(சட்டமன்ற அவைக்குறிப்பு நூலகத்திலிருந்து…)
முதலமைச்சர் ஆக எம்ஜிஆர் எதிரே அமர்ந்திருக்க…
அவரின் முகத்துக்கு நேராக எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் ஆற்றிய சட்டமன்ற சொற்பொழிவு.
அதிலே, கலைஞரின் கோரிக்கையை விஜய் நிறைவேற்ற வேண்டும்..! அன்று எம்ஜிஆரால் நிறைவேற்ற முடியவில்லை..!!
(சட்டசபையில் சர்க்காரியா கமிஷன் பற்றி 1978-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி நடைபெற்ற விவாதம்.)
கலைஞர்:
“நமது முதலமைச்சர் (எம்ஜிஆர்) அவர்கள் என்னைப்பற்றி ஜனாதிபதி அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் அமைக்கப்பட்ட கமிஷன் ஆன… சர்க்காரியா கமிஷன் முன்னால் முதலாவது பொறுப்பு ஏற்றுக்கொண்டவர் ஆக வந்தபோது, “எனக்கு சேலம் வக்கீல் சொன்னார், அவர் சொல்லக் கேட்டுத்தான் இந்த புகாரை சொன்னேன்” என்று கமிஷன் முன்னால் சொன்னார்கள். அப்படி அவரின் அந்த புகாரில் கூட மைலாப்பூர் சுந்தரம் என்பவர் என்னோடு நெருங்கிய தொடர்பு உடையவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அந்த புகாரில் தான், சாராய வழக்குகளைப்பற்றி இங்கு விரிவாகப் பேசப்பட்டது. இங்கு ஆளும் கட்சி நண்பர்கள் வேண்டுமென்றே என்னை புன் படுத்த வேண்டும் என்ற ஆசையில் ஏதோ சர்வர் சுந்தரம் என்றும், சுந்தர சர்வர் என்றும், சுந்தர சாம்ராஜ்யம் என்றெல்லாம் குறிப்பிட்டுப் பேசினார்கள். இதைக் கேட்டுக்கொள்வதற்கோ அல்லது அதைப்பற்றி விளக்கி பேசுவதற்கோ கொஞ்சமும் நான் கூச்சப்படவில்லை.
இந்த மைலாப்பூர் சுந்தரம் என்பவரை… — நான் சொல்வதை நம்ப வேண்டும் — நான் இதுவரை பார்த்தது கூட கிடையாது.
மைலாப்பூர் சுந்தரம் என்பவர் யாரேனில், எமது கழக ஆட்சியால், 156 பேர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நேரத்தில் — இந்த 156 கைதிகளில் இவரும் ஒருவர். அதற்கு முன்பு இவரது சாராய கிடங்கில் சாராய பானைகள் இருந்தது காவல் ஆணையாளரால் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். நெருக்கடி காலத்தில் 156 பேர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் என்ற முறையில் கைது செய்யப்பட்டார்கள். போலீசார் இடத்தில் அப்படிப்பட்ட சாராய பட்டியல் இருந்தது. அந்தப் பட்டியலின்படி தான் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதில் ஏழெட்டு பேர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட இருந்தார்கள். மீதம், வேறு சில கட்சியைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். இப்படிக் கைது செய்யப்பட்ட 156 பேர்களில் இந்த மைலாப்பூர் சுந்தரம் என்பவரும் ஒருவர் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
அதே நேரத்தில், நாயர், தாமஸ் என்ற வேறு இரண்டு பேர்கள் இதில் சிக்கிக் கொண்டார்கள் என்பதற்காக அன்றைக்கு மத்திய அரசில் உள்துறை அமைச்சர் ஆக இருந்த பிரமானந்த ரெட்டியிடம் சென்று, அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் சார்பாக சிலர் கோரினார்கள்.
பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டி அவர்களை நான் டெல்லியிலே சந்தித்தபோது, “சாராய வியாபாரிகளைக் கூட மிசாவில் நீங்கள் சிறையில் போடுகிறீர்களா?” என்று என்னிடம் கேட்டார்.
சமூக விரோதச் செயல்களைச் செய்கின்றவர்களை Maintenance of Internal Security Act (MISA) சட்டப்படி, கைது செய்து சிறையிலே போட வேண்டுமென்று நீங்கள்தான் சொல்கிறீர்கள், பதுக்கல் பேர்வழிகளை, கடத்தல்காரர்களை இப்படிப்பட்ட சமூக விரோதிகளை சிறையிலே போட வேண்டுமென்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். அதைப்போல்தான் உயிர்களை வார்னிஷ் மூலமும், சாராயம் மூலமும் கொன்று குவிக்கின்றவர்களை, சமூக விரோதிகள் என்ற அடிப்படையில் நான் ஏன் சிறையில் அடைக்கக்கூடாது என்று வாதிட்டேன். அப்போது அவர்கள் மௌனமாக இருந்து விட்டார்கள்.
நான் சென்னை திரும்பி வந்த ஒரு வாரத்திற்கெல்லாம் டெல்லியிலே இருந்து மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு தாக்கீது வந்தது. அது இப்போதும் அரசின் கோப்பில் இருக்கும். இப்போது முதலமைச்சர் அவர்கள் வாங்கிப் பார்க்க வாய்ப்பிருக்கின்ற காரணத்தினால் பார்க்கலாம். அதில் என்ன உத்தரவு போட்டார்கள் தெரியுமா? யாரோ 2, 3 பேர்களைக் காப்பாற்றுவதற்காக, பொதுவாக சாராயத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும், பெரிய சாராய வியாபாரியாக இருந்தாலும் அவர்கள் எல்லாம் இந்த மிசா சட்டத்தின் கீழ் அடங்கமாட்டார்கள். ஆகவே, சாராயம் காய்ச்சுபவர்கள் யாரும் சமூக விரோதிகள் அல்ல என்கின்ற ஒரு நிலைமையை எடுத்துக்காட்டி, அவர்களையெல்லாம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்ற உத்தரவு அதிலே இருந்தது, இங்கே முன்பிருந்த மாநில அரசுக்கு, அதாவது எமது கழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து அப்படியொருஉத்தரவு வந்தது. அதற்குப் பிறகுதான் அந்த மயிலாப்பூர் சுந்தரம் , நாயர், தாமஸ் உட்பட அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அதற்கு முன்பாக, தாக்கீதை படித்த உடனே, நான் பிரதம அமைச்சர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களிடத்திலே கூட இதைப்பற்றி எடுத்துச் சொன்னேன். வாலாஜாவுக்குப் பக்கத்திலே இருக்கின்ற கிராமத்திலே உள்ளவர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். யூனியன் சேர்மனாக இருக்கிறார், அவரும் இந்த மிசாவின் கீழே சாராய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார், அவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்று இந்திரா காந்தி அம்மையாரிடத்திலே மீண்டும் எடுத்துச் சொன்னேன். அதற்குப் பிறகும், அவருக்கு பிடித்த யாரோ 2, 3 பேர்களைக் காப்பாற்ற இந்த 156 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்ற உத்தரவு வந்தது. அந்த 156 பேரில் சில திமுகவினர் இருந்தனர். இன்னமும் இந்த உத்தரவு மாநில சர்க்காரின் கோப்பிலே இருக்குமென்று நம்புகிறேன். ஆகவே, முதல் அமைச்சர் அவர்கள் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.
இன்னொன்றையும் நான் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. நண்பர் ரகுமான்கான் அவர்கள் பேசும்போது நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் குறுக்கிட்டு, புகார் கொடுத்ததைப் பற்றி விளக்கம் சொன்னார்கள். “நாங்கள் பல புகார்களைக் கொடுத்தோம். அதிலே மத்திய சர்க்கார் அல்லது சர்க்காரியா கமிஷன் அதிலே ஏற்றுக்கொள்ளக் கூடிய புகார்களை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவைகளை, விட்டு விட்டார்கள். அதிலே இதுவும் ஒன்று” என்று இன்று சொன்னார்கள்.
“அவர்கள் பூர்வாங்கமாக உள்ளவைகளை எடுத்துக்கொண்டு, எஞ்சியதை விட்டுவிட்டார்கள்” என்று நேற்றைய முன்தினம் இந்தத் துறை பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது கூட முதலமைச்சர் குறிப்பிட்டார்கள்; பிரைமா ஃபேசி கேஸ் இல்லாதவற்றை சர்க்காரியா கமிஷன் விட்டு விட்டார்கள். அதாவது அவர்களுக்கே ஆதாரமில்லாதவை என்று பட்டதை விட்டு விட்டார்கள். ஆதாரம் இருக்கலாம் என்று பட்டதை மட்டும் எடுத்துக்கொண்டார்கள் என்பதுதான் அதன் பொருள்.
இதற்கு நான் ஒன்றை எடுத்துக்காட்டாகச் சொல்ல விரும்புகிறேன்.
நம்முடைய முதல்வர் (எம்ஜிஆர்) அவர்கள் அன்றைய தினம் (1972ல்) எதிர்க்கட்சியின் சார்பிலே தந்த 54 ஊழல் முறைகேடு புகார்களில் ஒன்று, “திருவாரூர், தெற்கு வீதியிலே 94-ஆம் எண் உள்ள வீடு பல லட்சக்கணக்கான ரூபாயில் கருணாநிதியால் கட்டப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உள்ளபடியே இந்தக் குற்றச்சாட்டு பிரைமா ஃபேசி கேஸ் உள்ளதா என்று மத்திய அரசில் ஆராய்ந்து பார்த்திருப்பார்களேயானால்…
நான் வெளியிட்ட மறுப்புரை புத்தகத்திலும் சரி, நான் அதற்கு இந்திரா காந்தி அம்மையார் அவர்களுக்கு அளித்த பதிலிலும் சரி அந்த திருவாரூர் வீட்டினுடைய புகைப்படத்தை எடுத்து அனுப்பியிருக்கிறேன். ஒரு இடிந்து போன வீடு அது.
இந்த வீட்டை தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பல நண்பர்கள் பார்த்திருக்கக் கூடும். இப்போது அடித்த புயலால்கூட ஒரு பக்கச் சுவர் விழுந்துவிட்டது. அந்த வீட்டைக் கட்ட வேண்டுமென்று நகராட்சி ஆணையருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால் பல லட்ச ரூபாய் போட்டு கட்டப்பட்ட பெரிய பங்களா என்றும் புகாரில் போடப்பட்டிருக்கிறது. இப்படி புகைப்படம் அனுப்பிய பிறகும்கூட, பதில் உரையை இந்த மாமன்றத்திலே இணைத்த பின்னரும், அவர்கள் இதிலே பிரைமா ஃபேசி கேஸ் இருக்கிறதா என்று உள்ளபடியே பார்த்திருக்க வேண்டும்.
ஆனால், அந்த 54 புகார்களில் ஒரு 28 குற்றச்சாட்டுகளை மட்டும் எடுத்து, இதை மட்டும் சர்க்காரியா கமிஷன் விசாரிப்பதற்கு ஆதாரம் இருக்கின்றது என்று சேர்த்திருக்க மாட்டார்கள். இதிலே பிரைமா ஃபேசி கேஸ் இருக்கிறதா என்று பார்த்திருந்தால் இதை இணைத்திருக்க மாட்டார்கள். காரணம், வீட்டின் புகைப்படம் இருக்கிறது; இடிந்து விழுந்த வீடு. பங்களா அல்ல. பல லட்சக்கணக்கான ரூபாய்கள் போட்டு கட்டப்பட்ட வீடாக இருக்க வாய்ப்பே இல்லை என்று விவரங்களையெல்லாம் பூர்வாங்க விசாரணையில், பிரைமா ஃபேசியில் வெளியிட்டிருக்கக் கூடும்.
ஆனால் அவசர அவசரமாக, கழக ஆட்சி 1976ல் கலைக்கப்பட்ட உடன், இந்த 54 குற்றச்சாட்டுகளில் அதிகமாக கருணாநிதியைச் சார்ந்த குற்றங்களைப் பொறுக்கி எடுக்கச் சொல்லி, அப்படி எடுக்கப்பட்ட 28 குற்றச்சாட்டுகள் மீது மட்டும் விசாரணை செய்தார்கள்.
உள்ளபடியே அதிலே உள்ள உங்களின் மொத்தக் குற்றச்சாட்டுகள் 54 அல்லவா? எனவே, நான் கேட்டுக் கொள்கிறேன். “இந்த 28 குற்றச்சாட்டுக்களின் மீது எந்தவிதமான தீர்ப்பு வந்தாலும் சரி; மீதம் இருக்கின்ற உங்களின் 26 குற்றச்சாட்டுகள் மீதும் அவைகளையும் விசாரிக்கின்ற வகையிலே, விசாரணைக் கமிஷன் ஒன்றை நீங்கள் வைக்க வேண்டுமென்று நான் இந்த அவையில் கேட்டுக் கொள்கிறேன்.
அன்றைய தினம் சொன்னீர்களே, “நான் பாரபட்சம் இல்லாமல் (திமுக அல்லது அதிமுக என) எந்தக் கட்சியில் இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்” என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்தக் கட்சியில் இருந்தாலும் அல்லது நடவடிக்கைக்குப் பயந்து தங்கள் கட்சிக்கு வந்து இணைந்து இருந்தாலும் யாரையும் விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, மிச்சமுள்ள உங்களின் 26 குற்றச்சாட்டுகளுக்குத் தாங்களே ஒரு நீதி விசாரணை ஆணையம் ஒன்றை வைக்க வேண்டுமென்று மிகுந்த பணிவன்போடு, நேச உணர்வோடு கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
28 குற்றச்சாட்டுகளைப் பற்றி விரைவில் மத்திய அரசில் அறிக்கை வர இருக்கிறது. அவைகளைப் பற்றி மாநில அரசோ, மத்திய சர்க்காரோ நடவடிக்கை எடுக்க இருக்கிறது. அவைகளை எப்படித் தாங்குவது, சந்திப்பது என்பதைப் பற்றி நாங்கள், தொடர்புடையவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவைகளைச் சமாளிக்க இருக்கிறோம். அது வேறு விவகாரம்.
ஆனால், உங்களின்(எம்ஜிஆரின்) 54 குற்றச்சாட்டுகளில் 28 குற்றச்சாட்டுகள் மாத்திரம் சர்க்காரியா கமிஷனில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. மீதி 26 குற்றச்சாட்டுகள் விடப்பட்டிருக்கின்றன. நாம் தொடர்ந்து வலியுறுத்திச் சொல்லி வருவது — முதலமைச்சர் (எம்ஜிஆர்)அவர்கள், சர்க்காரியாவால் விடப்பட்ட 26 குற்றச்சாட்டுகளின் பேரிலும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இன்னொரு கமிஷன்கூடப் போடப்பட்டிருக்கிறது — கிருஷ்ணசாமி நாயுடு கமிஷன் என்று போடப்பட்டிருக்கிறது. முன்பே அறிவித்தார்கள் — அதற்கேற்ப போடப்பட்டிருக்கிறது. அறிவித்த நேரத்திலேயே நான் அறிக்கைகள் மூலமாகச் சொன்னேன்: 1972-ல் இருந்துதான் எமது கழக ஆட்சியை கணக்கெடுத்திருக்கிறீர்கள். 1969-ல் இருந்து நான் முதலமைச்சராக இருக்கிறேன். அவ்வாறு முதலமைச்சர் ஆக இருந்து வந்த அந்த 1969-ல் இருந்து புகார்களை கணக்கெடுங்கள் என்றேன்.
1972-ல் திராவிட முன்னேற்றக் கழக அரசின்மீது சில முறைகேடுகளைச் சொல்லிவிட்டு கழகத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டது. அப்படி, 1972-ல் வெளியேற வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டபோது “1969 முதல் 1972 வரை நிறைய தவறுகள் நடந்தன; எனவே வெளியேறினேன்” என்றுதான் காரணம் சொன்னீர்கள்.
இப்போது, எனக்குள்ள கேள்வி எல்லாம்… 1972-ல் இருந்து நீங்கள் பிரிந்து போய் விட்ட பிறகு அதற்குப் பிறகு நீங்களே தற்போது ஆட்சிக்கு வந்து, 1969-ல் இருந்து 1972 வரை கருணாநிதி மீது விசாரணை என்று புதிய கமிஷன் ஒன்றை போட்டு என்னைச் சித்திரவதை செய்து கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை.
1972 முதல் 1975 வரை நடப்பு விசாரணை முடிந்த பிறகு — காங்கிரஸ் கட்சியோ, ஜனதா கட்சியோ, கம்யூனிஸ்டு கட்சியோ நாளை தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து அப்போது இருக்கக்கூடிய அக்கட்சி முதலமைச்சர், “மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள், கருணாநிதியின் மூன்று வருஷத்தை மறந்து விட்டு விட்டார்கள்; ஆகவே, 1969-ல் இருந்து 1978-ஆம் ஆண்டு வரை விசாரணை செய்ய கமிஷன் போடுகிறோம்” என்று போட ஆரம்பித்தால்தானே விசாரணைக் கமிஷன் வேலை சரியாக இருக்கும்?
1969 முதல் தவறுகள் நடந்தன என்று உங்களால் சொல்லப்பட்ட காலத்தை ஏன் விட்டுவிட்டீர்கள் என்பதுதான் என்னுடைய வாதம்.
அடிக்கிற அடியை ஒரே தடவையாக அடித்து முடித்துவிடுங்கள்; பல தடவையாக தவணையில் அடித்துக் கொண்டிருக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, இந்த நாயுடு கமிஷனுக்கு காலத்தை விரிவாக்கி 1969-ல் இருந்து, என்றைக்கு இந்தப் பாவி முதலமைச்சராக வந்து உட்கார்ந்தானோ அதிலிருந்து, நீங்கள் நிர்ணயித்திருக்கிற 1975-ஆம் ஆண்டு வரை அந்தக் கமிஷன் ஆராய வேண்டுமென்று நியமிப்பதுதான் முறையானதாகவும், பொருத்தமானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்கும் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.”
((இதற்குப் பின்னர்… 1996ல் கலைஞர் முதலமைச்சர் ஆக இருந்தபோது…1997-ம் ஆண்டு ஜனவரி 28-ல் நடந்த சட்டபேரவை விவாதம்))
பி.ஆர். சுந்தரம்: (இவர் இராசிபுரம் தொகுதி அதிமுக MLA, 2021ல். திமுகவில் இணைந்து விட்டார்)
“ஊழலை ஒழிப்பதற்காக ஒட்டு மொத்தமாக அவதாரம் எடுத்ததாக பேசிக் கொண்டிருக்கிற முதலமைச்சர், சர்க்காரியா கமிஷன் முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்டதை இந்த நாடு இன்னும் மறந்துவிடவில்லை. சி.பி.ஐ. முன்பு, இரண்டு வழக்குகளில், கோதுமை பேர ஊழல், பூச்சி மருந்து ஊழல் ஆகிய இரண்டு வழக்குகளை சி.பி.ஐ. தொடுத்தபோது, நீங்கள் எல்லாம் இந்திரா காந்தி அவர்களிடம் மன்றாடி அந்த வழக்கை வாபஸ் பெற்றதையும் இந்த நாடு மறந்துவிடவில்லை…”
கலைஞர்:
“மாண்புமிகு துணைத்தலைவர் அவர்களே, அவையில் உண்மைக்கு மாறான ஒன்றை இட்டுக்கட்டி, வேண்டுமென்றே யாரோ சொல்லிக் கொடுத்ததை இங்கே சொல்லி, வெளியே அங்கே (ஜெயலலிதாவிடம்) போய் பாராட்டைப் பெறுவதற்காக உறுப்பினர் அவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கிறார். சர்க்காரியா கமிஷனிலே போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கவேண்டும் என்று இந்திரா காந்தி இடத்திலே போய் யாரும் முறையிடவும் இல்லை; மன்றாடிக் கேட்டுக் கொள்ளவும் இல்லை.
கமிஷனில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், அவர்கள் அதை வாபஸ் வாங்கினார்கள். அதுமாத்திரமல்ல, எங்கள் மீது புகார் கொடுத்த எம்.ஜி.ஆர். அவர்களே, ‘அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று சர்க்காரியா கமிஷனிடம் சொல்லிவிட்டார். ‘I have no knowledge about this’ என்று அப்பட்டமாக அருமை எம்.ஜி.ஆர். அவர்கள் அந்தப் புகார்களைப் பற்றி சர்க்காரியா கமிஷனுக்கு எழுதிக் கொடுத்து விட்டார். இதையெல்லாம் நம்முடைய நண்பர் அவர்களுக்குத் தெரியாது என்று கருதுகிறேன். அல்லது தெரிந்ததை மறைத்துக் கொண்டு உண்மைக்கு மாறாக பேசுகிறார் என்று கருதுகிறேன்.
சர்க்காரியா கமிஷனுடைய அறிக்கை அப்பொழுதே அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் இருந்த ஒரு சில வரிகளின் அடிப்படையில், (நேற்று விஜய் படித்துக்காட்டிய வரிகளாக இருக்கலாம்) அன்றைக்கே முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் என்மீது வழக்கு தொடர்வதற்காக, அந்த அறிக்கை அடிப்படையில், இரண்டு முறை முயற்சித்தார்.
அப்போது அட்வகேட் ஜெனரலாக இருந்த திரு. வி.பி. இராமன் அவர்கள் அந்த அறிக்கையை முழுவதும் படித்துப் பார்த்துவிட்டு, இதில் வழக்கு தொடர்வதற்கான எந்த ஆதாரமும் கிடையாது என்று, அட்வகேட் ஜெனரலாக இருந்தவர் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலே எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அறிவுரை கூறினார். (மேசையைத் தட்டும் ஒலி) அவருடைய ஆலோசனை காப்பியை ஏற்கெனவே இங்கு சில தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்களுக்குக்கூடக் காட்டியிருக்கிறேன். திரு. சொக்கர் அவர்கள் அதை முழுவதும் படித்துப் பார்த்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர்களிடத்திலும் இதை காட்டியிருக்கிறேன். எம்.ஜி.ஆர். என் மீது வழக்கு போட, சர்க்காரியா கமிஷன் விசாரணையின் அடிப்படையில் வழக்கு போட, இரண்டு முறை முயற்சித்தார்.
15-11-1977-ல் ஒன்றும், 24-10-1979-ல் ஒன்றும், ஆக இரண்டாம் முறை எம்ஜிஆர் முயற்சித்த போது அப்போதிருந்த அட்வகேட் ஜெனரல் அவர்கள் சொல்கிறார்.
“I have already expressed my opinion- vide opinion 1877 dated 15-11-1977.
I do not see any reason to modify the position.”
“என்னுடைய கருத்தை நான் மாற்றிக் கொள்ள இரண்டாவது முறையிலும் விரும்பவில்லை; ஆகவே வழக்குப் போட எதுவுமே இல்லை” என்று அட்வகேட் ஜெனரலாக இருந்த திரு. வி.பி. இராமன், முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களுக்கே அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.”
ஹலோ…. ஸ்மால் சி எம் அங்கிள்…
உங்கள் மேசையில் உள்ள அந்த 3 கோப்புகளை எல்லாம் உங்களால் திறக்கவே முடியாது. ஏனென்றால்… அவை எல்லாமே நீங்க விட்ட கப்சா ரீல்ஸ். ஆகவே… லைப்ரரியில் உள்ள சர்க்காரியாக கோப்பை திறந்து விட்டீர்கள். அதிலே… எம்ஜிஆர் சொன்ன 56 புகார்களின் படி புது கமிஷன் போட்டு கலைஞர் மீது சட்டப்படி விசாரணை நடத்துங்கள். குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால்… கலைஞரை கைது செய்து சிறையில் அடையுங்கள். தமிழ்நாடு வளர்ச்சி அடையும். மொத்த கடனையும் அடைத்து விடலாம். மாதா மாதம் 2500 ரூபாய் பெண்களுக்கு தந்து விடலாம். 4000 ரூபாய் வேலை இல்லா பட்டதாரிக்கு தந்து விடலாம். 6 சிலிண்டர் தந்து விடலாம். வீட்டுக்கு ஒரு பைக் தந்து விடலாம்.


