ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனை புரிந்தார் வித்யா ராம்ராஜ். திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசின் உதவியால்தான் அதிலும் குறிப்பாக அன்றைய துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உதவியால்தான் தன்னால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது என்று பகிரங்கமாக அறிவித்தார் வித்யா.
அரசு சார்பில் நடபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற வித்யா ராம்ராஜ், இன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதியை தனது குடும்பத்தினருடன் சந்தித்து தனது நன்றியை வெளிப்படுத்தினார். அவருடைய கைகளில் தான் பெற்ற பதக்கங்களை கொடுத்து அணிவிக்கச் செய்து மகிழ்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உதயநிதி தனது பதிவில் தெரிவித்து இருப்பது…
ஜப்பானில் நடைபெற்ற 20th Asian Games-ல் 42 ஆண்டுகளுக்குப் பிறகு 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்த தடகள வீராங்கனை தங்கை வித்யா ராம்ராஜை நேரில் வாழ்த்தினோம்.
கழக ஆட்சிக்காலத்தில் அவரது திறமைக்கு துணை நிற்கும் வகையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட உதவிகள் – ஊக்கத்தொகை உள்ளிட்டவைக் குறித்து எடுத்துரைத்து அன்பை வெளிப்படுத்தினார்.
அடுத்தடுத்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் களம் காணவுள்ள தங்கை வித்யா ராம்ராஜின் பதக்கப்பயணம் தொடரட்டும்.
அன்பும் – வாழ்த்தும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


