கட்டிடக்கலை நிபுணர் பொன்னி கூறுகிறார்!
தெலங்கானா மாநில தலைமைச் செயலகத்தை வடிவமைத்த பொன்னி என்பவர்தான் கோவை காந்திபுரம் பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியார் அறிவுலகம் கட்டிடத்தை வடிவமைத்த வடிவமைத்த கட்டிடக்கலை நிபுணர்.
அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது…
பெரியார் அறிவுலகம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் ஒரு டிசைன் காம்படிஷன் வைத்தார்கள், அதில் நான் வெற்றி பெற்றதால் எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த கட்டிடம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட நூலகத்தைத்தான் முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
பெரியார் அறிவுலகம் ஸ்பேஸ் ஏஜ் கட்டிடக்கலை அடிப்படையில் கட்டப்பட்டது. இரண்டு கோபுரங்களில் எட்டுத்தளங்கள் இருக்கிறது. ஆங்கிலம் , தமிழ் நூலகங்கள், இன்குபேஷன் சென்டர், டிஜிட்டல் லைப்ரரி என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் தளத்தில் பிரம்மாண்டமான கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பெரியார் அறிவுலகம் தான் இந்தியாவிலேயே அறிவியல் மையத்துடன் கூடிய முதல் நூலகம். இது தமிழ்நாட்டின் வரலாறு குறித்த ஒரு மியூசியம் போல இருக்கிறது. தமிழகம் கல்வி உட்பட பல்வேறு துறைகளில் முன்னோடியாக இருக்கிறது. அது போல இந்த நூலக துறையிலும் ஒரு முன்னோடியாக தமிழகம் இருக்கிறது. இந்த நூலகத்தில் விண்வெளி அறிவியலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலகம் கோவையின் அறிவுசார் தளத்திற்கும் தொழில் துறைக்கும் அறிவுசார் நுழைவு வாயிலாக இருக்கும்.
அமெரிக்காவில் கற்ற கட்டிடக்கலையை கொண்டு இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இந்த நூலகத்தை கட்டி இருக்கிறேன். எந்த திசையில் இருந்து பார்த்தாலும் கோவையின் முழு வியூ கிடைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை இங்கே உள்ளே வந்தால் அடிப்படை அறிவியல், வரலாறு, உயிரியல் உட்பட அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். விஞ்ஞானத்திற்கு என சின்ன குழந்தைகளுக்கு மாடல் இருக்கிறது, அவர்கள் அதை எடுத்து விளையாடலாம். சிறுமிகளுக்கு தனியாக ஒரு நூலகம் செய்து இருக்கிறோம். கோவையில் உள்ள அனைத்து வயதை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து என்ஜாய் பண்ணலாம்.
ஒரு ராக்கெட்டில் அமர்ந்து செல்லும்பொழுது எந்த உணர்வு வருமோ அது போலவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. துபாய் மியூசியத்தில் இது இருக்கிறது, அந்த மாடலை பார்த்து நாம் இங்கு செய்து இருக்கிறோம். ஒரு சிறுமிக்கு ஸ்பேஸ் ட்ராவல் என்றால் என்ன என்பது உடனே புரியும் வகையில் இதை செய்து இருக்கின்றோம்.
அமெரிக்காவில் கட்டிடங்களை மிக வேகமாக கட்டும் பி.டி பில்டிங் டெக்னாலஜி இருக்கிறது. அந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தியே இவ்வளவு வேகமாக இந்த பெரியார் அறிவுலகம் கட்டிடத்தை கட்டி முடிக்க முடிந்தது. இந்த கட்டிடத்திற்கு தேவையான அனைத்தும் தமிழ்நாட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது.
கோவையின் அடையாளமாக இந்த மையம் உருவாக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பணியை தமிழ்நாட்டிற்கு செய்த சேவையாக நினைக்கிறேன். பெரியார் சிந்தனைகளை மக்களிடம் எடுத்து வந்திருக்கிறோம்.
கட்டிடக் கலைத் துறையில் இதுவரை 243 விருதுகள் வாங்கி இருக்கிறேன். தெலுங்கானா தலைமை செயலகத்தை 1200 கோடி ரூபாய் மதிப்பில் சமீபத்தில் அமைத்துக் கொடுத்தோம். அதற்கு நிறைய விருதுகள் கிடைத்தன. இந்த பெரியார் அறிவுலகம் கட்டிடத்திற்கு எக்கனாமிக்ஸ் டைம்ஸ் எங்களுக்கு சமீபத்தில் விருது கொடுத்திருக்கிறது. இன்னும் நிறைய விருதுகளை தமிழகத்திற்கு பெற்றுக் கொடுக்கும்.
இவ்வாறு கட்டிடக்கலை நிபுணர் பொன்னி தெரிவித்தார்.



