அரசியல்

சஞ்சய் காந்தியும், நரேந்திர மோடியும்

1980ஆம் ஆண்டு ஜூன் மாதம், நாடாளுமன்றத்தில் பல்ராம் ஜாக்கர் சஞ்சய் காந்தியின் மறைவை அறிவித்தபோது, ஒட்டுமொத்த அவையும் உறைந்துபோனது. உடனடியாக என்ன எதிர்வினையாற்றுவது என்று யாருக்கும் தெரியவில்லை.

சஞ்சய் காந்தி, இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளையாக இருந்தார். தனக்குப் பிறகு எல்லாமே சஞ்சய்தான் என்ற பிம்பத்தை இந்திரா கட்டமைக்கத் தொடங்கினார். அதில் வெற்றியும் பெற்றிருந்தார். அம்மாவின் செல்லப்பிள்ளையாக சஞ்சய் வெளியுலகுக்குத் தெரிந்தாலும், அவரைப் போல இன்றுவரை தேசிய அரசியலில் மர்மமான ஆளுமையாக இருந்தவர் வேறு யாரும் இல்லை.

சிறுவயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசாமல், தனக்கென்று ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சஞ்சய் குறித்து இந்திராவுக்கு வருத்தம் இருந்தது. ராஜீவ் எப்படியாவது பிழைத்துக்கொள்வார் என்றும், சஞ்சயைக் கைதூக்கிவிட வேண்டும் என்றும் இந்திரா நினைத்திருக்கலாம். அது சற்றே அளவுக்கு மீறிப்போனது.

சஞ்சய் காந்தி, சீமான் வீட்டுக் கன்றுக்குட்டியாக வாழ விரும்பினார். உயர்தர ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டுவது, மிக ஆபத்தான உயரத்தில் விமானத்தில் பறப்பது என எதைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை.

அவரது அரசியல் பிரவேசம் தேர்தல் பிரசாரத்திலிருந்துதான் தொடங்கியது. தொடக்கத்தில் சஞ்சய் காந்தி, இந்திராவுக்காகப் பிரசாரம் செய்தார்.

அப்போது இந்திராவின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, மக்களிடம் பெரிய ஈர்ப்பை சஞ்சய் ஏற்படுத்தவில்லை. அவர் இன்னும் ஒரு மாபெரும் தலைவராக உருவாகாத காலம் அது. அவரது கூட்டங்களுக்கு 200 பேர் வந்தாலே பெரிய விஷயம்.

இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியபோது, காங்கிரஸின் பேச்சாளராக இருந்த சஞ்சய், இந்திராவின் ஆலோசகராக மாறினார். பொதுமக்களுக்குக் காங்கிரஸ் மீது பயமும் அவநம்பிக்கையும் ஏற்பட்டுக்கொண்டிருந்த அதே நேரத்தில், காங்கிரஸுக்குள் சஞ்சய் காந்தி மீதான அச்சமும், எதிர்காலம் குறித்த பயமும் உருவாகியிருந்தன.

எதையும் அதிரடியாகச் செய்யக்கூடியவராக இருந்த சஞ்சயின் திட்டங்கள் அனைத்தும் மக்களை எரிச்சலடையச் செய்தன.

இதே நேரத்தில்தான் இந்திரா, ஊடகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்; அவற்றைத் தனது அடிமைகளாக்க வேண்டும் என்று நினைத்தார். தனக்கு எதிராகச் சதி நடக்கிறது என்று அவர் உண்மையாகவே நம்பினார்.

அப்போது ஒரே தொலைக்காட்சி நிலையமான தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவை மட்டுமல்ல, மற்ற ஊடகங்களும் அரசின் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பின்னாளில் பிரதமரான இந்தர் குமார் குஜ்ரால், அப்போது தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். ஊடகங்களுக்குக் கடிவாளம் போடும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. அவர் மறுத்தார்.

சஞ்சயின் தலையீடு வந்தபோது, “நான் உங்கள் அம்மாவின் அமைச்சரவையில்தான் அமைச்சரே தவிர, உங்களுக்காக அல்ல” என்று அவர் கூறினார். உடனடியாக அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். வி.சி. சுக்லா பொறுப்பேற்றார்.

வித்யாசரண் சுக்லா, அரசிடம் இருந்த அதிகாரங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட அதிகாரங்களையும் பயன்படுத்திக்கொண்டார்.

போர்க்காலத்தில் அமல்படுத்த வேண்டிய சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்து, ஊடகங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் இந்திரா. இந்த நேரத்தில் சஞ்சயின் பிம்பம் ஊடகங்களால் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டது. நெருக்கடி நிலைக் காலத்திலும் அவரைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட பிம்பம் உருவாக்கப்பட்டது.

உண்மைகளை எழுதும் பத்திரிகைகள், “அமெரிக்கக் கைக்கூலிகள்”, “மேற்குலக நாடுகளின் அடிமைகள்” என்று அழைக்கப்பட்டன.

இந்த ஊடகங்களுக்கு நல்ல செய்திகளே கண்ணுக்குத் தெரிவதில்லை என்றும், நேர்மறையான செய்திகளை வெளியிடாமல் எப்போதும் வறுமை, கொடுமை என்றே எழுதுகின்றன என்றும் விமர்சிக்கப்பட்டன.

இந்திரா காந்தி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டினார்.

“நல்ல செய்திகளைப் பரப்புங்கள்” என்றார்.

அனைத்து ஊடகங்களுக்கும் கட்டளைகள் அனுப்பப்பட்டன. “நல்ல செய்திகளை” மட்டுமே வெளியிட வேண்டும் என்பதே அந்தக் கட்டளை.

இரண்டாவது கட்டளை இன்னும் சிறப்பானது. வானொலி, தொலைக்காட்சி ஆகிய இரண்டிலும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்திராவின் 20 அம்சத் திட்டங்கள் பற்றியும், இறுதியில் சஞ்சய் காந்தியின் 5 அம்சத் திட்டங்கள் பற்றியும் செய்திக் குறிப்புகளை இணைக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையமும், வானொலி நிலையமும் எவ்வளவு “நல்ல செய்திகளைப்” பரப்பியுள்ளன என்பது குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும்.

சஞ்சய் காந்தி ஒருமுறை ஆந்திராவுக்குச் சென்றார். அரசு அதிகாரிகள் குவிந்தனர். ஊடகங்கள் குவிக்கப்பட்டன. அவர் அங்கு 12 மணி நேரம் இருந்தார்.

அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அவை ஒளிபரப்பப்பட்டன.

இது மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை. சஞ்சய் காந்தி ஒரு மாபெரும் தலைவராகச் சித்தரிக்கப்பட்டார். இந்தியாவின் எதிர்காலக் கனவுகளைக் காண்பவர் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது.

அவர் இறக்காமல், அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அடுத்த பிரதமராக அவர் நிச்சயம் வந்திருப்பார் என்றே சொல்லலாம். இவை அனைத்துமே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிம்பங்கள்.

சஞ்சய் காந்தியின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது இன்றைய இந்தியாவுக்கும் பொருந்தும். ஊடகங்களின் மூலமாக எவருடைய பிம்பத்தையும் ஒரு மாபெரும் தலைவராகச் சித்தரிக்க முடியும்.

சாதாரண ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த நரேந்திர தாஸ் மோடி, இன்று பிரதமராக இருப்பதற்குப் பின்னணியில் அவர் கட்டமைத்துக்கொண்ட பிம்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பிம்பத்தை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்.

குஜராத் மாடல் என்று ஒன்றை அவர் பரப்பினார். இந்துக்களின் காவலன் என்றார். தேசியம்தான் தனது கண்கள் என்றார். தன்னை ஒரு விராட் புருஷனாகச் சித்தரித்துக்கொண்டார். இவை அனைத்துமே அவர் திட்டமிட்டுக் கட்டமைத்துக்கொண்ட பிம்பங்கள்.

இந்திராவைப் போன்ற வலுவான பின்னணி மோடிக்கு இல்லை. ஆனால், அவருக்குப் பின்னால் ஓர் இயக்கம் இருந்தது. அந்த இயக்கத்துக்கு மோடி தேவைப்பட்டார். அதேபோல மோடிக்கும் அந்த இயக்கம் தேவைப்பட்டது.

சஞ்சய் காந்தி, நெருக்கடி நிலைக் காலத்தில் பிரதமர் அலுவலகத்தையே தனது வீட்டுக்கு மாற்றும் அளவுக்குச் செயல்பட்டார். தனக்கு யாரும் எதிரி இல்லை என்ற மனப்போக்கு அவரிடம் இருந்தது.

கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு போன்ற அதிரடித் திட்டங்கள் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியிருந்தன. இதற்கிடையில், மக்களுக்கான கார் என்று மாருதியை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. அந்தக் கார் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் சஞ்சய் காந்தியை இந்திரா நியமித்தார்.

மிகச் சிறிய வயதில், எந்த முன் அனுபவமும் இல்லாத சஞ்சய் காந்தி, அரசு ஆதரவுடன் உருவாக்கப்பட்ட மாருதி கார் நிறுவனத்துக்குத் தலைமை தாங்கியது பத்திரிகையாளர்களையும், காங்கிரஸுக்குள் இருந்த தலைவர்களையும், பொதுமக்களையும் எரிச்சலடையச் செய்தது.

சஞ்சய் கார்களின் மீது ஆர்வம் கொண்டவர் என்பதும், மூன்று ஆண்டுகள் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இடைநிலைப் பயிற்சியாளராக இருந்தார் என்பதும் அவரது தகுதிகளாக இந்திராவால் சொல்லப்பட்டன.

இதற்கு இந்திரா அரசின் ஆதரவு ஊடகங்கள் ஆமாம் சாமி போட்டன. இந்திய மத்தியதர வர்க்கத்தின் கனவைச் சஞ்சய் நனவாக்குவார் என்று எழுதின.

ஆனால், கடைசியில் அவர் பொறுப்பேற்றிருந்த காலத்தில் கார் உற்பத்தி சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை.

இதை அப்படியே நாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையுடன் ஒப்பிட முடியும்.

மோடி பிரதமராவதற்கு முன்பு, தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதிகளை இலவச நோட்டீஸ்களைப் போல அள்ளி வீசினார். அதில் ஒன்றுதான் கருப்புப் பணத்தை மீட்பதாகக் கூறியது.

அவர் அள்ளி வீசிய வாக்குறுதிகளில் மயங்கிய மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அவருக்கு ஆதரவான ஊடகங்களும், “இதோ வந்துவிட்டார். ஏதோ செய்யப்போகிறார்” என்று தொடர்ந்து பிரசாரம் செய்தன.

மோடி வந்துவிட்டார்.

பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்தார். இந்தியாவே அலைக்கழிக்கப்பட்டது.

திருமணம் வைத்திருந்தவர்கள், வெளியூருக்குச் சென்றிருந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் எனப் பலரும் தெருவில் வந்து நின்றார்கள்.

ஒரே நாளில் தங்களது எதிர்காலம் குறித்த கேள்விகளுடன் வங்கிகளின் முன்பு நீண்ட வரிசையில் நின்றார்கள். நீண்ட வரிசைகளின் காரணமாகச் சில இடங்களில் மரணங்களும் நிகழ்ந்தன.

இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாத மோடி, தொடர்ந்து ஊடகங்கள் மூலமாக இது கருப்புப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கை என்றும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஊடகங்களும் அதையே திரும்பத் திரும்பச் சொல்லின. ஒருவகையில், ஊடகங்களின் இந்தத் திட்டம் பலனையும் அளித்தது. “நம்முடைய நல்லதுக்குத்தானே செய்கிறார்கள்” என்று மக்களை நம்பவைத்தன.

ஆனால், இது அவசரக்குடுக்கைத்தனமான நடவடிக்கை என்று ரிசர்வ் வங்கி கூறியது. அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தால், பிரதமர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று செய்தி வெளியாகும். அதனால், செய்திகளைத் தவிர்க்க எப்போதும்போல மௌனம் சாதித்தார் மோடி.

ஊடகங்களைத் தங்களுக்குத் தேவையான விதத்தில் பயன்படுத்திக்கொள்வதில் சஞ்சயும் மோடியும் திறமைமிக்கவர்களாக இருந்தார்கள். மக்களின் முன்பாக எப்படித் தெரிய வேண்டுமோ, அப்படித் தங்களை வடிவமைத்துக்கொண்டார்கள்.

இன்றும் சஞ்சயின் புகைப்படங்களைப் பார்த்தால் இது தெரியும். குடும்பத்துக்கு நெருக்கமானவராகவும், தீவிரப் பேச்சாளராகவும், நவீனத் தொழில்நுட்பத்தில் அக்கறை கொண்டவராகவும், அம்மாவின் செல்லப்பிள்ளையாகவும் அவர் புகைப்படங்களில் தோன்றுவார்.

மோடியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தனது அம்மாவைச் சந்திக்கச் சென்றால்கூட, அவர் காரிலிருந்து இறங்கும்போது கேமராமேன்கள் உடன் இருக்க வேண்டும். தனது ஒவ்வொரு செயலும் கேமராவில் பதிவாகிறதா என்பதை அவரே முன்னின்று பார்த்துக்கொள்கிறார்.

கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு என்பது சஞ்சயின் அரசியல் வாழ்க்கையில் மாற்ற முடியாத கரும்புள்ளி. எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தில் அவர் மக்களின் உணர்வுகளோடு விளையாடினார். இந்தியா போன்ற நாட்டில் இப்படியான அதிரடித் திட்டங்கள்தான் செல்லுபடியாகும் என்று அவர் நினைத்ததே இதற்குக் காரணம்.

இப்போது இங்கே வாருங்கள்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நான்கே மணி நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, மோடியின் ஆதரவாளர்கள் சொன்னது என்ன?

“இந்தியா போன்ற நாட்டில் இப்படியான அதிரடிதான் செல்லுபடியாகும்” என்றார்கள்.

ஆனால், லட்சக்கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வார்கள் என்ற திட்டம் அரசிடம் இல்லை.

மோடியே எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. மைல் கணக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சென்றார்கள்.

இந்தியா போன்ற நாட்டில் அதிரடித் திட்டங்கள் வேலைக்கு ஆகாது என்பதை மோடி ஒருநாளும் புரிந்துகொண்டதில்லை. சஞ்சயின் மனநிலையைப் போலவே, நம்மைக் கேட்க யாரும் இல்லை என்ற மனநிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் இவை.

ஒரு தலைவனின் தேவையும் பொறுப்பும், நெருக்கடியான காலத்தில் எப்படி, யாருக்காகச் சிந்திக்கிறார் என்பதில்தான் இருக்கிறது.

இதில் சஞ்சய் தலைவராக உருவாகாமலேயே தோற்றார். மோடியோ ஒரு நாட்டின் தலைவரான பிறகு தோற்றுநிற்கிறார்.

மோடியையும் சஞ்சய் காந்தியையும் ஒப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியா போன்ற பல்வேறு நிலப்பரப்புகளையும், பண்பாடுகளையும் கொண்ட ஒரு நாட்டை ஆள்வதற்கு அவசரக்குடுக்கைகளாலும், வெற்றுப் பிம்பத்தின் மூலம் வாழ்பவர்களாலும் முடியாது.

சஞ்சய் காந்தி குறித்துப் பல புத்தகங்களும் கட்டுரைகளும் வெளிவரவில்லை. வினோத் மேத்தா போன்றவர்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்கும்போது ஒரு விஷயம் புரிகிறது. சஞ்சய் ஒருவேளை பிரதமராக இருந்திருந்தால், இந்தியாவைப் பற்றிய தனது கனவை நிறைவேற்றுவதற்காக இந்தியாவின் ஆன்மாவையே பலிகொண்டிருக்கலாம்.

சஞ்சய் விட்டுச்சென்ற இடத்தை மோடி எடுத்துக்கொண்டிருக்கிறார். மதவாதம் என்ற பெயரில் மோடி அதைச் செய்துகொண்டிருக்கிறார்.

ஒரு தலைவன் என்பவன், தன்னைத் தலைவனாக எல்லோரும் நினைக்க வேண்டும் என்று அரும்பாடுபட வேண்டியதில்லை. அவன் உண்மையான தலைவனாகவே இருக்க வேண்டும்.

குறிப்பு: ஜூன் 25ஆம் தேதி இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *