கோபம் சில நேரங்களில் ஒரு மனிதருக்கு வலிமையையும் ஊக்கத்தையும் தரும் என்பதற்கு ஃபேன்னி பிளாங்கர்ஸ்-கோயனின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.
இவர், நெதர்லாந்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை. இவர் தனது அசாத்தியமான ஆற்றலைப் பயன்படுத்தி விளையாட்டு உலகில் மிகப்பெரிய சாதனையை செய்த முதல் பெண்மணி.
1948-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு 30 வயது. அந்த வயதில் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவது கடினம் என்று நண்பர்களும் நெருக்கமான பலரும் கூறினர்.
ஒரு செய்தித்தாள் நிருபர்கூட, அவருடைய வயது பெரிய தடையாக இருக்கும் என்று எழுதினார். வேறு சிலரோ, விளையாட்டில் கவனம் செலுத்துவதைவிட இளம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதே அவருக்கு நல்லது என்றனர்.
இந்த விமர்சனங்கள் அவரை மிகவும் கோபப்படுத்தின. அதனால் அவர் இன்னும் அதிகமாகப் பயிற்சி செய்தார்.
ஃபேன்னி 1918 ஏப்ரல் 26 அன்று நெதர்லாந்து தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் பிறந்தார். அவரது குடும்பத்தினர் நீச்சல், சறுக்குவிளையாட்டு, ஸ்கேட்டிங், டென்னிஸ் போன்ற பல விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
அவருக்கு ஆறு வயதாக இருந்தபோது, உள்ளூர் விளையாட்டுக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு நீந்துவதிலும் ஓடுவதிலும் தனது திறமையை வளர்த்துக்கொண்டார். அவருக்கு 17 வயதானபோது தடகளப் பயிற்சியாளர்கள் அவருக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினர்.
1935-ஆம் ஆண்டு நெதர்லாந்தின் குரோனிங்கன் நகரில் நடைபெற்ற தனது முதல் போட்டியில் அவர் வெற்றி பெறவில்லை. ஆனால் மனம் தளரவில்லை. அடுத்த மாதமே, 800 மீட்டர் ஓட்டத்தில் அந்நாட்டின் தேசிய சாம்பியனைத் தோற்கடித்தார்.
1936-ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்காக பயிற்சி பெற்றார். அப்போது, நெதர்லாந்து அணியின் பயிற்சியாளரான யான் பிளாங்கர்ஸ் அவரைக் கவனித்தார். ஓட்டத்திலும் உயரம் தாண்டுதலிலும் அவர் சிறப்பாக வருவார் என்பதை உணர்ந்தார். எனவே, 18 வயதான ஃபேன்னியை நெதர்லாந்து அணியில் சேர்த்தார்.
பெர்லின் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் ஆறாவது இடத்தையும், பெண்களுக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஐந்தாவது இடத்தையும் பெற்றார். 1940-ஆம் ஆண்டு யான் பிளாங்கர்ஸை மணந்தார்.
இரண்டாம் உலகப் போர் (1939–1945) காரணமாக 1940, 1944 ஆகிய ஆண்டுகளின் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. நெதர்லாந்து நாஜி ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், ஃபேன்னி தனது விளையாட்டுப் பயிற்சியைத் தொடர்ந்தார். தனது இரண்டு குழந்தைகளின் பிரசவ காலத்தில் மட்டும் பயிற்சியிலிருந்து ஓய்வு எடுத்தார்.
1946-ஆம் ஆண்டு ஒஸ்லோவில் சர்வதேச தடகளப் போட்டிகள் மீண்டும் தொடங்கின. ஏழு மாதங்களுக்கு முன்புதான் இரண்டாவது குழந்தையைப் பெற்றிருந்தார். சோதனையில் அவர், முழுமையான உடற்தகுதியைப் பெறவில்லை. இருந்தாலும், அந்தப் போட்டிகளில் பங்கேற்றார். 80 மீட்டர் தடை ஓட்டத்தில் வெற்றி பெற்றார்; 1000 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் முக்கியப் பங்கு வகித்தார். உயரம் தாண்டுதலில் நான்காவது இடம் பெற்றார்.
அந்தப் போட்டிகளைத் தொடர்ந்து, 1948-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் மீண்டும் நடைபெற்றன. போட்டியில் பங்கேற்க, தனது குழந்தைகளை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. ஃபேன்னி மனதளவில் கவலைப்பட்டார். ஆனால், கணவர் ஊக்கம் அளித்தார். எனவே, அந்தக் கவலையைத் தாண்டி போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்தார்.
1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி, 100 மீட்டர் ஓட்டத்தில் 11.9 விநாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார். அடுத்த நாள் 80 மீட்டர் தடை ஓட்டத்தில் 11.2 விநாடிகளில் ஓடி உலகச் சாதனையுடன் தங்கம் வென்றார்.
அதன்பிறகு 200 மீட்டர் ஓட்டத்தில் 24.3 விநாடிகளில் ஓடி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். பெண்களுக்கான தொடர் ஓட்ட அணியின் இறுதிக் கட்ட வீராங்கனையாகவும் ஓடி மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் பெண்ணாகவும், இன்றளவும் அந்தச் சாதனையைச் செய்த ஒரே பெண்ணாகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.
அவர் நாடு திரும்பியபோது மக்கள் மலர்களாலும் கேக்குகளாலும் அவரை வரவேற்றனர். அவரது வெற்றியைக் கொண்டாடும் வகையில் சிலர் அவருக்கு மிதிவண்டியையும் பரிசளித்தனர். 1948-ஆம் ஆண்டு Associated Press செய்தி நிறுவனம் அவரை ஆண்டின் சிறந்த பெண் விளையாட்டு வீராங்கனையாகத் தேர்ந்தெடுத்தது.
அவருக்கு “பறக்கும் டச்சுப் பெண்மணி” என்ற செல்லப்பெயரும் வழங்கப்பட்டது. 1955-ஆம் ஆண்டு போட்டி ஓட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார். 1968ல் மெக்சிகோ நகர ஒலிம்பிக்கில் நெதர்லாந்து அணியின் மேலாளராகப் பணியாற்றினார். 1980-ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் விளையாட்டு அரங்கில் சேர்க்கப்பட்டார்.
வயது, குடும்பப் பொறுப்புகள், பிறரின் விமர்சனங்கள் ஆகியவை நமது இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்க முடியாது என்பதை இவர் நிரூபித்தார்.



