நாற்பது கிலோ மீட்டர் தூரத்தைப் பத்து நிமிடங்களில் கடக்கும் பறக்கும் வாகனத்தைக் கண்டுபிடித்துள்ளார் ரவி தம்தா. டெஸ்ட் ரைடிங் செய்து இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார். இது ஓர் ஒற்றை இருக்கை வாகனம். இந்த வாகனத்துக்கு HAPIDA SKYNeX என்று பெயரிட்டுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி தம்தா. தொழில்முனைவோர். அவருடைய இந்த முயற்சிக்குக் காரணம் அவர் வசிக்கும் பகுதிதான். மலைப் பிரதேசத்தில் போக்குவரத்துப் பிரச்னை உள்ளது. நேரடி சிறு தொலைவுக்குக்கூட சாலையில் நீண்ட தூரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். அவரது அலுவலகம் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சராசரியாக ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் பயணிக்க வேண்டும். இதற்குத் தீர்வாக வான்வழிப் போக்குவரத்தைக் கண்டறிந்தார். உத்தராகண்ட் முதல்வர் ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பேட்டரி மற்றும் ப்ரொபெல்லர் கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்ரோன் போன்ற பல சுழலிகள் மூலம் மேலெழுந்து செல்லும். இதைக் கண்டுபிடிக்க அவருக்குப் பத்தாண்டுகள் எடுத்தன. கடந்த மாதம் அல்மோரா மாவட்டத்தின் ராணுவ ஹெலிபேடில் மாதிரி வாகனத்தின் டெஸ்ட் ரைடிங் நடைபெற்றுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் உடனிருந்துள்ளனர்.
விற்பனைக்கு அனுமதி வழங்கும் முன்பு பல விஷயங்கள் உறுதி செய்ய வேண்டும். தொடர்ச்சியான சோதனைகளில் பறப்பதின் நிலைத்தன்மையை சோதிக்க வேண்டும். பேட்டரி செயல்திறன், பறக்கும் நேரம், பயணத்தூரம் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். மனிதரை ஏற்றிச் செல்லத் தேவையான விமானப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை வடிவமைக்க வேண்டும். பராமரிப்புச் செலவு, அவசர நிலைப் பாதுகாப்பு போன்ற நடைமுறைச் சிக்கல்களுக்கு தெளிவான தீர்வுகள் வேண்டும்.
குறைந்த வளங்களுடன் ரவி தம்தாவின் தனிநபர் பறக்கும் மின்சார வாகன இந்தியத் தொழில்நுட்ப முயற்சி பாராட்ட வேண்டியது.



