தமிழ் சினிமாவுல ஒரு பெரிய மாஸ் ஹீரோவை வச்சு படம் பண்ணணும்னா… பொதுவா என்ன நடக்கும்?
பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வருவாங்க… பெரிய பட்ஜெட்டுல படம் எடுப்பாங்க… அந்த ஹீரோவை மையமா வச்சு பிரம்மாண்டமா விளம்பரம் செய்வாங்க.
ஆனா… நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விஷயத்துல ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு!
சிவாஜியோட சேர்ந்து நடிச்ச பல நடிகர்களே… அவரோட நடிப்பைப் பார்த்து வியந்து… “இவரை வச்சு நாமும் ஒரு படம் தயாரிக்கணும்!”ன்னு ஆசைப்பட்டிருக்காங்க.
அப்படி சிவாஜி சாரை ஹீரோவா வச்சு படம் தயாரிச்ச நடிகர்கள் யார் யார்?
அந்தப் படங்களுக்குப் பின்னாடி இருக்கிற சுவாரஸ்யமான விஷயங்கள் என்ன?ஒவ்வொண்ணா பாக்கலாம்.
1. பி.ஆர். பந்துலு
இந்த லிஸ்ட்டுல முதல்ல வர்றவர்… பி.ஆர். பந்துலு.
இவர் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளர் மட்டுமில்ல… ஒரு சிறந்த நடிகரும் கூட.
சொல்லப்போனா, சிவாஜியை வைத்து படம் தயாரித்த முதல் நடிகர் பி.ஆர். பந்துலுதான்.
சிவாஜியை வைத்து அவர் தயாரித்த முதல் படம்… ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’.
1954-ல் வெளியான இந்தப் படம், சிவாஜியோட 13-வது படம்.
அதுக்கு முன்னாடி சிவாஜி நடித்த 12 படங்களுமே பெரும்பாலும் சீரியஸான கதைகள்.
அதே நேரத்துல சிவாஜியும் ஒரு மிகப்பெரிய நடிகரா வளர்ந்து வந்துட்டிருந்தார்.
அப்படிப்பட்ட நேரத்துல… “சிவாஜியை வச்சு ஏன் ஒரு காமெடி படம் பண்ணக்கூடாது?”ன்னு யோசிச்சவர் பந்துலு.
அதனாலதான் சிவாஜியை ஒரு காமெடி கதைக்குள்ள கொண்டுபோய் வித்தியாசமா காட்டினார்.
அந்த முயற்சியும் நல்ல வரவேற்பைப் பெற்றுச்சு.
அதுக்கப்புறம் ‘முதல் தேதி’, ‘தங்கமலை ரகசியம்’, ‘சபாஷ் மீனா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘கர்ணன்’, ‘பலே பாண்டியா’, முரடன் முத்து’ன்னு சிவாஜியை வைத்து தொடர்ந்து பல படங்களை தயாரிச்சார்.
இதோட நிக்கல…
‘ஸ்கூல் மாஸ்டர்’ படத்தை இந்தி, கன்னடம், மலையாளம் என மூணு மொழிகள்ல தயாரிச்சு வெளியிட்டார். அதுல சிவாஜி கௌரவ வேஷத்துல நடித்திருந்தார்.
அதே மாதிரி சிவாஜியோட முழு தோற்றத்தையே மாற்றிக் காட்டிய ஒரு படம்…
‘குழந்தைகள் கண்ட குடியரசு’.
இதுல சிவாஜி ஒரு விஞ்ஞானி கேரக்டர்ல நடித்திருப்பார்.
மூணு வேஷ பலே பாண்டியா சிவாஜி இன்னொரு மைல்கல்.
இப்படி பார்த்தா… சிவாஜியோட நடிப்புல பல வித்தியாசமான பரிமாணங்களை ரசிகர்களுக்கு காட்டிய தயாரிப்பாளர்கள்ல பி.ஆர். பந்துலுவுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு.
சிவாஜி… பந்துலு…
தமிழ் சினிமாவுல மறக்க முடியாத ஒரு கூட்டணி!
2. டி.எஸ். பாலையா
அடுத்ததாக… சிவாஜியை வைத்து படம் தயாரித்த இன்னொரு நடிகர்…
டி.எஸ். பாலையா.
நடிகராக நம்ம எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச பாலையா… தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
அவர் சிவாஜியை வைத்து தயாரித்த படம்…
‘நல்ல வீடு’.
இந்தப் படம் 1956 ஜனவரி 14-ம் தேதி வெளியானது.
அதாவது… பொங்கல் வெளியீடாக வந்த படம்.
நடிகராக சிவாஜியோட இணைந்து நடித்த பாலையா… தயாரிப்பாளராகவும் சிவாஜியை வெச்சு படம் எடுத்திருக்கிறார் என்பதே இந்தப் படத்தோட சுவாரஸ்யம்.
3. வி.கே. ராமசாமி
அடுத்து வர்றவர்… நம்ம எல்லாருக்கும் பரிச்சயமான நடிகர் வி.கே. ராமசாமி.
சிவாஜியை வைத்து இவர் தயாரித்த முக்கியமான படங்கள்…
‘மக்களை பெற்ற மகராசி’ மற்றும் ‘செல்வம்’.
இதுல ‘மக்களை பெற்ற மகராசி’ படத்தை ஏ.பி. நாகராஜனோட சேர்ந்து தயாரித்தார்.
இந்தப் படத்தோட இன்னொரு சிறப்பு என்னன்னா…
கொங்கு வட்டார மக்களோட பேச்சு வழக்கை மையமா வைத்து வெளியான படம்.
அந்த காலத்துலேயே வட்டார மொழியை இவ்வளவு அழகா திரையில் கொண்டு வந்த முயற்சிகளில் இதுவும் ஒன்று.
இந்த ரெண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள்.
4. பி.எஸ். வீரப்பா
அடுத்ததாக… நடிகரும் தயாரிப்பாளருமான பி.எஸ். வீரப்பா.
சிவாஜியை வைத்து இவர் தயாரித்த படங்கள்…
‘ஆலயமணி’… ‘ஆண்டவன் கட்டளை’… ‘இரு துருவம்’.
இதுல குறிப்பா ‘ஆலயமணி’, ‘ஆண்டவன் கட்டளை’ ரெண்டுமே ரசிகர்கள்கிட்ட நல்ல வரவேற்பைப் பெற்ற வெற்றிப் படங்கள்.
சிவாஜியோட நடிப்பை நம்பி… வித்தியாசமான கதைகளை தயாரிக்க முன்வந்த நடிகர்கள்ல பி.எஸ். வீரப்பாவுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கு.
5. கே. பாலாஜி
இப்போ வர்றவர்… இந்த லிஸ்ட்டுல ரொம்ப முக்கியமான ஒருவர்.
கே. பாலாஜி.
சிவாஜியை வைத்து அதிகமான படங்களை தயாரித்த நடிகர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
இவர் சிவாஜியை வைத்து தயாரித்த முதல் படம்…
‘தங்கை’.
இந்தப் படம் நல்ல வசூல் செய்ததைத் தொடர்ந்து… சிவாஜியை வைத்து தொடர்ந்து பல படங்களை தயாரித்தார்.
‘என் தம்பி’… ‘திருடன்’… ‘தீபம்’… ‘எங்கிருந்தோ வந்தாள்’… ‘ராஜா’… ‘நீதி’… ‘தியாகம்’… ‘என் மகன்’… ‘உனக்காக நான்’… ‘தீர்ப்பு’… ‘நீதிபதி’… ‘மருமகள்’… ‘பந்தம்’…
இப்படி இன்னும் பல படங்கள்.
மொத்தத்துல சிவாஜியை வைத்து சுமார் 16 படங்களை தயாரித்தவர் கே. பாலாஜி.
சிவாஜியை ஒரு ஆக்ஷன் ஹீரோவா காட்டிய ‘தங்கை’, ‘திருடன்’ மாதிரியான படங்களையும் தயாரிச்சிருக்கார்.
‘தியாகம்’… ‘தீர்ப்பு’… ‘நீதிபதி’
என மூணு வெள்ளிவிழா படங்களையும் தயாரித்திருக்கிறார்.சிவாஜி பாலாஜி கூட்டணி ஒரு சாதனை கூட்டணி.
6. எஸ்.வி. சுப்பையா
அடுத்து…
எழுத்தாளர் ஜெயகாந்தனோட புகழ்பெற்ற நாவல்…
‘கைவிலங்கு’.
அந்தக் கதையை அடிப்படையா வைத்து எடுக்கப்பட்ட படம்…
‘காவல் தெய்வம்’.
இந்தப் படத்தை தயாரித்தவர் நடிகர் எஸ்.வி. சுப்பையா.
இந்தப் படத்துல சிவாஜி நடிச்சதுல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.
சிவாஜி இந்தப் படத்துக்காக சம்பளம் வாங்காமலேயே நடிச்சுக் கொடுத்தார்.
1969-ல் இந்தப் படம் வெளியானது.
ஒரு நடிகரா சிவாஜி எவ்வளவு பெரிய உயரத்துல இருந்தாலும்…நட்புக்காக சம்பளம் இல்லாமல் கூட நடிச்சுக் கொடுத்திருக்கிறார் என்பதுக்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்.
7. எஸ்.ஏ. கண்ணன்
அடுத்து வர்றவர்…
எஸ்.ஏ. கண்ணன்.
இவரை சிவாஜியோட பல படங்கள்ல துணை நடிகரா நாம பார்த்திருப்போம்.
குறிப்பா ‘பாசமலர்’ படத்துல வீட்டு வேலைக்காரனா வருவார்.
இதே எஸ்.ஏ. கண்ணன்… சிவாஜியை வைத்து ஒரு படம் தயாரிச்சிருக்கிறார்.
அந்தப் படம்…
‘சத்யம்’.
இந்தப் படத்துல சிவாஜியோட கமல்ஹாசனும் நடித்திருந்தார்.
இன்னொரு சுவாரஸ்யம் என்னன்னா…
இந்தப் படத்தை இயக்கியவரும் எஸ்.ஏ. கண்ணன்தான்.
அதாவது…
சிவாஜியோட பல படங்கள்ல துணை நடிகரா இருந்தவர்…
ஒரு கட்டத்துல சிவாஜியை ஹீரோவா வைத்து படம் தயாரிச்சதோட மட்டுமில்லாம… அந்தப் படத்தையே இயக்கவும் செய்திருக்கிறார்!
8. தெலுங்கு நடிகர் கிருஷ்ணா
அடுத்ததாக…
தெலுங்கு சினிமாவோட பிரபல நடிகர் கிருஷ்ணா.
அவருடைய தயாரிப்பு நிறுவனமான பத்மாலயா பிக்சர்ஸ் மூலமா சிவாஜியை வைத்து தயாரித்த படங்கள்…
‘விஸ்வரூபம்’ மற்றும் ‘தியாகி’.
இதுல ‘விஸ்வரூபம்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம்.
தெலுங்கு திரையுலகத்துல பெரிய நட்சத்திரமா இருந்த கிருஷ்ணா… தமிழ்ல சிவாஜியை வைத்து படம் தயாரித்தது இந்த கூட்டணியோட தனிச்சிறப்பு.
9. ஏ.வி.எம். ராஜன்
அடுத்து வர்றவர்…
நடிகர் ஏ.வி.எம். ராஜன்.
இவர் சிவாஜியை வைத்து தயாரித்த படங்கள்…
‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ மற்றும் ‘ஊரும் உறவும்’.
இதுல ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’… தெலுங்குல வெளியான ‘டிரைவர் ராமுடு’ படத்தோட ரீமேக்.
அதே நேரத்துல ‘ஊரும் உறவும்’ படம் மலைவாழ் மக்களோட வாழ்க்கை மற்றும் பிரச்சினைகளை மையமா வைத்து எடுக்கப்பட்ட படம்.
இந்தப் படத்தை இயக்கியவர்…
மேஜர் சுந்தரராஜன்.
அதாவது, வழக்கமான கமர்ஷியல் கதையை மட்டும் நம்பாம… சமூகப் பிரச்சினையையும் பேசக்கூடிய கதையை சிவாஜியை வைத்து தயாரிச்சிருக்கிறார் ஏ.வி.எம். ராஜன்.
10. விஜயகுமார்
அடுத்ததாக…
நடிகர் விஜயகுமார்.
இவர் சிவாஜியை வைத்து தயாரித்த படம்…
‘நெஞ்சங்கள்’.
தன்னுடைய மகள் பெயரில் தொடங்கப்பட்ட வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்தார்.
1982-ல் வெளியான படம்.
ஒரு நடிகரா சிவாஜியோட இணைந்து நடித்த விஜயகுமார்…
ஒரு தயாரிப்பாளராகவும் சிவாஜியை தேர்ந்தெடுத்தது இந்தப் படத்தோட முக்கியமான விஷயம்.
11. என்.டி. ராமாராவ்
அடுத்து வர்றவர்…
தெலுங்கு சினிமாவோட மிகப்பெரிய நட்சத்திரம் என்.டி. ராமாராவ்.
தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராமகிருஷ்ணா சினி ஸ்டுடியோஸ் மூலமா சிவாஜியை வைத்து தயாரித்த தமிழ் படம்…
‘சரித்திர நாயகன்’.
இந்தப் படத்துக்கு கதை எழுதியவரும் என்.டி. ராமாராவ்தான்.
தெலுங்குல அவர் நடித்த வேஷத்தை… தமிழ்ல சிவாஜி நடித்திருந்தார்.
அதனால இந்தப் படத்துல சிவாஜியோட நடிப்போட சேர்ந்து…
தெலுங்கு சினிமாவோட இன்னொரு ஜாம்பவானான என்.டி. ராமாராவின் சினிமா பார்வையும் இணைஞ்சிருக்கு.
1984-ல் இந்தப் படம் வெளியானது.
12. அக்கினேனி நாகேஸ்வர ராவ்
அடுத்து வர்றவர்…
தெலுங்கு சினிமாவின் இன்னொரு மிகப்பெரிய நடிகர்…
அக்கினேனி நாகேஸ்வர ராவ்.
1987-ல் வெளியான தெலுங்குப் படம்…
‘அக்னி புத்ருடு’.
அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மூலமா நாகேஸ்வர ராவ் தயாரித்த இந்தப் படத்துல…
சிவாஜி கௌரவ வேஷத்துல நடித்திருந்தார்.
இன்னொரு சிறப்பு என்னன்னா…
சிவாஜியோட சேர்ந்து நாகேஸ்வர ராவும், அவருடைய மகன் நாகார்ஜுனாவும் நடித்திருந்தார்கள்
இந்த கூட்டணியே அந்தப் படத்துக்கு ஒரு தனி சிறப்பு.
13. சித்ரா லட்சுமணன்
அடுத்து…
நடிகராக பல படங்கள்ல நாம பார்த்திருக்கிற சித்ரா லட்சுமணன்.
இவர் சிவாஜியை வைத்து தயாரித்த படங்கள் ரெண்டு.
‘வாழ்க்கை’ மற்றும் ‘ஜல்லிக்கட்டு’.
இந்த ரெண்டு படங்களுமே 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படங்கள்.
ஒரு நடிகரா இருந்தவர்…
சிவாஜியை வைத்து தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.
14.பாக்யராஜ் ..தாவணிகனவுகள் படத்தை தயாரித்து இயக்கினார்.
சிவாஜி ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடித்து அசத்தி இருப்பார்
15. தேங்காய் சீனிவாசன்
அடுத்து…
நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச நகைச்சுவை நடிகர்…
தேங்காய் சீனிவாசன்.
அவர் சிவாஜியை வைத்து தயாரித்த படம்…
‘கிருஷ்ணன் வந்தான்’.
இந்தப் படத்துக்கு பின்னாடியும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு.
‘கிருஷ்ணன் வந்தான்’ முதல்ல தேங்காய் சீனிவாசன் நடிச்ச நாடகம்.
அந்த நாடகத்தையே பின்னாடி திரைப்படமா உருவாக்கினார்.
1987-ல் இந்தப் படம் வெளியானது.
அதாவது… மேடை நாடகத்துல ஆரம்பிச்ச ஒரு கதை…
பின்னாடி சிவாஜி நடித்த திரைப்படமா மாறியிருக்கு !
16. கமல்ஹாசன்
இப்போ… இந்த லிஸ்ட்டுல இன்னொரு பெயர்.
கமல்ஹாசன்.
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவாஜி நடித்த படம்…
‘தேவர் மகன்’.
1992-ல் வெளியான இந்தப் படத்துல…
சிவாஜி ஏற்று நடித்த பெரிய தேவர் கதாபாத்திரம்… தமிழ் சினிமா ரசிகர்களால இன்னைக்கும் மறக்க முடியாத ஒரு நடிப்பு.
இந்தக் கதாபாத்திரத்துக்கு சிவாஜிதான் வேண்டும் என்ற எண்ணத்தோடதான் கமல்ஹாசன் இந்தப் படத்தை உருவாக்கியதாக அவர் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்.
அந்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை…
படம் வெளியான பிறகு சிவாஜியோட நடிப்பே சொல்லிடுச்சு!
17. கடைசியாக…
இந்த லிஸ்ட்டுல வர்ற இன்னொருத்தர்…
ரஜினிகாந்த்.
தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பா தயாரித்த படம்…
‘படையப்பா’.
1999-ல் வெளியான இந்தப் படத்துல…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு சிறப்பு வேஷத்துல நடித்திருந்தார்.
இந்த இரண்டு தலைமுறைகளோட நடிப்பு ஆளுமைகளும் ஒரே படத்துல இணைந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.
இப்படி பார்த்தா…
சிவாஜி கணேசனை வைத்து படம் தயாரித்தவர்கள் எல்லாருமே வெறும் தயாரிப்பாளர்கள் கிடையாது.
அவர்களில் பலர்…
சிவாஜியோட கூடவே நடிச்ச நடிகர்கள்.
சிலர் அவரோட சமகாலத்து ஜாம்பவான்கள்.
சிலர் அவருக்கு அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார்கள்.
ஆனா இவங்க எல்லாருக்கும் பொதுவா இருந்த ஒரு விஷயம் என்னன்னா…
சிவாஜியோட நடிப்புத் திறமை மேல இருந்த நம்பிக்கை!
ஒரு நடிகரை வைத்து படம் எடுக்கணும்னா தயாரிப்பாளருக்கு நம்பிக்கை வேணும்.
ஆனா…
சிவாஜியை வைத்து படம் எடுக்கணும்னு முடிவு பண்ணினவங்களுக்கு… அந்த நம்பிக்கை இன்னும் கொஞ்சம் அதிகமாவே இருந்திருக்கும்!
அதனாலதான்…
நடிகர் திலகம் நடித்த படங்களோட பட்டியல்ல…
அவர் நடித்த படங்களை தயாரித்த நடிகர்களோட பெயர்களும் ஒரு தனி வரலாறா நிக்குது.
சிவாஜி ஒரு நடிகர் மட்டுமில்ல…
ஒரு தலைமுறை நடிகர்களையே தயாரிப்பாளர்களாக மாற வைக்கிற அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நடிப்பு சக்தி!
இதுதான்… நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட இன்னொரு பெருமை!
செந்தில்வேல் சிவராஜ்
9087620800


