Trending - கட்டுரைகள்

தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

சியோல், அக். 25: தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA) சார்பில், முதல் உலகளாவிய கொரியா–தமிழ் தொடர்புகள் ஆய்வு மாநாடு (ICKTS 2026), அக். 20-ஆம் தேதி இணையவழியிலும், அக். 25-ஆம் தேதி சியோலிலும் நடைபெற்றது. இந்தியா, தென் கொரியா, செக் குடியரசு, மலேசியா, ஹாங்காங், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 45 ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் கல்வியாளர்களும் மூத்த ஆய்வறிஞர்களுக்கும் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ‘கொரியா–தமிழ் ஆய்வுகள்’ நூல் வெளியிடப்பட்டது. SKTRA தலைவர் பேராசிரியர் செ. ஆரோக்கியராஜ் முதல் பிரதியை வெளியிட, மருத்துவர் மரியா லீ பெற்றுக்கொண்டார். தமிழ்–கொரியப் பண்டைய கடல்சார் வணிகம், மொழியியல் ஒற்றுமைகள், பண்பாட்டுத் தொடர்புகள் குறித்த ஆய்வுகள் நூலில் இடம்பெற்றுள்ளன. கவிஞர் சகாய டர்சியூஸ் பீ பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் செ. ஆரோக்கியராஜ், முனைவர் தே. ஞானராஜ் ஆகியோர் இணைப் பதிப்பாசிரியர்களாகவும் செயல்பட்டனர். சிபி பதிப்பகம் நூலை வெளியிட்டது.

தமிழ் மரபு மற்றும் கிழக்காசிய ஆய்வுகளுக்கான பங்களிப்பைப் பாராட்டி, முனைவர் நா. கண்ணனுக்கு ‘தமிழ் மரபுக் காவலர் விருதும்’, ஹன்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஹரிபாலன் பெருமாள்சாமிக்கு ‘தமிழ் உறவுப் பாலம் விருதும்’ வழங்கப்பட்டன. இருவருக்கும் சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

மாநாட்டு ஒருங்கிணைப்புச் செயலாளராகக் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ-யும், இணை ஒருங்கிணைப்புச் செயலாளர்களாகப் பேராசிரியர் செ. ஆரோக்கியராஜ், முனைவர் தே. ஞானராஜ், திருமதி சாந்தி பிரின்ஸ் ஆகியோரும் செயல்பட்டனர். தென் கொரியா தமிழ்ச் சங்கத் தலைவர் எட்வின் ஜோசப் மற்றும் தன்னார்வலர்களாகப் பணியாற்றிய பாலமுரளிகிருஷ்ணன், சுவாமி ராஜன், ஹேமநாதன், பிரான்சிஸ் ஜெவல்சன், ஆனந்த், சிவா, நோரா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

“இந்த மாநாடு இந்தியா–தென் கொரியா இடையிலான கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பையும் உறவுகளையும் வலுப்படுத்தும்” என்று SKTRA தலைவர் பேராசிரியர் செ. ஆரோக்கியராஜ் தெரிவித்தார்.

தொடர்புக்கு: sktraatkorea@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *