Trending - தொடர்கள்

சீனப் பேரரசர் காங்ஸியும் பிரான்ஸ் பேரரசர் 14 ஆம் லூயியும்! – ஆதனூர் சோழன்

பேரரசர் காங்ஸி சீனாவின் வரலாற்றில் மிகச் சிறந்த பேரரசர்களில் ஒருவர். குயிங் வம்சத்தைச் சேர்ந்த இவர் கி.பி.1654 முதல் கி.பி.1722 வரை மிக நீண்ட காலம் அதாவது 61 ஆண்டுகள் சீனாவை ஆட்சி செய்த பேரரசர் இவர்.

அவருக்கு இணையான இன்னொரு பேரரசர் பிரான்ஸை ஆட்சி செய்து  பதினான்காம் லூயியைச் சொல்லலாம். இவர் கி.பி. 1638 முதல் 1715 வரை ஐரோப்பிய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் அதாவது 72 ஆண்டுகள்  ஆட்சி செய்த மன்னர்.

இந்த இரு மன்னர்களும் சிறு வயதிலேயே ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்கள். 14ஆம் லூயி தனது 4-வது வயதிலும், காங்ஸி தனது 7-வது வயதிலும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். பிற்காலத்தில் உலகின் மிக வலிமையான பேரரசுகளாக உருவான இரண்டு நாடுகளுக்கு அவர்கள் தலைமை ஏற்றனர்.

கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சீனாவுக்கும் பிரான்சுக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருந்தன. பதினான்காம் லூயிக்கு சீன கலாச்சாரம், குறிப்பாக சீனாவின் மண்பாண்டக் கலை மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அதேபோல், மேற்கத்திய மருத்துவம், வானியல் மற்றும் பல துறைகளை சீனப் பேரரசர் காங்ஸி கற்றுக்கொள்ள விரும்பினார். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர் மிகுந்த ஆர்வமாக இருந்தார்.  பிரான்ஸின் கண்ணாடிப் பொருட்களை அவர் மிகவும் ரசித்தார்.

இன்றைக்கும் நீங்கள் பிரான்ஸில் உள்ள வெர்சாய்ல்ஸ் அரண்மனைக்குச் சென்றால், பேரரசர் காங்ஸி 14 ஆம் லூயிக்கு பரிசளித்த சீன பட்டுத் துணிகளையும், அரக்கு வேலைப்பாடுகள் மற்றும் ஜாடிகளையும் காணமுடியும்.

லூயி ஆட்சிக் காலத்தில் பிரான்ஸ் இயேசு சபையினர் 50 பேர் (Jesuits) சீனாவுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள், காங்ஸிக்கும் பதினான்காம் லூயிக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைக் கவனித்தனர்.

இரு மன்னர்களும் பல மொழிகளை அறிந்திருந்தனர். பதினான்காம் லூயி ஃபிரெஞ்ச், இத்தாலியன், ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் மொழிகளைப் பேசினார்.

பேரரசர் காங்ஸிக்கு மஞ்சு, மாண்டரின் மற்றும் மங்கோலிய மொழிகளைப் பேசத் தெரியும். இருவருமே பல வெற்றிகரமான ராணுவப் படையெடுப்புகளை வழிநடத்தினார்கள். அறிவைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். கலை மற்றும் அறிவியலை ஊக்குவித்தனர்.

இருவருக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருந்தாலும்,ஒரு விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

பேரரசர் காங்ஸி பணிவானவர். அளவுக்கு அதிகமாக உண்ண மாட்டார்.  ஆரோக்கியமான உணவை உண்பார். மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். இரவு நேர சிற்றுண்டியாக சிலவகை பருப்புகளை மட்டுமே சாப்பிடுவார்.

ஆனால், பிரான்ஸ் மன்னர் லூயியோஆடம்பரமான விருந்துகளிலும், குதிகால் செருப்புகளில் காலுறைகள் அணிந்த தன் கால்களை வெளிக்காட்டுவதிலும் மிகுந்த ஆர்வமாக இருந்தார்.

பதினான்காம் லூயி மன்னருக்கு 17 குழந்தைகள் இருந்தனர். பேரரசர் காங்ஸிக்கு 56 குழந்தைகள் இருந்தனர்.

“சூரிய மன்னன்” (Sun King) என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயியின் (Louis XIV) இறுதிக்காலம், அவரது 72 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றிலும் மாறாக, மிகுந்த சோகமும் உடல்நலக் குறைவுகளும் நிறைந்ததாக இருந்தது. 1715-இல் அவர் மரணமடைவதற்கு முந்தைய சில ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டுக்கும் அவருக்கும் பெரும் சோதனைக் காலமாக அமைந்தது.

லூயியின் இறுதிக்காலத்தில் அவரது அடுத்தடுத்த வாரிசுகள் நோய்த்தாக்கத்தால் மரணமடைந்தனர். இது அவரை உலுக்கியது.

1711 முதல் 1712 வரையிலான குறுகிய காலத்தில், தட்டம்மை (Measles) மற்றும் பிற நோய்களால் லூயியின் ஒரே மகன் (Dauphin), மூத்த பேரன் மற்றும் கொள்ளுப் பேரன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதையடுத்து தனது இறுதிநாட்களில் அவருக்குப் பின் நாட்டை ஆள தகுதியான நேரடி வாரிசுகள் எவருமில்லை என்ற நிலை உருவானது. கடைசியில், பின்னாளில் பதினைந்தாம் லூயி – Louis XV என்று அழைக்கப்பட்ட அவரது 5 வயது கொள்ளுப் பேரன் மட்டுமே எஞ்சியிருந்தார்.

ஸ்பானிய வாரிசுரிமைப் போர் (War of the Spanish Succession) போன்ற தொடர் போர்களால் பிரான்சின் கருவூலம் முற்றிலும் காலியாகியது..

கடுமையான வரி விதிப்பு, பஞ்சம் மற்றும் வறுமையால் பிரான்ஸ் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். இது லூயியின் ஆரம்பகால மக்கள் செல்வாக்கை முற்றாக இழக்கச் செய்தது.

1715ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14 ஆம் லூயிக்கு இடது காலில் கடுமையான வலி ஏற்பட்டது. தொடக்கத்தில் அரசு மருத்துவர்கள் இதை சியாட்டிகா (Sciatica) என்று தவறாகக் கணித்தனர்.

ஆனால், அது கேங்க்ரீன் என்ற திசு அழுகல் நோய் என்று தெரியவந்தது. (Gangrene). காலில் ஏற்பட்ட கறுப்புப் புள்ளி படிப்படியாகக் கால் முழுவதும் பரவி, அவரது சதை அழுகத் தொடங்கியது.

சுமார் 23 நாட்கள் லூயி படுத்த படுக்கையில் நரக வேதனையை அனுபவித்தார். எந்த கஷ்டத்தையும் வெளிக்காட்டாமல் மரணத்துடன் போராடினார்.

செப்டம்பர் 1, 1715ல் தனது 77ஆவது பிறந்தநாளுக்கு 4 நாட்களே இருந்த நிலையில் வெர்சைல்ஸ் அரண்மனையில் 14ஆம் லூயி  மரணம் அடைந்தார்.

இறப்பதற்கு முன் தனது 5 வயது கொள்ளுப் பேரனிடம், “என்னைப்போல ஆடம்பரமாக அரண்மனைகளை எழுப்பாதே. அண்டை நாடுகளுடன் போரிடாதே. மக்களின் சுமையைக் குறைத்து நல்வழிப்படுத்து” என்று அறிவுரை வழங்கினார்.

“நான் இறக்கிறேன், ஆனால் பிரான்ஸ் அரசு என்றும் நிலைத்திருக்கும்” (I am going away, but the State will always remain) என்ற புகழ்பெற்ற வரிகளைக் கூறி கண்மூடினார்.

சீனாவின் குயிங் (Qing) வம்சத்தின் மிகச்சிறந்த மற்றும் நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசர் காங்ஸியின் (Kangxi Emperor) இறுதிக் காலமும் பிரான்ஸ் மன்னர் 14 ஆம் லூயியின் கடைசிக் காலத்தைப் போலவே அமைந்தது.

குடும்பப் பூசல்கள், உடல்நலக் குறைவு, ஆட்சி நிர்வாகச் சவால்கள் என சோகமான காலகட்டமாக அமைந்தது.

காங்ஸியின் இறுதிக் காலத்தில் அவரது மகன்களுக்கு இடையே ஏற்பட்ட வாரிசுரிமைப் போட்டிதான் மிகப்பெரிய வேதனையாக அமைந்தது.

காங்ஸி தனது இரண்டாவது மகனான தியான்பாவ் (Yinren) என்பவரை முடிசூட்டு இளவரசராக அறிவித்திருந்தார். ஆனால், அவரது தவறான நடத்தை மற்றும் சூழ்ச்சிகள் காரணமாக காங்ஸி அவரை இருமுறை பதவியிலிருந்து நீக்கி, சிறை வைத்தார்.

இதையடுத்து அவரது மற்ற மகன்கள் (குறிப்பாக 9 இளவரசர்கள்) அரியணையைக் கைப்பற்ற பல குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குள் கடுமையான சதிகளிலும் சண்டைகளிலும் ஈடுபட்டனர். இந்த சகோதரப் போர் காங்ஸியின் மனதை பெரிதும் பாதித்தது. அவரது உடல்நலம் கெட்டது. எனவே, எந்த ஒரு இளவரசரையும் பகிரங்கமாக வாரிசாக அறிவிக்கவில்லை.

அவரது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில், காங்ஸி தனது அதிகாரிகள் மீது அதிக மென்மையான போக்கைக் கடைப்பிடித்தார். அதைத் தொடர்ந்து அதிகாரிகளிடையே ஊழலும், வரி ஏய்ப்பும் அதிகரித்தன. எல்லைப் போர்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளால் குயிங் பேரரசு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தது.

1717 ஆம் ஆண்டு டிசம்பரில், காங்ஸி தனது மகன்களையும் அதிகாரிகளையும் அழைத்து ஒரு உருக்கமான உரையை நிகழ்த்தினார்.

அதில் அவர் தனது 57 ஆண்டுகால ஆட்சியின் சோர்வு, மரண பயம், மற்றும் ஒரு பேரரசராகத் தான் அனுபவித்த தனிமை ஆகியவற்றை வெளிப்படுத்தினார்.

“உலகத்துச் செல்வங்கள் அனைத்தும் எனக்குக் கிடைத்துவிட்டன, ஆனால் முதுமையில் இவை அனைத்தும் வெறும் மண்ணும் சாம்பலும் ஆகும்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

1722-ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், பெய்ஜிங்கின் புறநகரில் உள்ள சாங்சுன்யுவான் (Changchunyuan) என்ற ஏகாதிபத்திய மாளிகையில் தங்கியிருந்தபோது காங்ஸி கடுமையாக நோய்வாய்ப்பட்டார். 20 டிசம்பர் 1722 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி, தனது 68-வது வயதில் அவர் மரணம் அடைந்தார்.

காங்ஸியின் மரணத்திற்குப் பிறகு, அவரது நான்காவது மகனான யின்சென் (Yinzhen) அடுத்த பேரரசராக அரியணை ஏறினார். அவரே யோங்செங் பேரரசர் (Yongzheng Emperor) என்று அழைக்கப்பட்டார். காங்ஸியின் இறுதி உயிலின்படிதான் அவர் பேரரசர் ஆனார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், யின்சென் தனது தந்தையின் உயிலை போலியாகத் தயாரித்து ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தார் என்ற செய்தியும் சீன வரலாற்றில் நீடிக்கிறது.

கோங்ஸி பேரரசர் இறந்த பிறகு, அவரது உடல் மாலன்யு (Malanyu) பகுதியில் உள்ள ஜிங்லிங் (Jingling) கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *