அரசியல்

அரசியல் அரை வேக்காடுக்கு சில கேள்விகள் – டாக்டர் கோகிலாமணி

அன்புள்ள அரசியல் அரைவேக்காடே…

சர்க்காரியா ஆணையத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, அது அமைக்கப்பட்ட காலத்தின் அரசியலையும் கொஞ்சம் படியுங்கள்!

1975-ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.

அதை ஏன் அறிவித்தார்கள் என்பதே தனிப் பெருங்கதை; அதற்குள் இப்போது செல்ல வேண்டாம்.

பத்திரிகைகளுக்குத் தணிக்கை.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது.

கருத்துச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு.

மொத்தத்தில், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட காலம் அது.

அன்றைய சூழலை எதிர்த்து Times of India-ல் ஜனநாயகத்திற்கே மரண அறிவிப்பு வெளியிடும் அளவுக்கு நிலைமை இருந்தது.

“O’Cracy, D.E.M. Beloved husband of T. Ruth. Loving father of L.I.Bertie. Brother of Faith, Hope, Justicia, expired on June 26.”

அதாவது Democracy died.

அப்படிப்பட்ட காலத்தில் திமுக என்ன செய்தது என்பதையும் வரலாற்றில் பார்க்க வேண்டும்.

“மிசாவைக் காட்டி மிரட்டினால், தமிழ்நாட்டிற்கு வருவதற்கே விசா வாங்க வேண்டிய நிலையை உருவாக்குவேன்” என்று தலைவர் கலைஞர் எச்சரித்ததாகச் சொல்லப்படுகிறது.

அது வெறும் மேடை முழக்கமாக மட்டும் நின்றுவிடவில்லை.

நெருக்கடி நிலையை எதிர்த்து திமுக தீர்மானம் நிறைவேற்றியது.…

ஜனநாயகத்தைக் காப்போம் என்று சென்னை கடற்கரையில் தலைவர் கலைஞர் தலைமையில் எடுக்கப்பட்ட உறுதிமொழி…

நெருக்கடி நிலைக்கு எதிரான கட்சிகளை டெல்லியில் ஒரே மேசைக்கு அழைத்துவந்து ஒன்றிணைக்க மேற்கொண்ட முயற்சி…

அடக்குமுறையின் உச்சமாக, மிசாவில் கைது செய்யப்பட்ட கழகத்தினரின் பெயர்களைக்கூட பத்திரிகையில் வெளியிட முடியாத அளவுக்குக் கட்டுப்பாடு.

அதையும் தலைவர் கலைஞர் தனது எழுத்தால் உடைத்தார்.

அண்ணா நினைவு நாளில்,

“அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்”

என்ற பெயரில், மிசாவில் சிறை வைக்கப்பட்ட கழகத்தினரின் பட்டியலை முரசொலியில் வெளியிட்டார்.

பெயர்களைக்கூட வெளியிட விடாத அடக்குமுறைக்கு நடுவிலும், அதை மீறுவதற்கான வழியைக் கண்டது திமுக.

இப்படி நெருக்கடி நிலையை எதிர்த்து தலைவர் கலைஞரும் திமுகவும் நின்ற வரலாற்றைப் பேசும்போது, அதே நெருக்கடி நிலையை ஆதரிக்க டெல்லி சென்ற அந்த நடிகர் யார் என்பதையும் கொஞ்சம் விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

மாநிலக் கட்சிகள் தடை செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்தபோது, அண்ணா திமுக தனது பெயரில் “அனைத்திந்திய” என்பதைச் சேர்த்தது.

ஆனால் திமுக தனது பெயருக்கு முன்னால் எதையும் சேர்க்கவில்லை; தனது கொள்கையிலிருந்து எதையும் கழிக்கவும் இல்லை.

ஆனால் நெருக்கடி நிலையை எதிர்த்த திமுக, அதற்காக என்ன விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை.

திமுக, திமுகவாகவே நின்றது.

அரை நூற்றாண்டுக்குப் பிறகும் திமுக, திமுகவாகவே தொடர்கிறது..

நெருக்கடி நிலைக் காலத்தில்கூட இந்தியாவில் சுதந்திரக் காற்று வீசிய ஒரே இடம் தமிழ்நாடு என்று ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் குறிப்பிடும் அளவுக்கு தமிழ்நாடு தனித்து நின்றது.

அப்படிப்பட்ட அரசியல் சூழலில்தான் 1976 வந்தது.

31 ஜனவரி 1976 – தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

1 பிப்ரவரி 1976 – தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

3 பிப்ரவரி 1976 – திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது.

நான்கே நாட்களுக்குள்…

ஆட்சி கலைப்பு.

மிசா கைது.

சர்க்காரியா ஆணையம்.

இந்தக் காலவரிசையையும், அதற்கு முன்பு நடந்த நெருக்கடி நிலை அரசியலையும் சேர்த்துப் பார்த்த பிறகு, சர்க்காரியா ஆணையம் எந்த அரசியல் சூழலில் அமைக்கப்பட்டது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

அதோடு இன்னும் இரண்டு கேள்விகள்:

சர்க்காரியா ஆணையத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன?

எந்த வழக்கில் கலைஞர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது?

அதற்கான பதிலையும் சேர்த்துச் சொல்லுங்கள்.

ஏனென்றால்,

குற்றச்சாட்டு வேறு

நிரூபிக்கப்பட்ட உண்மை வேறு.

உதாரணத்திற்கு, இந்த வாரம் ஒருவர் லண்டன் செல்கிறார் என்பதையும், ஒரு நடிகை ஏற்கனவே அங்கு இருக்கிறார் என்பதையும் இணைத்து, “அவரைப் பார்க்கத்தான் லண்டன் செல்கிறார்” என்று நானும் சொல்லிவிடலாம்.

ஆனால் அதை நிரூபிக்க ஆதாரம்?

அதுதான் குற்றச்சாட்டுக்கும் நிரூபிக்கப்பட்ட உண்மைக்கும் உள்ள வித்தியாசம்.

அதேபோல, சர்க்காரியா ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதன் அரசியல் பின்னணியையும் பின்னர் நடந்த சட்டப்பூர்வ முடிவுகளையும் மறைத்துவிட்டால்…

அது வரலாறு அல்ல.

வசதிக்கேற்ற அரசியல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *