1983ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, ‘விளக்கு வச்ச நேரத்துல’ பாடல் உருவானபோது நடந்த சுவாரசியமான சம்பவத்தைப் பாக்யராஜ் ஒருமுறை பகிர்ந்துகொண்டார்.
அந்தப் பாடலுக்கான இசைக்கோர்ப்பு நடைபெற்றபோது, பல்லவி வரிகளைப் பாக்யராஜ் இன்னும் எழுதிக் கொடுக்கவில்லை. அதற்குள் இளையராஜாவும், எஸ். ஜானகியும் சேர்ந்து அந்தப் பாடலை ஆறு முறை பாடி முடித்துவிட்டார்கள்.
அதன் பிறகுதான் பாக்யராஜ் பல்லவி வரிகளைக் கொடுத்தார்.
அந்த வரிகளைப் பார்த்த இளையராஜா, “ஆறு டேக் பாடி முடித்த பிறகு இப்போது இதையெல்லாம் படித்துப் பாடச் சொன்னால் எப்படி?” என்று தயக்கம் காட்டினார். ஆனால், பாக்யராஜோ, “நீங்கள் தமிழில்தானே பாடப் போகிறீர்கள்? படித்துப் பாடிவிடுங்கள்” என்று கூறினார்.
இளையராஜா வரிகளைப் படித்துப் பார்த்தபோதுதான், அதில் இடம்பெற்றிருந்த காதல் ரசம் நிறைந்த வரிகள் அவரது கவனத்துக்கு வந்தன. உடனே, “இதில் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறீர்களே! என்னால் பாட முடியாது” என்று மறுத்தார்.
அதற்கு பாக்யராஜ், “நான் என்ன தவறாக எழுதிவிட்டேன்? நன்றாகத்தானே ரசிக்கும்படி எழுதியிருக்கிறேன்!” என்று கேட்டார்.
ஆனால், இளையராஜா தனது முடிவில் உறுதியாக இருந்தார். “இல்லை, நான் இதையெல்லாம் பாட மாட்டேன். நான் மாலை போட்டிருக்கிறேன்” என்று கூறினார். அதாவது, ஐயப்பனுக்காக மாலை அணிந்திருந்ததால், அத்தகைய காதல் ரசம் நிறைந்த பாடலைப் பாடத் தயங்கியிருக்கிறார்.
இதைக் கேட்ட பாக்யராஜ், “உங்களை யார் மாலை போடச் சொன்னது? நீங்கள் மாலை போட்டிருப்பதற்காக நாங்கள் என்ன சாமி படமா எடுக்க முடியும்?” என்று நகைச்சுவையாகக் கேட்டார்.
மேலும், “மாலை அணிந்திருக்கும் காலத்தில் இசையமைக்க உட்கார மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால், மாலையை மறைத்துக்கொண்டு எங்களுக்குத் தேவையான ரசனையுடன் பாடலைப் பாடுங்கள்; சாமியைப் பற்றி அப்போது மறந்துவிடுங்கள்” என்றும் கிண்டலாகக் கூறியிருக்கிறார்.
இதனால் கோபமடைந்த இளையராஜா, ஒருவழியாகப் பாடத் தொடங்கினார். ஆனால், பாடலின் இறுதியில் வரிகளைப் பாடுவதற்குப் பதிலாக, “தன்னானன்னா… தரனானன்னா…” என்று ஹம்மிங் போன்ற ஒலிகளுடன் பாடி முடித்தார்.
அதைக் கேட்ட பாக்யராஜ், “சரி, ஓகே!” என்று கூறிவிட்டார். உடனே இளையராஜா, “நான் அந்த வார்த்தைகளையே பாடவில்லையே!” என்று சுட்டிக்காட்டினார்.
அதற்குப் பாக்யராஜ், “நீங்கள்தான் இப்படிப்பட்ட பாடலைப் பாட மாட்டேன் என்று சொன்னீர்கள். ஆனால், இப்போது நீங்கள் பாடிய விதம், நான் எழுதிய வரிகளைவிடவும் அதிகமான காதல் ரசத்துடன் இருக்கிறது!” என்று பதிலளித்தார்.
இவ்வாறு இளையராஜாவுடன் நடந்த அந்தச் சுவாரசியமான உரையாடலைப் பாக்யராஜ் பகிர்ந்துகொண்டார்.
முந்தானை முடிச்சு திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை நா. காமராசன் எழுதியிருந்தார். இளையராஜாவும் எஸ். ஜானகியும் இணைந்து பாடிய இப்பாடல், பல ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது.



