு காரணம் திமுக தோற்றால் தமிழ்நாடு அபாயத்தில் சிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். திமுக ஆட்சியில் இருந்தால் அவர்களுக்கு நாடு பற்றிய அச்சம் இருக்காது. எனவே தான் கட்சிக்கும் சேர்த்து இவர்கள் போராடுவார்கள்.


